பெண்கள் மருத்துவம்
பெண்கள் ஒருபோதும் புறக்கணிக்கக் கூடாத அறிகுறிகள்

பெண்கள் ஒருபோதும் புறக்கணிக்கக் கூடாத அறிகுறிகள்

Update: 2022-05-05 03:36 GMT
மாதவிடாய் சுழற்சியில் இரண்டு நாட்கள் தாமதம் ஏற்படுவது இயல்பானது. ஆனால் மாதவிடாய் சுழற்சியில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்பட்டால் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.
பெண்கள் தங்கள் உடல்நலம் குறித்து அலட்சியமாக இருக்கிறார்கள் என்பது கசப்பான உண்மை. வீட்டு நிர்வாகம், வேலை என இரட்டை பொறுப்பை சுமக்கும் பெண்கள் கடும் பாதிப்புகளை எதிர்கொள்கிறார்கள். வயது அதிகரிக்கும்போது முன்பை விட உடல் பலவீனம் அடைந்துவிடும் என்பதை கருத்தில் கொள்ளாமல் அசட்டையாக இருந்துவிடுகிறார்கள்.

நீடித்த தலைவலி, அடிக்கடி ஏற்படும் உடல் வலி, உடல் சோர்வு, சருமத்தில் ஏற்படும் மாற்றங்கள், உடல் எடையில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவை சாதாரணமாக தோன்றும் சில அறிகுறிகளாகும். அவற்றை புறக்கணிப்பது நாளடைவில் கடும் உடல் நல பிரச்சினைகளை உண்டாக்கிவிடும். அதற்கு இடம் கொடுக்காமல் பெண்கள் ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாத சில அறிகுறிகள் பற்றி பார்ப்போம்.

மூச்சுத்திணறல்:

அடிக்கடி மூச்சுத்திணறல் ஏற்பட்டால் அதை அலட்சியப்படுத்தக்கூடாது. சுவாசிப்பதற்கு கடினமாக இருப்பதாக உணர்ந்தால், அது தீவிரமான அறிகுறியாகும். திடீரென்று மாரடைப்பு ஏற்படுவதற்கு அது காரணமாக அமையலாம். மார்பு வலியும் சேர்ந்து இருந்தால், நுரையீரல் நோய்க்கான அறிகுறியாகவும் இருக்கலாம். அதனால் அலட்சியம் செய்யக்கூடாது. சுவாசிப்பதில் சிரமத்தை எதிர்கொண்டால் உடனே மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது ஆவசியமானது.

மார்பு வலி:

இதயம் வேகமாக துடிப்பது, மார்பில் வலி ஏற்படுவது, அடிக்கடி கை வலி, தோள்பட்டை வலியால் அவதிப்படுவது, மூச்சுத் திணறல் பாதிப்பை எதிர்கொள்வது இவையாவும் இதயத்தில் பாதிப்பு ஏற்படுவதற்கு அடிப்படை காரணமாக அமையலாம். இதயத்தில் இருந்து உடலின் பிற பகுதிகளுக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் தமனி எனும் குழாய் நாளங்களில் அடைப்போ, சிதைவோ ஏற்பட்டால் கடும் பாதிப்புகள் உண்டாகும். ஆண்களை விட பெண்களுக்குத்தான் இத்தகைய பாதிப்புகள் அதிகம் நேரும்.

திடீர் பலவீனம்:

கை, கால்கள், முகம் போன்ற பகுதிகள் திடீரென்று பலவீனமாக இருப்பதாக உணர ஆரம்பித்தால், அது பக்கவாதத்தின் எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். நடைப்பயிற்சி செய்வதில் சிரமம், மங்கலான பார்வை, மனக் குழப்பம், கவனக்குறைவு, பேச்சில் தெளிவின்மை போன்ற சமிக்ஞைகளும் பக்கவாதத்திற்கு வித்திடும். ஆரம்ப நிலையிலேயே இதனை தடுக்க உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

மாதவிடாய் சுழற்சியில் மாற்றம்:

மாதவிடாய் சுழற்சியில் இரண்டு நாட்கள் தாமதம் ஏற்படுவது இயல்பானது. ஆனால் மாதவிடாய் சுழற்சியில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்பட்டால் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. மாதவிடாய் காலத்தில் கடும் வலி, அதிக உதிரப்போக்கு போன்ற பிரச்சினையையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கருப்பையில் நீர்க்கட்டிகள் உள்ளிட்ட கருப்பை தொடர்பான பிரச்சினைகள் காரணமாக இருக்கலாம். எனவே மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது முக்கியமானது.

