லைஃப்ஸ்டைல்
இனிமையாக வாழ.. எல்லாவற்றையும் பெற...

இனிமையாக வாழ.. எல்லாவற்றையும் பெற...

Published On 2021-09-04 06:26 GMT   |   Update On 2021-09-04 06:26 GMT
கணவன் - மனைவி இருவரும் அலுவலகத்திற்கு செல்வதற்கு ஆளுக்கொரு வாகனம், பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி வைக்க மற்றொரு வாகனம் இதெல்லாம் குடும்ப பட்ஜெட்டை எகிற வைத்து விடும்.
இன்றைய காலகட்டத்தில் வீட்டு செலவுகள் பெருமளவு அதிகரிக்க தொடங்கிவிட்டது. அதனை சமாளிக்க கணவனும் - மனைவியும் வேலைக்கு செல்ல வேண்டிய நிர்பந்தமும் ஏற்பட்டு விட்டது. அப்படி இரு வருமானம் வந்த பிறகும் சேமிப்பு என்பது சிரமமான விஷயமாகவே இருக்கிறது. மாதக்கடைசியில் வரவுக்கும், செலவுக்கும் இடையே பெரும் போராட்டமே நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் ஒவ்வொரு குடும்பத்திலும் அத்தியாவசிய செலவுகள் அதிகரிப்பதுதான். பல குடும்பங்களில் மாத பட்ஜெட்டில் துண்டும் விழுந்துவிடுகிறது.

பொதுவாக குடும்ப செலவுகளில் போக்குவரத்து செலவு முக்கியமானதாக இருக்கிறது. சொந்தமாக வாகனம் வைத்திருப்பவர்கள் எரிபொருளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டியுள்ளது. அந்த செலவை குறைக்க அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் சொந்த வாகனத்தை உபயோகிக்க வேண்டும். மற்ற தேவைகளுக்கு பொது போக்குவரத்தை பயன்படுத்துவது நல்லது.

கணவன் - மனைவி இருவரும் அலுவலகத்திற்கு செல்வதற்கு ஆளுக்கொரு வாகனம், பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி வைக்க மற்றொரு வாகனம் இதெல்லாம் குடும்ப பட்ஜெட்டை எகிற வைத்து விடும். அதுபோல தொலைதூர பயணத்திற்கு சொந்த வாகனத்தை பயன்படுத்துவதாலும் செலவு அதிகரிக்கும். அதற்கு பஸ், ரெயில் போக்குவரத்தை நாடுவது செலவை குறைக்கும்.

நிறைய வீடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட சொந்த வாகனங்கள் இருக்கின்றன. சொந்தமாக பெரிய வீடு கட்டி குடியிருந்தாலோ, வாடகை வீட்டில் வசித்தாலோ வீட்டுக்கு முன்பு இரண்டு கார்கள், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தி இருப்பதை கவுரவமாக பார்க்கிறார்கள். அவை பார்ப்பதற்கு அழகாகத்தான் இருக்கும். ஆனால் அது தேவையா? என்று சிந்தித்து பாருங்கள். ‘வாகனம் அடுத்தவர்கள் உங்களை மதிப்பதற்கு அல்ல. அத்தியாவசியத்திற்கு தேவையானது’ என்பதை மனதில் நிறுத்தி வாகனங்களின் எண்ணிக்கையை குறையுங்கள். பயனற்ற நிலையில் தேவைக்கு அதிகமாக இருக்கும் வாகனங்களை விற்பது நல்லது. அதன் மூலம் பணம் வரும். பராமரிப்பு செலவும் குறையும். வருடந்தோறும் செலவிடப்படும் இன்சூரன்ஸ் தொகையும் மிச்சமாகும்.

இப்போதெல்லாம் எங்கு பார்த்தாலும் போக்குவரத்து நெருக்கடி இருக்கிறது. ஒரே இடத்தில் 15 நிமிடங்கள் முதல் அரை மணி நேரம் வரை சொந்த வாகனத்தில் காத்திருக்க வேண்டியிருக்கிறது. அந்த மாதிரி சூழ்நிலையில் வாகனத்தை ‘ஆப்’ செய்வது எரிபொருளை மிச்சம் பிடிக்க உதவும். ஒரே அலுவலகத்திலோ அல்லது பக்கத்து அலுவலகங்களிலோ பணி புரிபவர்கள் தங்களுக்குள் நட்பு வட்டத்தை உருவாக்கிக்கொண்டு ஒரு வாரம் ஒருவருடைய வாகனத்தில் பணிக்கு செல்லலாம். மறு வாரம் மற்றொருவர் வாகனத்தில் பயணிக்கலாம். அப்படி இருவரும் ஒரே வாகனத்தில் பயணிக்கும்போது எரிபொருள் செலவு குறைவதோடு நட்பும் மேம்படும்.

