லைஃப்ஸ்டைல்
சகிப்புத்தன்மை அவசியம்

சகிப்புத்தன்மை அவசியம்

Published On 2020-05-07 07:33 GMT   |   Update On 2020-05-07 07:33 GMT
சகிப்பு தன்மை என்பது ஒவ்வொருவரது மனதிலும் இருந்து எழும் வாழ்வியல் நெறி சகிப்பு தன்மையை மறந்த நாடுகள் மண்ணாசையால் ஆயுதம் ஏந்தி அமைதியை தொலைத்திருக்கின்றன.
பல்வேறு சாதி, மதம், இனம் கலாசாரம் என பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்வதோடு அதனை போற்றுவதும் தான் சகிப்பு தன்மை நான், நானாக இருப்பதும், நீ நீயாக இருப்பதும், அதே நேரத்தில் ஒருவரை ஒருவர் அங்கீகரிப்பதும், ஏற்றுக்கொள்வதே சகிப்புத்தன்மையின் அடையாளம். பன்முகத்தன்மை என்பது ஜனநாயகத்தை ஏற்று கொள்வது ஆகும். ஒற்றைப்பண்பை வலியுறுத்துவது வன்முறை என்பது நோபல் பரிசு பெற்ற அமர்தியா சென்னின் கருத்து. சகிப்புத்தன்மை என்பது பலவீனத்தின் அறிகுறியல்ல. பலத்தின் அடையாளம்.

சகிப்பின்மையால் மொழி, மத, இன, சிறுபான்மையினர், இடம் பெயருவோர், அகதிகள் வெளிநாட்டுக்குடியேறிகள் என பல்வேறு தரப்பினர் தொடர்ந்து பாதித்து வருவதை காண்கிறோம். சகிப்பின்மை அமைதிக்கும், மக்களாட்சிக்கும் பெரும் இடையூறாக இருப்பதுடன் சமூக மேம்பாட்டுக்கும் தடையாக உள்ளது.

அமெரிக்காவின் பூவகுடிகள் கொன்று குவிக்கப்பட்டதும், ஆஸ்திரேலியாவின் பழங்குடியினர் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டதும், கருப்பர்களை வெள்ளையர்கள் அடக்கியாண்டதும் இலங்கையில் சிங்களர் தமிழர்களை படுகொலை செய்ததும் இன அடிப்படையிலான சகிப்பின்மைக்கு உதாரணம்.

மொழி அடிப்படையில் தமிழர்கள் சகிப்பு தன்மை மிக்கவர்கள். தமிழக முதல் அமைச்சர்கள் பட்டியலை பார்த்தாலே அது விளங்கக்கூடும். “பொறுத்தார் பூமி ஆள்வார்“. “அகழ்வாரை தாங்கும் நிலம்“ போன்ற வார்த்தைகளை நம்முள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் பதியம் போட்டு வருபவர்கள் நம் முன்னோர்கள். எங்கு சகிப்பு தன்மை இல்லையோ; அங்கு ஜனநாயகம் வளராது.

புத்தர், மகாவீரர் போன்ற ஞானிகளைத் தந்த நம் நாட்டுக்கு சகிப்புத்தன்மை என்ற நெறியை உலக அளவில் எடுத்து செல்லும் தகுதியும் கடமையும் உண்டு. சகிப்பின்மையால் ஏற்பட்ட பல ஆண்டுகால வெறுப்பை போக்குவதற்காக காந்திஜி அளவிற்கு இந்திய வரலாற்றில் வேறு எவரும் முயற்சி செய்ததாக தெரியவில்லை. வெறுப்பதும், கொந்தளிப்பதும் ஒன்றும் அத்தனை கடினமல்ல. ஆனால் உண்மையிலேயே அதற்கப்பால் செல்வதும், நேசிப்பதும், அத்தனை கடினமல்ல. அதை காந்திஜி செய்தார்.

சகிப்பு தன்மை என்பது ஒவ்வொருவரது மனதிலும் இருந்து எழும் வாழ்வியல் நெறி சகிப்பு தன்மையை மறந்த நாடுகள் மண்ணாசையால் ஆயுதம் ஏந்தி அமைதியை தொலைத்திருக்கின்றன. மத, இன, சாதி, கலாச்சார ரீதியான சகிப்புத்தன்மையானது உயிர்களை பலிவாங்குவதம், அகதிகளை உருவாக்குவதுமாக இருக்கிறது. அவல ஓலம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறது. ஒதுக்கலும், ஒடுக்குதலும் சகிப்பு தன்மையின் அடையாளம். அதை ஒதுக்குவோம்.

வாழ்க்கையின் அடிப்படை உணர்ச்சிகளான அன்பு, நட்பு, ஈதல், சான்றாண்மை உள்ளிட்ட பண்புகளுடன் கல்வியறிவும் பெற்று சகிப்பு தன்மையுடன் வாழ முடிவெடுப்போம். எப்போது சகிப்புத்தன்மையை மேற்கொள்கிறோமோ, அப்போதே வியக்கத்தக்க வகையிலான வாழ்க்கையை நோக்கி நாம் பயணிக்க தொடங்கி விடுவோம். ஏனெனில், சகிப்புத் தன்மையே மானுடத்தின் மேன்மை.

“சகிப்பு தன்மை என்பது பலவீனத்தின் அறிகுறியல்ல;

பலத்தின் அடையாளம்.“
Tags:    

Similar News