லைஃப்ஸ்டைல்
திட்டமிட்ட கடின உழைப்பு தேடி தரும் வெற்றி மகுடம்..

திட்டமிட்ட கடின உழைப்பு தேடி தரும் வெற்றி மகுடம்..

Published On 2021-08-17 07:25 GMT   |   Update On 2021-08-17 08:54 GMT
எல்லோருடைய வாழ்க்கையிலும் சின்ன சின்ன பிரச்சினைகள் அடிக்கடி தலைதூக்கிக்கொண்டேதான் இருக்கும். அதை பார்த்து துவண்டு போய்விடக்கூடாது.
வாழ்க்கையில்‌ வெற்றி தோல்வி என்பது சகஜம்‌. மிகப்‌ பெரிய வெற்றிகளை சாதித்தவர்கள்‌ தொடக்கத்தில்‌ தோல்விகளை சந்தித்தவர்கள்தான்‌. அவர்கள் தோல்வியால்‌ துவளாமல்‌ அதையே வெற்றியின்‌ படிக்கட்‌டுகளாக மாற்றிக்‌ கொண்டது தான்‌ அவர்களின்‌ வெற்றிக்கு காரணம்‌. உளவியல்‌ நிபுணர்‌களும்‌ அறிஞர்களும்‌ கூட தோல்‌விகள்‌ என்பது மிகப்பெரிய பாடங்களை கற்றுக்‌ கொடுக்கும் ‌நிகழ்வாகவே இருப்பதாக கூறுகிறார்கள்‌.

எனவே தோல்வியை எப்படி சமாளிப்பது என்பதையும்‌ அதை எப்படி வெற்றியின்‌ படிக்கட்‌டாக மாற்றிக்‌ கொள்வது என்பதை பற்றியும் ஆராய வேண்டும்‌. இதற்கு முதலில்‌ வெற்றி, தோல்வி இரண்டையும்‌ சமமாக பாவிக்கும்‌ மனோபாவம்‌ வேண்டும்‌. வெற்றி நாளை தோல்வியையும்‌, தோல்வி நாளைய வெற்றியையும் அழைத்து வரலாம்‌. அது அவரவர் செயல்படும்‌ விதத்தை பொறுத்தது.

தோல்வி அடைந்தவர்கள் முதலில்‌, தாங்கள்‌ அடைந்த தோல்வியால்‌ அன்றாட செயல்பாடுகள்‌ பாதிப்புக்குள்ளாமல்‌ பார்த்துக்‌கொள்ள வேண்டும்‌. இது கொஞ்சம்‌ சிரமமானதுதான்‌. நாம்‌ ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் வீழ்ந்து விட்டால்‌, அதில் இருந்து மீண்டு பழைய நிலைக்கு திரும்புவதற்கு கொஞ்ச நேரம்‌ தேவைப்‌படும்‌. நம்மை ஆசுவாசப்படுத்‌திக்‌ கொள்வதற்கு அந்த நேரத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

பழைய நிலைக்கு திரும்புவதற்கு பலவகையான காரணங்கள்‌ முட்டுக்‌கட்டையாக நிற்கும்‌. இதை தகர்ப்பதில்தான்‌ வெற்றியின் சூட்சுமமே அமைந்திருக்கிறது. சில மனிதர்கள்‌, தங்கள்‌ வாழ்க்கையில்‌ எப்‌போதும்‌ வெற்றிக்கு மேல்‌ வெற்றி பெறுவதும்,‌ சிலர்‌ நன்கு உழைத்தும் ‌தோல்வியின்‌ பிடியிலேயே நிரந்‌தரமாய்‌ குடியிருப்பதும்‌ நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம்‌. அவர்களின்‌ வாழ்க்கைமுறையை கூர்ந்து பார்த்தால்‌ காரணம்‌ புரிந்துவிடும்‌. தவறைத்‌ திருத்திக்‌கொள்ளாதது, திரும்பத்‌திரும்ப தவறு செய்துகொண்டே இருப்பது, சரியாக திட்டமிடாமல்‌ செயல்பட தொடங்குவது போன்றவை வளர்ச்சியை பாதிக்கும்‌ காரணிகள்‌.