அலுவலகம் செல்லும் நிறைய பேர் வீட்டில் இருந்து கைவீசியபடி செல்ல விரும்புகிறார்கள். ஏதாவதொரு ஓட்டலில் மதிய உணவை சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். தனியாக சாப்பிட செல்ல விரும்பாமல் துணைக்கு இன்னொருவரையும் அழைத்து சென்று விடுகிறார்கள். இதனால் செலவு அதிகமாகும். முடிந்த அளவு வீட்டில் இருந்து மதிய உணவை எடுத்து செல்லும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

குடும்பத்துடன் சேர்ந்து வெளியூர் பயணங்கள் செல்லும்போது முடிந்த அளவு எல்லோருக்குமான உணவை கையோடு எடுத்து செல்வது நல்லது. அதன் மூலம் ஓட்டல் எங்கு இருக்கிறது என்று தேடி அலைவது மிச்சமாகும். பணமும் மிச்சமாகும். ஓட்டல் உணவு உடலுக்கு ஒத்துக்கொள்ளாமல் போனால் சிகிச்சைக்கு பணம் செலவழிக்க நேரிடும்.

தொலைதூர பயணம் செல்பவர்கள் தண்ணீர் பருகுவதற்காக பணத்தை தண்ணீராக செலவிடுகிறார்கள். வாகனங்களை நிறுத்தும் இடங்களிலெல்லாம் மினரல் வாட்டர் வாங்கி பருகுகிறார்கள். மொத்தமாக எவ்வளவு வாங்கி யிருப்பார்கள் என்று கணக்கு பார்த்தால் அதற்கே பெருந்தொகை செலவாகி இருக்கும். சாலையோர பயணத்தில் பார்க்கும் இடங்களிலெல்லாம் வாங்கும் பாட்டில் தண்ணீர் சுகாதாரமானதாக இருப்பதில்லை. வீட்டில் கொதிக்க வைத்து ஆற வைத்த நீரை கொண்டு செல்வதன் மூலம் ஆரோக்கியத்தை பேணலாம். பெருமளவு பணத்தையும் மிச்சப்படுத்தலாம். ஓட்டல் உணவுகளை சாப்பிடும் சூழல் வரும்போது புதியவகை உணவுகளை தேவையை விட குறைவாக ஆர்டர் செய்து எல்லோரும் பகிர்ந்து சாப்பிடலாம். அதன் மூலம் எல்லோரும் எல்லா உணவு வகைகளையும் சாப்பிட்ட திருப்தி உண்டாகும். உணவும் வீணாகாது. பணமும் மிச்சமாகும்.

பெரும்பாலான வீடுகளில் சமையலுக்கான கியாஸ் அதிக அளவில் செலவிடப்படுகிறது. 4 பேர் கொண்ட குடும்பத்துக்கு சராசரியாக 35 நாட்களுக்கு ஒரு சிலிண்டர் போதுமானது. அதற்கு மேல் கியாஸ் செலவானால் தேவைக்கு அதிகமாக கியாஸ் பயன்படுத்துகிறீர்கள் என்று அர்த்தம். அதனை அளவோடு பயன்படுத்த வேண்டும். எண்ணெய்யில் பலகாரங்கள் தயார் செய்யும்போது கடைசி பலகாரத்தை சுட்டெடுக்கும் வரை ஸ்டவ் அடுப்பு எரிந்து கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. நான்கைந்து பலகாரங்கள் இருக்கும்போதே ஸ்டவ் அடுப்பை அணைத்துவிட்டு அந்த சூட்டிலேயே மீதி பலகாரங்களை வேகவைத்திட முடியும்.

உங்கள் வீட்டில் கியாஸ் அதிகமாக செலவாகுவதற்கு பிரிட்ஜில் இருந்து எடுத்த பொருட்களை உடனே சமைப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். அப்படி உடனே எடுத்து சமைக்கும்போது கியாஸ் நிறைய செலவாகும். உணவில் உள்ள சீதோஷண சமன்பாடும் சரி இல்லாமல் போய்விடும். பிரிட்ஜில் இருந்து எடுத்த பொருட்களை அரை மணி நேரம் வெளியே வைத்துவிட்டு குளிர் நீங்கிய பிறகு சமையலுக்கு பயன்படுத்துவதன் மூலம் கியாஸை மிச்சப்படுத்தி விடலாம்.

