செய்திகள்

தீவைத்து கொளுத்தப்பட்ட தமிழக வாகனங்களுக்கு கர்நாடக அரசு நஷ்டஈடு வழங்க வேண்டும்: வாசன் பேட்டி

Published On 2016-09-14 14:25 IST   |   Update On 2016-09-15 17:10:00 IST
தீவைத்து கொளுத்தப்பட்ட தமிழக வாகனங்களுக்கு கர்நாடக அரசு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
கடலூர்:

த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் இன்று கடலூரில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி நீர் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதனை அமல்படுத்தவிடாமல் தடுக்க வேண்டும் என நினைத்து கர்நாடகாவில் கலவரத்தில் ஈடுபடுகிறார்கள்.

தமிழர்களின் வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. தமிழர்களும் பல்வேறு இடங்களில் தாக்கப்பட்டுள்ளனர். கர்நாடக கலவரத்தில் தமிழர்களின் உடமைகள் ரூ.100 கோடி அளவில் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு கர்நாடக அரசு நஷ்டஈடு வழங்க வேண்டும். கர்நாடகத்தில் ஏற்பட்ட கலவரத்துக்கு மத்திய அரசு மற்றும் கர்நாடக, தமிழக அரசுகளின் மெத்தனப்போக்கே காரணம்.

விவசாயிகள் தான் மக்களின் உயிர்நாடி. விவசாயிகளின் ஜீவாதார பிரச்சனையை தீர்க்கும் வகையில் மத்திய அரசு நடுநிலையோடு செயல்பட வேண்டும். கர்நாடக, தமிழக முதல்வர்களை பிரதமர் மோடி அழைத்து பேச வேண்டும். கர்நாடகம், தமிழகம் இடையே நல்லுறவு ஏற்படும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் கூட்டணி பற்றி அறிவிக்கப்படும். வருகிற 16-ந் தேதி அனைத்து விவசாய சங்கங்கள் மற்றும் வணிகர் சங்கங்கள் சார்பில் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது. இதில் த.மா.கா. பங்கேற்கும்.

உமாபாரதி, சதானந்தகவுடாவின் பேச்சு கர்நாடகாவுக்கு சாதகமாக உள்ளது. காழ்ப்புணர்ச்சியோடு அவர்கள் செயல்படுகிறார்கள். பிரதமர் மோடி அவர்களை கண்டிக்க வேண்டும். கலவரத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம் என்று கர்நாடக முதல்வர் கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News