தேர்தல் தோல்வி பயத்தில் ஜெயலலிதா மக்களை சந்திக்கிறார்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி
சிதம்பரம்:
தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று சிதம்பரம் வந்தார். நிருபர்களிடம் அவர் கூறியதாவது:–
கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளிலும் தி.மு.க– காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறுவதுடன் தமிழகம் முழுவதும் வெற்றி பெறுவது உறுதி. மக்கள் பூரண மது விலக்கை வர வேற்கிறார்கள். அதனை கருணாநிதி ஆட்சி அமைத்தவுடன் நிறைவேற்றுவார்.
மேலும் விவசாயகடன், கல்வி கடன் ரத்து என்பது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
ஜெயலலிதா கடந்த 5 ஆண்டு காலத்தில் பால், பஸ், மின் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தி உள்ளார்.
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, கடலூர், காஞ்சிபுரம் பகுதி மக்களை நேரில் சென்று சந்திக்காத ஜெயலலிதா தற்போது தேர்தல் தோல்வி பயத்தில் மக்களை நேரில் சென்று சந்திக்கிறார்.
ஆனால் மக்கள் அவர் மீது கடும் கோபத்தில் உள்ளனர். அதனை தேர்தலில் கண்டிப்பாக காட்டுவார்கள். அம்பத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் அ.தி.மு.க.வினரால் தாக்கப்பட்டது கண்டிக்கதக்கது.
தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் மீது உள்ள கோபத்தில் தான் அ.தி.மு.க. வேட்பாளர்களை மக்கள் தொகுதிக்குள் அனுமதிக்க மறுக்கிறார்கள்.
பிரசாரத்தின் போது விஜயகாந்த் கண்டபடி தாக்குவதால்தான் வைகோ, திருமாவளவன் தலைப்பாகை அணிந்துள்ளனர்.
தே.மு.தி.க. எங்கள் கூட்டணிக்கு வராததால் எங்கள் தலை தப்பியது. என் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை நான் சட்டப் படி எதிர்கொள்வேன். அதே சமயம் கவர்னரையும் வழக்கில் குறுக்கு விசாரணை செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.