பிரஷர் குக்கர் பயன்படுத்தினால் கியாஸ் செலவு குறையும் என்பது உண்மைதான். ஆனால் சிறிய பொருளை வேக வைப்பதற்கு பெரிய அளவிலான குக்கரை பயன்படுத்தினால் எரிபொருள் செலவு அதிகமாகிவிடும். அதனால் வேக வைக்கும் பொருளுக்கு தகுந்த குக்கரை தேர்ந்தெடுங்கள்.

சில வீடுகளில் மதியம், இரவு என இரு வேளைக்கும் தனித்தனியாக சமைப்பார்கள். அந்த சமையலை ஒரே நேரத்தில் செய்து முடித்து சூட்டை தக்கவைத்துக்கொள்ளும் தெர்மல் குக்கரில் எடுத்து வைத்து கியாஸ் செலவை குறைக்கலாம். பிறந்தநாள், திருமண நாள் போன்ற விசேஷ நாட்களில் உறவினர்களையும், நண்பர்களையும் அழைத்து விருந்து உபசாரம் நடத்தும் வழக்கம் நிறைய பேரிடம் இருக்கிறது. அதற்கு விலை உயர்ந்த ஓட்டல் உணவுகளை ஆர்டர் செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள். ஓட்டல்களில் அந்த நிகழ்ச்சியையும் நடத்துகிறார்கள். அதற்கு பதிலாக வீட்டிலேயே விதவிதமாக சமைத்து பரிமாறினால் செலவு குறையும். அன்பும் பெருகும்.

வெளியூர்களுக்கு சுற்றுலா செல்லும்போது நிறைய பணம் செலவாகும். சரியான திட்டமிடுதல் மூலம் செலவை பெருமளவு குறைக்க முடியும். பயணம் செல்லும் இடம், அங்கு பார்க்க வேண்டிய இடங்கள், அங்கு கிடைக்கும் உணவு வகைகள், ஓட்டல்கள் பற்றிய தகவல்களை முன் கூட்டியே திரட்டி திட்டமிடுதலுடன் செயல்பட வேண்டும். அங்கு சென்று பார்த்துக்கொள்ளலாம் என்ற மனநிலையில் இருந்தால் செலவு தாறுமாறாக எகிறிவிடும். சீசன் நேரத்தில் பயணங்கள் செல்லும்போது செலவுகள் அதிகரிக்கும். ஏராளமான மக்கள் குறிப்பிட்ட ஒரே இடத்துக்கு செல்லும்போது கட்டணங்கள் தாறுமாறாக அதிகரித்துவிடும். சீசன் இல்லாத நேரத்தில் பயணத்தை திட்டமிடுவது நல்லது.

சுற்றுலா செல்லும்போது ஒருசிலரோடு செல்லாமல் குடும்ப நண்பர்கள், உறவினர்களுடன் சேர்ந்து செல்வது நல்லது. அப்படி சென்றால் செலவு குறையும். அவர்களுடன் சேர்ந்து உற்சாகமான மனநிலையில் அந்த இடங்களை சுற்றிப்பார்க்கவும் செய்யலாம். பயணங்களின்போது பெருமளவு ரொக்க பணத்தை கையில் எடுத்து செல்வது பாதுகாப்பாக இருக்காது. இஷ்டப்படி செலவு செய்யும் மன நிலை உருவாகிவிடும். அதனால் பணம் தண்ணீர் போல செலவாகிக்கொண்டே இருக்கும். குறைந்த அளவு பணத்தை எடுத்து செல்வதே நல்லது. அத்தியாவசிய தேவைகளுக்கு ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.

பிரிட்ஜ், வாஷிங் மிஷின் போன்ற வீட்டு உபயோக பொருட்களை வாங்கும்போது என்ன மாதிரி ஸ்டார் குறியீடு இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஸ்டார் குறியீடு கூடுதலாக இருந்தால் மின்சார செலவு குறையும். ஒரு ஸ்டார் கூடும்போது 10 முதல் 30 சதவீதம் வரை மின்சார செலவை குறைக்கலாம். இன்வெட்டர் டெக்னாலஜி உள்ள பொருட்கள் விலை கூடுதலாக இருந்தாலும் மின்சார செலவு குறைவாகத்தான் இருக்கும்.
Tags:    

Similar News