பெண்கள் மருத்துவம்
பிரசவத்திற்கு செல்லும் முன் கவனத்தில் கொள்ள வேண்டியவை..

பிரசவத்திற்கு செல்லும் முன் கவனத்தில் கொள்ள வேண்டியவை..

Published On 2022-04-06 03:14 GMT   |   Update On 2022-04-06 03:14 GMT
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை இதய கோளாறு இருப்பவர்கள், சிறுநீரக பாதிப்பு உடையவர்கள் தாம்பத்திய உறவில் ஈடுபடுவதும், குழந்தை பெற்றுக் கொள்வதும் சவாலான விசயம்.
நில்... கவனி... செல்... என்பது போக்குவரத்துக்கான விதிமுறை மட்டுமல்ல. பொதுவாக நாம் எடுக்கும் முக்கிய முடிவுகளுக்கும் அதுவே முக்கியமான விதிமுறையாகும். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை இதய கோளாறு இருப்பவர்கள், சிறுநீரக பாதிப்பு உடையவர்கள் தாம்பத்திய உறவில் ஈடுபடுவதும், குழந்தை பெற்றுக் கொள்வதும் சவாலான விசயம்.

இப்படிப்பட்டவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளக்கூடாது என்று மருத்துவர்கள் ஆலோசனை சொல்வார்கள். ஆனால் இப்போது நவீன மருத்துவ வசதிகள் அவற்றையெல்லாம் முறியடித்து விட்டன. இதய கோளாறு, சிறுநீரக கோளாறு எதுவாக இருந்தாலும் சரி. ஏன் மாற்று சிறுநீரகம் வைத்தவர்களும் கூட குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்ற நிலையை அடைந்து விட்டோம். முக்கியமாக கருத்தரித்த பெண்கள் இருக்கும் வீடுகளில் சில அடிப்படை சோதனைகளை அவர்களே செய்து கொள்ள முடியும்.

பிரசவத்திற்கு ஆஸ்பத்திரிக்கு சென்றால் மட்டும் போதாது. அதற்கு முன்பு அந்த ஆஸ்பத்திரிகளை பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும். வீட்டுஅருகில் உள்ள ஆஸ்பத்திரியில் பார்த்து கொள்ளலாம். அப்போதுதான் வீட்டில் இருந்து சாப்பாடு கொண்டு போக முடியும். துணிமணிகளை எடுத்து செல்ல முடியும் என்ற எண்ணம் சிலரிடம் இருக்கும்.

அது முக்கியமல்ல. சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரிகளில் நவீன வசதிகளுடன் கூடிய அறுவை சிகிச்சை அரங்கு உள்ளதா? அறுவை சிகிச்சை மருத்துவர்கள் இருக்கிறார்களா? மயக்கவியல் மருத்துவர்கள் இருக்கிறார்களா? பிறக்கும் குழந்தைக்கு ஏதாவது சிக்கல் நேர்ந்தால் அதை பாதுகாப்பாக வைத்து கொள்வதற்கு இங்குபேட்டர் வசதிகள் உள்ளனவா? ரத்தம் செலுத்தும் வசதிகள், ரத்த சேமிப்பு வசதிகள் இருக்கிறதா என்பதையெல்லாம் அறிந்து கொண்டுதான் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் சில சிக்கல்கள் உருவாக வாய்ப்பு உண்டு.

பிரசவம் நடைபெற்றதும் குழந்தைக்கு சிக்கல் இருந்தால் குறிப்பிட்ட ஆஸ்பத்திரியில் வசதி இல்லாவிட்டால் நகரத்தில் உள்ள பெரிய ஆஸ்பத்திரிகளுக்கு குழந்தையை கொண்டு போங்கள் என்று விரைவுபடுத்துவார்கள். இப்போது இருக்கும் போக்குவரத்து நெரிசலில் குழந்தையை ஆஸ்பத்திரிக்குள் கொண்டு செல்வதற்குள் சிக்கல்கள் பெரிதாகிவிடவும் வாய்ப்பு உள்ளது. எனவேதான் எல்லா வசதிகளும் நிறைந்த ஆஸ்பத்திரிகளாக பார்த்து பிரசவத்திற்கு அனுமதிக்க வேண்டும்.
Tags:    

Similar News