சருமத்தில் ஏற்படும் மாற்றம்:

தோல் கருமையாதல், புதிய மருக்கள் தோன்றுதல், மச்சம் அதிகரித்தல் உள்பட சருமத்தில் ஏற்படும் மாற்றங்களும் எச்சரிக்கை அறிகுறிகளை வழங்கக்கூடியவை.

ஏதேனும் உடல்நல பிரச்சினை ஏற்படும்போது சருமமும் பாதிக்கப்படும். இந்த அறிகுறிகள் நீரிழிவு நோய் மற்றும் சரும நோய் பிரச்சினைகளுக்கு ஆரம்ப நிலையாக இருக்கலாம். ஆதலால் மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது அவசியமானது.

எடையில் திடீர் மாற்றம்:

திடீர் உடல் எடை இழப்பு அல்லது எடை அதிகரிப்பு பிரச்சினையை எதிர்கொண்டால் உடலில் ஏதோ பாதிப்பு நிகழப்போகிறது என்பதற்கான அறிகுறியாகும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், திடீர் எடை அதிகரிப்பு தைராய்டு மற்றும் நீரிழிவு நோக்கான சமிக்ஞையாக அமையும். இதேபோல் கல்லீரல் நோய், சிறுநீரக நோய், வளர்சிதை மாற்றத்தில் கோளாறு, புற்றுநோய் காரணமாக திடீரென உடல் எடையை இழக்க நேரிடும். நீண்ட காலமாக உணவு முறை, உடற்பயிற்சி வழக்கத்தை மாற்றாத சூழலிலும் உடல் எடையில் மாற்றங்களை சந்தித்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமானது.

மார்பகத்தில் கட்டி:

சுய மார்பக பரிசோதனை மேற்கொள்வது மார்பக புற்றுநோயை தடுக்க உதவும் சிறந்த வழிமுறையாக கருதப்படுகிறது. மார்பு தசைகளில் கட்டிகளோ, தோலில் மாற்றமோ தென்பட்டால் தாமதிக்காமல் மருத்துவ உதவியை நாடுவது அவசியமானது. இவை மார்பக புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.

தூக்கம் மற்றும் குறட்டை:

வழக்கமாக தூங்கும் நேரத்தை விட கூடுதலாக தூங்கினாலோ, பகல் பொழுதிலும் அடிக்கடி தூங்கி எழுவதற்கு விரும்பினாலோ, குறட்டை பழக்கம் புதிதாக தொற்றிக்கொண்டாலோ அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. தூங்கும்போது சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால் அது காலப்போக்கில் இதய நோய்களுக்கு வழிவகுத்துவிடும்.

மன அழுத்தம்-பதற்றம்:

இன்றைய காலகட்டத்தில் மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் எதிர்கொள்வது தவிர்க்க முடியாதது. ஆனால் அதிகப்படியான மன அழுத்தத்துடன் பதற்றத்தை எதிர்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். ஆதலால் மன அழுத்தம் நீண்ட நேரம் நீடிப்பதற்கு அனுமதிக்கக்கூடாது. அது மனச்சோர்வுக்கு வழிவகுக்கும். அசவுகரியமான சூழலையோ, அறிகுறிகளையோ உணர்ந்தால் அதனை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள். பெண்களை பொறுத்தவரை தங்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுத்தால்தான் குடும்பத்தை கவனித்துக்கொள்ள முடியும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.
Tags:    

Similar News