செய்திகள்

தேர்தல் விதி மீறல் வழக்கு: பண்ருட்டி கோர்ட்டில் திருமாவளவன் ஆஜர்

Published On 2016-07-18 12:15 IST   |   Update On 2016-07-18 14:43:00 IST
தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசாரம் செய்ததாக திருமாவளவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக இன்று காலை 10.20 மணி அளவில் பண்ருட்டி கோர்ட்டில் திருமாவளவன் ஆஜரானார்.
பண்ருட்டி:

2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில்போது, பண்ருட்டி தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசாரம் செய்ததாக  பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், திராவிடர் இயக்க தமிழர் பேரவை  தலைவர் சுப.வீரபாண்டியன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், முன்னாள் எம்.பி. கே.எஸ்.அழகிரி, நடிகர் நெப்போலியன், சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் மீது பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு பண்ருட்டி 1-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த 13-ந்தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, டாக்டர் ராமதாஸ் கோர்ட்டில் ஆஜரானார்.

வழக்கை விசாரித்த நீதிபதி சரவணபாபு 18-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும் அன்றைய தினம் டாக்டர் ராமதாஸ், திருமாவளவன், நெப்போலியன் உள்பட 7 பேரும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்நிலையில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இன்று காலை 10.20 மணி அளவில் பண்ருட்டி கோர்ட்டில் ஆஜரானார். அப்போது விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் பண்ருட்டி கோர்ட்டு முன்பு திரண்டனர். இதனால் பண்ருட்டி கோர்ட்டு வளாகத்திலும், முக்கிய சாலைகளிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், முன்னாள் எம்.பி. கே.எஸ்.அழகிரி, சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோரும் பண்ருட்டி கோர்ட்டில் இன்று ஆஜரானார்கள்.

Similar News