லைஃப்ஸ்டைல்
குடும்ப வன்முறைக்கு உள்ளாகும் பெண்கள்

குடும்ப வன்முறைக்கு உள்ளாகும் பெண்களுக்கு உதவ போன் எண்கள்

Published On 2020-05-04 04:10 GMT   |   Update On 2020-05-04 04:10 GMT
குடும்ப வன்முறைகளுக்கு உள்ளாகும் பெண்கள் 181, 1091, 122 போன்ற உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

உயிர்க்கொல்லி நோயான கொரோனா நோய் தொற்றினை கட்டுப்படுத்தி ஒழிக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வீட்டில் முடங்கி கிடக்கும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் தன்னலம் பேணி, குடும்பத்தையும் காத்து, நாட்டை நலமாய் இருக்க உதவவேண்டிய இந்த வேளையில், குடும்ப சண்டைகளும், பெண்களுக்கான வன்முறைகளும் ஆங்காங்கே நடப்பதாக செய்திகளிலும், அரசாங்க உதவி எண்கள் 181 பெண்கள் உதவி மையம், 1091 காவல்துறை பெண்கள் உதவி மையம், 122 பெண்கள் உதவி எண் மற்றும் பேரிடர் தீர்வு உதவி மையங்கள் மூலமும் மாநில மகளிர் ஆணையம், சமூக நல வாரிய உதவி மையம் மூலமாகவும் அறிய வருகிறது. இது வருந்தத்தக்க போக்காகும்.

தமிழக அரசின் சமூக நலத்துறை, குடும்ப வன்முறைக்கு ஆளாகும் பெண்களுக்கு உடனடி தேவைகளான தொலைபேசி மூலம் ஆற்றுப்படுத்துதல், மருத்துவ உதவி, குறுகிய கால தங்கும் வசதி, உணவு போன்ற அத்தியாவசிய தேவை மற்றும் சட்ட உதவி ஆகியவற்றினை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மூலம் செயல்படுத்தி வருகிறது. குடும்ப வன்முறையில் பார்க்கப்படும் பெண்கள், உடனடியாக பெண்கள் உதவி எண் 181, காவல் துறை உதவி எண் 1091 மற்றும் 122 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம். இந்த புகார்கள் மீது சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் பாதுகாப்பு அலுவலர்கள், குடும்ப நல ஆலோசகர்கள் ஆகியோரால் விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

பாதிக்கப்பட்ட பெண்கள் சமூக நலத்துறை மூலம் செயல்படும் சேவை இல்லங்கள், ஒருங்கிணைந்த சேவை மையம், இடைக்கால தங்கும் இல்லங்கள், பணிபுரியும் மகளிர் விடுதிகள் மற்றும் ஸ்வதார் இல்லங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்படுவதுடன், அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி, இலவச சட்ட உதவி, மன நல ஆலோசனை ஆகியவை வழங்கப்படும். குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள் அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் வரை தங்கள் குழந்தைகளுடன் அங்கேயே தங்கலாம்.

பெண்களது கண்ணியம் மற்றும் பாதுகாப்பிற்கு தமிழ்நாடு அரசு என்றென்றும் உறுதுணையாக இருக்கும் எனவும், குடும்ப வன்முறைக்கு உள்ளாகும் பெண்கள் தயங்காமல் பெண்கள் உதவி எண்களான 181, 1091, 122, மாவட்ட சமூக நல அலுவலர்கள் மற்றும் அருகாமையில் உள்ள அங்கன்வாடி பணியாளர்களை உடனடியாக தொடர்புகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News