லைஃப்ஸ்டைல்
பெண்களை போற்றுவோம்

பெண்கள் மேலும் மேன்மையடைய என்ன செய்யலாம்?

Published On 2020-05-13 04:57 GMT   |   Update On 2020-05-13 04:57 GMT
பெண் என்பவள் இயற்கையாகவே பிறருக்கு கொடுக்க கூடியவள். அன்பு, பாசம், நேசம், கருணை போன்ற அவளின் இயற்கை குணங்கள் அவளை கொண்டாட கொண்டாட பெரும் ஊற்றெடுக்கும்.
“உயிரைக் காக்கும்; உயிரினைச் சேர்த்திடும்;
உயிரினுக் குயிராய் இன்ப மாகிடும்
உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா!
ஊது கொம்புகள்; ஆடு களிகொண்டே
என்றார் பாரதியார்.

உங்களில் சிலருக்கு தோன்றலாம், “பெண்கள் நன்றாக முன்னேறி விட்டார்களே?” “எல்லா துறையிலும் சிறந்து விளங்குகிறார்களே” என்று. ஆனால் உண்மை நிலவரம் என்ன தெரியுமா?

வேர்ல்ட் எகனாமிக் போரம் என்ற சர்வதேச குழு ஒன்று சமீபத்தில் ஏறத்தாழ 149 நாடுகளில் ஒரு கருத்து கணிப்பு எடுத்தது. ஆண், பெண் என்று இருபாலரிடமும் பெண்களுக்கு படிக்கும் வாய்ப்பு; கல்வி பெற்ற பெண்களின் விகிதம்; பெண்களின் வேலை வாய்ப்பு; அரசியலில் பெண்கள் என்று வெவ்வேறு விவரங்கள் சேகரிக்கப்பட்டன. இதில் கிடைத்த புள்ளி விவரங்கள் தலைசுற்ற வைக்கின்றன.

பாலின சமத்துவம் எனப்படும் ஆண், பெண் இருபாலரும் ஒரு சமநிலை அடைய உலக அளவில் இன்னும் 108 வருடங்கள் ஆகும் என்கிறது இந்த ஆய்வு. பின்லாந்து போன்ற ஒருசில நாடுகளில் தான் இந்த இடைவெளி மிக குறைவாக இருக்கிறது. ஆனால் பெரும்பாலான நாடுகளில் இந்த இடைவெளி மிக அதிகம் என்பது தான் நிதர்சனமான உண்மை.

அதிலும் அரசியலில் பெண்கள் இருப்பது மிக மிகக் குறைவாகத்தான் இருக்கிறது. பல இடங்களில் பல துறைகளில் பெண்களால் இன்னும் ஊடுருவ இயலவில்லை தான்.
இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் கண்டிஷனிங் ஆப் த மைண்ட் தான். சிறு வயது முதல் நாம் எதைக்கேட்டு, பார்த்து வளருகிறோமோ அது நம்மை அறியாமல் நம்முடைய யோசிக்கும் முறை ஆகிறது. பெண்கள் மிருதுவானவர்கள், அவர்களுக்கு எப்போதும் ஒரு துணை வேண்டும்.  யாரையாவது சார்ந்திருப்பவள், பண விஷயங்கள் புரியாது... இன்னும் பலபல உள்ளன. அனைத்தையும் பட்டியலிட இயலாது.

இவ்வாறாக சிறு வயது முதலே இது ஆண்கள் செய்யும் வேலை, அது பெண்கள் செய்யும் வேலை என்ற விதையை, பாகுபாட்டை விதைக்கிறோம். இது வளர்ந்து பெரிதாகும் போதும் தொடர்கிறது. வேலைக்கு செல்லும் மனைவியுடன், அம்மாவுடன் சேர்ந்து பாத்திரம் எல்லாம் துலக்க வேண்டாம். கடைசியாக “சாப்பிட்டியா?” என்று எப்போது கேட்டோம் என்று யோசித்துப் பாருங்கள். எவ்வாளவோ மாறியிருக்கிறோம் என்றாலும் இன்னும் பார்வையும் கோணமும் நிறைய மாற வேண்டும்.

