பெண்கள் மருத்துவம்
ஒழுங்கற்ற தூக்கம் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கும்

ஒழுங்கற்ற தூக்கம் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கும்

Update: 2022-01-05 08:28 GMT
மாதவிடாய் கால ரத்தப்போக்கு, தூக்கம், பகலில் எந்த அளவுக்கு சோர்வின்றி செயல்படுகிறார்கள் என்பது போன்ற விஷயங்களை கவனத்தில் கொண்டோம்.
இரவில் 7 முதல் 9 மணி நேரம் வரை தூங்கும் ஆரோக்கியமான நபர்களை விட ஆறு மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கும் பெண்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் 44 சதவீதம் அதிகம் என்பது சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் அதிக ரத்தப்போக்கு ஏற்படுவதற்கான வாய்ப்பு 70 சதவீதம் அதிகரிக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆய்வு முடிவு ‘ஜர்னல் ஆப் ஸ்லீப் ரிசர்ச்’சில் வெளியாகி உள்ளது.

ஆய்வை மேற்கொண்ட குழுவினர், ‘‘இரவு ஓய்வின் முக்கியத்துவத்தை பலரும் புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் நோய் பாதிப்புகள், சிகிச்சை முறைகள் பெண்களை பின்னுக்கு தள்ளுகின்றன. 24 முதல் 40 வயதுக்குட்பட்ட 547 பெண்களை ஆய்வுக்கு உட்படுத்தினோம். அவர்களிடம் மாதவிடாய் காலத்தில் எதிர்கொண்ட சிரமங்கள் குறித்து கேட்கப்பட்டது.

குறிப்பாக மாதவிடாய் கால ரத்தப்போக்கு, தூக்கம், பகலில் எந்த அளவுக்கு சோர்வின்றி செயல்படுகிறார்கள் என்பது போன்ற விஷயங்களை கவனத்தில் கொண்டோம்.

இறுதியில் அதிக அல்லது ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியை அனுபவிப்பவர்கள் தூக்கமின்மை, சோர்வு, மன அழுத்தம், மனச்சோர்வு போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பதை கண்டறிந்தோம்.

மாதவிடாய்க்கு முன்போ அல்லது மாதவிடாய் காலத்திலோ எதிர்கொள்ளும் மனநிலை மாற்றங்கள், தசை பிடிப்புகள், எரிச்சல் மற்றும் சோர்வு காரணமாக அவர்கள் தூக்கமின்மையால் பாதிக்கப்படலாம்.

பெண்கள் தூக்கத்தை இழக்கும் போது பதற்றத்தை எதிர்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனால் தூங்குவது இன்னும் கடினமாகிறது. ஆண்களை விட பெண்கள் தூக்கமின்மையால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் 40 சதவீதம் அதிகம்’’ என்கிறார்கள்.
Tags:    

Similar News