சில கெட்ட பழக்கங்கள் ‌புத்திசாலி மனிதர்களைக்கூட தோல்வியிலேயே வீழ வைத்திருப்பதாக அறிஞர்கள்‌ கூறுகின்றனர்‌. ‘நல்ல திறமைசாலி தன்னிடம் உள்ள‌ முழு திறமையையும்‌ உணர முடியாமல்‌ போவதற்கும், சில வல்லுனர்களின்‌ திட்‌டங்கள்‌ சிதைந்து போவதற்கும்‌ அவர்களிடமுள்ள சில கெட்டபழக்கங்களே காரணம்’ என்பது உளவியலாளர்களின் கருத்தாக இருக்கிறது. எல்லோருடைய வாழ்க்கையிலும் சின்ன சின்ன பிரச்சினைகள் அடிக்கடி தலைதூக்கிக்கொண்டேதான் இருக்கும். அதை பார்த்து துவண்டு போய்விடக்கூடாது. வேறு எந்தவிதமான கவன சிதறலுக்கும் இடம் கொடுக்காமல் எதை சாதிக்க விரும்புகிறீர்களோ அதை நோக்கி உங்களின்‌ பயணம்‌ அமைய வேண்டும்‌.

இடையில் எதிர்கொள்ளும் தடங்கல்களை தவிடு பொடியாக்கும் போராட்ட குணம் கொண்டவர்களாக தங்களை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும். சூழல்களுக்கு ஏற்றபடி நம்‌ பழக்கவழக்கத்தை மாற்றிக்கொண்டு வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும்‌. ஏனெனில் தொடர்‌ வெற்றியை தன்வசமாக்குபவர்கள் பெரும்பாலும்‌ தங்களின்‌ செயல்பாடுகளைப்‌ பற்றி முன்கூட்டியே அறிந்திருப்பார்கள்‌. அதற்கேற்றபடி மாற்று திட்டங்களை கைவசம்‌ வைத்திருப்பார்கள்‌.

தோல்வியை துரத்துவதற்கு சில பழக்கங்களை கண்டிப்பாக பின்பற்றித்தான் ஆக வேண்டும்‌. ஏற்கனவே எதிர்கொண்ட தோல்விக்கான காரணங்களை கண்டுபிடித்து அவற்றை புறந்தள்ளுவதில்தான் வெற்றியே அமைந்திருக்கிறது. எதைப்பற்றியும்‌ நல்ல அபிப்‌பிராயம்‌ இல்லாதிருப்பது, எதிர்ப்புகளை கண்டு‌ துவண்டு போவது, அளவுக்கு அதிகமாக தம்மையே வருத்திக்‌கொள்வது, எப்போதும்‌ ஒருவித பயத்தில்‌ இருப்பது, வாழ்க்கை மீது ஈர்ப்பு இல்லாமல் இருப்பது, உணர்ச்சி வசப்பட்டு பிரச்சினைகளை சிக்கலானதாக மாற்றி விடுவது இவற்றுள் ஏதேனும் ஒன்று, இரண்டு விஷயங்களை எதிர்கொள்வது பலரின் தோல்விக்கு முக்கிய காரணமாகிவிடுகின்றன. இத்தகைய பாதிப்புகளை அனுபவித்தால் அதில் இருந்து உடனே மீண்டு வெளியே வாருங்கள். திட்டமிட்ட கடின உழைப்பே வெற்றி மகுடம் சூட்டும். அதனை நினைவில் கொண்டு செயல்பட்டாலே போதும். தோல்வியை தவிர்த்துவிடலாம்.
Tags:    

Similar News