அண்மையில் எங்கள் கல்லூரியில் “மாதரே ஜி 20” என்ற நிகழ்ச்சி ஒன்றை மகளிர் தினத்தை முன்னிட்டு நடத்தினோம். அதில் பல்வேறு துறையைச் சார்ந்த 22 பெண்களுக்கு அவர்களின் சாதனைக்காக விருது வழங்கப்பட்டது. அவர்கள் ஒவ்வொருவரின் கதையும் அவ்வளவு ஊக்கம் தருவதாக இருந்தது. இதில் மனிஷா என்ற 23 வயதே நிரம்பிய பெண்  கருணையின் மறு உருவம் எனச் சொல்லலாம். இவருடைய பவுண்டேஷன் மூலமாக தெருவில் வசிக்கும் ஆதரவற்ற முதியோருக்கு வைத்தியம் பார்த்து, முதியோர் இல்லத்தில் சேர்க்கும் பணியைச் செய்கிறார். இந்த இளம் வயதில் இத்தனை சகிப்புத்தன்மை, பொறுமை, நிதானம், அமைதி தன்னநலமற்ற தன்மை, இதையெல்லாம் எப்படி பெற்றார் என்பது மிகப்பெரிய ஆச்சரியம் தான்.

அதேபோல மகாபலிபுரத்தை சேர்ந்த கமலி என்ற பெண். இவர் தாய் ஒரு சிங்கிள் மதர். கமலி சிறு வயதில் ஸ்கேட்டிங்கில் ஆர்வம் காட்ட பலத்த  எதிர்ப்பிற்கு இடையில் ஆதரித்திருக்கிறார் கமலியின் தாய். 11 வயது நிரம்பிய அந்த குழந்தை ஸ்கேட்டிங் மட்டுமின்றி கடல் சர்பிங்கிலும் சர்வதேச அளவில் சாதித்துக் கொண்டிருக்கிறது. அந்த தாய் அன்று மேடையில் பேசியது என் காதில் இன்னும் ரீங்கரித்துக் கொண்டிருக்கிறது. ஒரு பெண் நினைத்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம். அவள் ஆசைப்படுவதை செய்ய உற்சாகப்படுத்துங்கள். உங்கள் விருப்பத்தை திணித்து அவர்களின் வளர்ச்சியை தடுக்காதீர்கள் என்று மிக அழகாக பேசினார்.

அப்புறம் சுபானு என்ற 16 வயது நிரம்பிய குழந்தை 250 தங்கப் பதக்கங்களைப் பெற்றிருக்கிறார். யோகாவில் ஐந்து முறை கின்னஸ் சாதனை செய்திருக்கிறார். மூன்று முறை உலக சாதனை செய்திருக்கிறார். பேச்சில் அவ்வளவு முதிர்ச்சி. கலையில் அவ்வளவு தேர்ச்சி.

பல இடர்களுக்கு இடையே சாதிக்கும் பெண்களுக்கு ஒரு சமூகம் என்ன செய்யலாம்? முடிந்தால் ஒரு கை கொடுத்து உதவலாம். இல்லையேல் தோள் தட்டி உற்சாகப்படுத்தலாம். அவர்களை பற்றி பிறரிடம் உயர்வாக பேசி கொண்டாடலாம். அதற்கெல்லாம் மனது இல்லையென்றால் ஒரு புன்னகை பூக்கலாம். அதற்கும் இஷ்டமில்லை என்றால் அவரை பற்றி புறம் பேசாமல் புண்படுத்தாமல், குறை கூறாமல் அமைதியாகவாது இருக்கலாம்.

பெண் பிள்ளைகளை குறைந்த பட்சம் முதுநிலை உயர்கல்வி வரை படிக்க வைக்க வேண்டும். கல்விதான் அறியாமையின் முதல் எதிரி. எந்த குடும்பத்தில் பெண்கள் அதிகம் படித்திருக்கிறார்களோ அந்தக் குடும்பம் குழப்பமின்றி செழிப்பாக திகழும். எனவே முதலில் அவர்களுக்கான மிக பெரிய சொத்தான, பிரிக்க இயலாத சொத்தான கல்வியை புகட்டுவோம்.

