லைஃப்ஸ்டைல்
உங்கள் ‘பாஸ்வேர்டு’ வலிமையானதா?

உங்கள் ‘பாஸ்வேர்டு’ வலிமையானதா?

Published On 2020-05-06 03:54 GMT   |   Update On 2020-05-06 03:54 GMT
உங்கள் பாஸ்வேர்டு பாதுகாப்பானதாக இருப்பதை உறுதி செய்து கொள்ள அது வலுவானதாக இருக்க வேண்டும் என்று வல்லுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பாஸ்வேர்டு விஷயத்தில் அலட்சியம், அறியாமை இரண்டுமே ஆபத்தானது. ஏனெனில் இவை ஹேக்கர்களின் வேலையை இன்னும் சுலபமாக்குகின்றன. பாஸ்வேர்டு திருட்டு தொடர்பாக அடிக்கடி வெளியாகும் செய்திகள் மூலம் இதை உணரலாம். இணைய அமைப்பில் உள்ள ஓட்டைகளில் நுழையும் சாமர்த்தியம் ஹேக்கர்களுக்கு கைகொடுத்தாலும், உண்மையில் பாஸ்வேர்டு பயன்பாடு தொடர்பான அடிப்படை விழிப்புணர்வு இல்லாமலிருப்பது, அப்படியே விழிப்புணர்வு இருந்தாலும் அதை கடைப்பிடிப்பதில் அலட்சியம் காட்டும் இணையவாசிகளின் போக்கே ஹேக்கர்களுக்கு அனுகூலமாக அமைந்து விடுகிறது.

உங்கள் பாஸ்வேர்டு பாதுகாப்பானதாக இருப்பதை உறுதி செய்து கொள்ள அது வலுவானதாக இருக்க வேண்டும் என்று வல்லுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர். வழக்கமான பதங்களைப் பயன்படுத்த வேண்டாம், அகராதி சொற்கள் வேண்டாம், குறைந்தது எட்டு எழுத்துக்களாவது இருக்க வேண்டும் என நல்ல பாஸ்வேர்டுக்கான முக்கிய அம்சங்களையும் எடுத்துக்கூறி வருகின்றனர். பலரும் இவற்றை அறிந்திருப்பதில்லை. அப்படியே அறிந்திருந்தாலும், தங்கள் பாஸ்வேர்டுகளை வலுவாக்கி கொள்வதில் ஆர்வம் காட்டாமல் இருக்கின்றனர். அதைவிட மோசமாக, ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனி பாஸ்வேர்டு தேவை எனும் அறிவுரையை காற்றில் பறக்க விட்டு, ஒரே பாஸ்வேர்டை எல்லா சேவைகளிலும் பயன்படுத்தும் வழக்கமும் பலருக்கு இருக்கிறது.

இப்படி பாஸ்வேர்டு சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வல்லுனர்களும், ஆய்வாளர்களும் ஓயாமல் உழைத்து, புதிய தீர்வுகளை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில், அமெரிக்காவின் கார்னகி மெலான் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மற்றும் சிக்காகோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இணைந்து, பாஸ்வேர்டு வலுவானதா? என பரிசோதித்து சொல்லும் புதிய சேவை ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

இணையவாசிகள் தாங்கள் உருவாக்க விரும்பும் பாஸ்வேர்டை இந்த சேவைக்கான தளத்தில் ‘டைப்’ செய்தால், அது எந்த அளவு வலுவானது என்று உணர்த்தப்படுகிறது. இந்த வகை சேவை ஒன்றும் புதிதல்லதான். பாஸ்வேர்டு வலுவானதா என்பதைக் கண்டறிந்து சொல்லும் இந்த வகை சேவை ‘பாஸ்வேர்டு மீட்டர்’ எனக் குறிப்பிடப்படுகின்றது. இதற்கென தனியே இணையதளங்களும் இருக்கின்றன. இவ்வளவு ஏன், கூகுள் உள்ளிட்ட இணைய சேவைகள் இது போன்ற பாஸ்வேர்டு மீட்டரை தங்கள் பாஸ்வேர்டு உருவாக்க பக்கத்திலேயே ஒருங்கிணைத்துள்ளன. புதிய பாஸ்வேர்ட்டை தட்டச்சு செய்யும் போதே, அது எந்த அளவு வலுவானது என உணர்த்தப்படுகின்றன.

உங்கள் பாஸ்வேர்டு பலவீனமானது, அதை மேலும் வலுவாக்க முயற்சி செய்யுங்கள் எனும் செய்தியை தெரிவிப்பதே பாஸ்வேர்டு மீட்டரின் நோக்கம். ஆனால் இந்த மீட்டர்கள் எல்லாவற்றுக்குமே ஒரு பொதுவான பலவீனம் உண்டு. இவை பாஸ்வேர்டுகள் பலவீனமானவை என்று சொல்கின்றனவே தவிர, வலுவான பாஸ்வேர்டுகளை உருவாக்க என்ன செய்ய வேண்டும் என்று வழிகாட்டுவது இல்லை. ஒரு பாஸ்வேர்டை உருவாக்கும் போது அது, வலுவானதா என சோதித்துப் பார்ப்பது நல்லதுதான். ஆனால் அது நோஞ்சான் பாஸ்வேர்டு என்று தெரிந்தால், பயில்வான் பாஸ்வேர்டை உருவாக்குவது எப்படி என்று தெரிய வேண்டும் அல்லவா? இந்தக் குறையை போக்கும் வகையில் கார்னகி மெலான் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் உருவாக்கிய புதிய பாஸ்வேர்டு மீட்டர் சேவை அமைந்துள்ளது. இந்தச் சேவை, புதிய பாஸ்வேர்டு வலுவானதா என்பதை உணர்த்துவதோடு, அதற்கான காரணங்களையும் புரிய வைக்கிறது. அதோடு பாஸ்வேர்டை வலுவாக்குவதற்கான ஆலோசனைகளையும் வழங்குகிறது.
Tags:    

Similar News