செய்திகள்

அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணித்த கட்சிகள் விவசாயிகள் பிரச்சினையில் அக்கறை இல்லாதவர்கள்: திருநாவுக்கரசர்

Published On 2016-10-28 10:04 IST   |   Update On 2016-11-02 14:29:00 IST
காவிரி பிரச்சனையில் தி.மு.க. கூட்டிய சர்வகட்சி கூட்டத்தை புறக்கணித்த கட்சிகள் விவசாயிகளுக்கு துரோகம் செய்துள்ளார்கள் என்று திருநாவுக்கரசர் கூறினார்.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் மாநில காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி பிரச்சனையில் உச்சநீதிமன்றம் மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டுள்ளது. இதை மத்திய அரசு எதிர்க்கிறது. தமிழக அரசு இப்பிரச்சனையில் அனைத்து கட்சியினருடன் ஆலோசனை நடத்தவில்லை. எனவே விவசாயிகளின் வாழ்வாதாரம் பிரச்சினையாக உள்ள இதை சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தினார்.

இதில் பல்வேறு அரசியல் கட்சியினர், விவசாய சங்கங்கள் கலந்து கொண்டார்கள்.

கூட்ட முடிவில் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக ஏற்படுத்த வேண்டும். டெல்டா விவசாயிகளுக்கு நிவாரணமாக ரூ.30 ஆயிரம் வழங்கிட வேண்டும். தமிழக அரசு உடனடியாக அவசரமாக சட்டமன்றத்தை கூட்ட வேண்டும். அரசு தலைமையில் அனைத்து அரசியல் கட்சியினர் விவசாய சங்க பிரதிநிதிகளை அழைத்து குடியரசு தலைவர், பிரதமரை நேரில் சந்தித்து அழுத்தம் தரவேண்டும் போன்ற தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளோம்.

இதை 3 மாதத்திற்குள் அரசு நிறைவேற்றாவிட்டால் மீண்டும் அனைத்து கட்சியினர் கூடி முடிவு எடுப்போம். இதில் கலந்து கொள்ளாத அரசியல் கட்சிகள் விவசாயிகள் பிரச்சனையில் அக்கறை இல்லாதவர்கள். தி.மு.க. நடத்திய கூட்டம் என்பதால் பங்கேற்கவில்லை என்று குறை கூறுவது தவறு ஆகும். விவசாயிகள் நலனில் அக்கறை உள்ளவர்கள் பங்கேற்றிருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராமசாமி எம்.எல்.ஏ. உடன் இருந்தார்.

Similar News