படித்தபின் பொருளாதார சுதந்திரம் பெற வழிவகுக்கும் வேலையை தேடிக் கொண்டு சற்றே தன்னம்பிக்கை பெறட்டும். பின்னர் மணமுடிக்கலாம். கல்வியும் பொருளாதார சுதந்திரமும் தான் ஓர் பெண்ணிற்கு பயமின்றி பயணிக்க உதவும் ஊன்றுகோல். இந்த பாலின சமத்துவ நிலையை அடைய நாம் ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து சிறு அளவில், முதலில் நம் வீட்டில், நம் தெருவில் ஆரம்பிக்க வேண்டும். நான் ஒருவன் மாறினால் உலகம் மாறிவிடுமா? என்று எண்ணாதீர்கள்.

ஒரு கதை சொல்லுகிறேன்... ஒரு கடற்கரை ஓரம் ஒரு குட்டி பையன் விளையாடிக் கொண்டிருக்கிறான். அப்போது ஓரு பெரிய அலை ஆயிரக்கணக்கான மீன்களை கரையில் தள்ளிவிட்டு செல்கிறது. மீன்கள் நீர் இன்றி துடிக்கின்றன. அதை பார்த்த சிறுவன் ஒவ்வொரு மீனாக  எடுத்து கடலுக்குள் சேர்க்கிறான். அந்த பக்கம் வந்த முதியவர் கேட்டார். டேய் பையா இங்கே ஆயிரம் மீன் தவிக்கிறது. உன் குட்டி கையால் நீ பத்து மீனைக்கூட காப்பாற்ற முடியாது. இதை எதற்குச் செய்து கொண்டு இருக்கிறாய் என்று கேட்டார். அந்த குழந்தை பட்டென்று சொன்னது, “நான் காப்பாற்றும் அந்த பத்து மீனுக்கு அது வாழ்வா? சாவா? என்ற வித்தியாசம் தானே தாத்தா” என்றது.

அப்படித்தான் நாம் ஒவ்வொருவரும் ஒரு சமூகப் பிரச்சினை, ஒரு மாற்றம் தேவைப்படுகிறது என்றால் அதைப் பற்றி அலசி பேசுகிறோம். அதிகார வர்க்கத்தை சாடுகிறோம். பிறகு அதை கடந்து யாராவது பார்த்து கொள்வார்கள், அது நம் வேலையில்லை என்று எண்ணி மறந்துவிடுகிறோம். மாற்றம் வேண்டுமெனில் அதை நீங்களும் நானும் தான் கொண்டு வரவேண்டும். நாம் எல்லாரும் சேர்ந்து தான் ஒரு சமூகம் ஆகிறோம். மாற்றம் என்பது ஒவ்வொரு தனி மனிதனும் எடுக்க வேண்டிய கூட்டு முயற்சி.

ஆக பெண்கள் மேலும் மேன்மையடைய என்ன செய்யலாம்? பெண்களை கொண்டாடுங்கள். உங்கள் தாயை மனைவியை, சகோதரியை, தோழியை, மகளை கொண்டாடுங்கள். எதை நாம் அதிகம் கொண்டாடுகிறோமோ அது வீரியம் பெறுகிறது. பெண் என்பவள் இயற்கையாகவே பிறருக்கு கொடுக்க கூடியவள். அன்பு, பாசம், நேசம், கருணை போன்ற அவளின் இயற்கை குணங்கள் அவளை கொண்டாட கொண்டாட பெரும் ஊற்றெடுக்கும். உலகம் மிக அழகான இடமாக மாறும்.

மனிதனுள் ஆண் என்ன? பெண் என்ன? வாருங்கள் பெண்மையை போற்றிக் கொண்டாட.

தொடர்புக்கு: director@kveg.in
insta: dr.meenakshiannamalai
Tags:    

Similar News