பெண்கள் உலகம்

உளவியல் சிக்கல்களால் அதிகரிக்கும் உயிர்பலிகள்

Update: 2022-11-28 04:31 GMT
  • மனதில் குழப்பம் ஏற்படும் போது செயல்களில் தடுமாற்றம் ஏற்படும்.
  • மனஇறுக்கத்தை உடைக்க நெருக்கமானவர்களுடன் நேரம் செலவிட வேண்டும்.

மனித உயிர்கள் விலை மதிக்க முடியாதவை. எதையும் சாதிக்கும் ஆற்றல் கொண்டவை. ஒவ்வொருவரும் ஏதோ ஒரு திறமையும், ஆற்றலும் பெற்று உள்ளனர். அது என்ன என்று கண்டறிந்து வாழ்க்கையில் பலரும் உயர்ந்த நிலையை அடைகின்றனர். ஆனால் எதிர்பாராத நிகழ்வுகளில் எடுக்கும் சில முடிவுகள் சிலரது வாழ்க்கையின் திசையை அடியோடு மாற்றி விடுகிறது.

எனவே எந்த நிலையிலும் நிதானமாக, மன சமநிலையுடன் செயல்பட வேண்டியது அவசியம். ஆனாலும் பல நேரங்களில் நிதானம் தவறி ஆத்திரத்தில், விரக்தியின் உச்சத்தில் செய்யும் செயல்கள் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. அதாவது தங்களின் உயிரை தானே மாய்த்து கொள்ளுதல் அல்லது மற்றவரின் உயிரை பறிப்பதாகவும் அமைந்து விடுகிறது.

இதற்கு உளவியல் சிக்கலே காரணமாக உள்ளது. ஒரு பிரச்சினையில் சிக்கி தவித்து, அதில் இருந்து வெளியே வர முடியாத நிலையில் சிலர் விபரீத முடிவுகளை எடுக்கின்றனர். அது தற்கொலையாக, கொலையாக மாறி விடுகிறது.

தேசிய குற்ற ஆவண காப்பகம்

உளவியல் சிக்கல்களை சந்திக்கும் நபர்கள் வேறுபட்ட சமூக, பொருளாதார, வாழ்வியல் நிலைகளில் இருக்கிறார்கள். அவர்க ளின் தவறான முடிவுகள், தனிப்பட்ட அவர்களது குடும்பத்தை மட்டுமின்றி சமூகத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாகவே கொலை, தற்கொலை என்பது சமூகத்தில் தடுக்க முடியாத பெரும் நோயாக மாறி விட்டது. அதன் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அதை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய குற்ற ஆவண காப்பகம் (2021-ம் ஆண்டு) வெளியிட்ட புள்ளிவிவரங்கள் உறுதி செய்கின்றன.

அந்த வகையில், நாட்டில் மொத்தம் 1,64,033 பேர் தற்கொலை செய்து உள்ளனர். இதில், மராட்டியத்தில் 22,207 பேர், தமிழ்நாட்டில் 14,965 பேர், மத்திய பிரதேசத்தில் 14,965 பேர் தற்கொலை செய்தனர். அதாவது 2021-ல் ஒரு லட்சம் பேரில் சராசரி 26 பேர் தற்கொலை செய்து உள்ளனர்.

கடந்த ஆண்டு இந்தியாவில் மொத்தம் 29,272 கொலைகள் நடந்து உள்ளது. இதில் மத்திய பிரதேசத்தில் 3717 பேர், பீகாரில் 2799 பேர், மராட்டியத்தில் 2330 பேர் கொலை செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் மட்டும் 1686 பேர் கொலை செய்யப்பட்டு உள்ளனர். 2022-ம் ஆண்டு 7 மாதங்களில் மட்டும் 940 கொலைகள் நடந்து உள்ளன.

தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிராக 6,064 குற்றங்களும், பெண்களுக்கு எதிராக 8,501 குற்றங்களும், முதியவர்களுக்கு எதிராக 1841 குற்றங்களும். பட்டியலினத்தவருக்கு எதிராக 1377 குற்றங்களும், பழங்குடியினருக்கு எதிராக 39 குற்றங்களும் நடைபெற்று உள்ளது.

தற்கொலைக்கு குடும்ப பிரச்சினையே மிக முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதில் கவலை கொள்ளும் அளவுக்கு 18 முதல் 45 வயதினர் வரை தற்கொலை அதிகமாக உள்ளது. இது போல் குழந்தைகளை கொன்று குடும்பத்துடன் தற்கொலை செய்வதும் சமூகத்தில் விபரீத முகத்தை காட்டுவதாக இருக்கிறது.

காரணம் என்ன?

பொருளாதாரம், கல்வி போன்றவற்றில் மேம்பட்ட நகரமான மும்பையில் தான் நாட்டிலேயே தற்கொலைகள் அதிகமாக இருக்கிறது. ஆனால் குடும்ப பிரச்சினை, தனிமைப்படுத்தப்பட்ட உணர்வு, தொழில் பிரச்சினைகள், தோல்வி, மது, போதை பழக்கம், நோய் போன்றவை தற்கொலைக்கு காரணமாக கூறப்படுகிறது.

எத்தகைய பிரச்சினைகள் வந்தாலும் அதில் இருந்து மீண்டு வர ஏராளமான வழிகள் உள்ளன. ஆனாலும் உளவியல் ரீதியாக சமூகத்தில் இருந்து தன்னை ஒதுக்கிக் கொள்பவர்கள் தன்னையே அழித்துக் கொள்ளும் விபரீத முடிவுகளை எடுக்கிறார்கள். அது போல் சமூகத்தின் மீதான ஆத்திரத்தில் கொலை, கொள்ளை போன்ற குற்ற செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர். இதற்கு அவர்களின் உளவியல் சிக்கல்களே காரணமாக இருக்கிறது.

(பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்கு பதிலான வாழ்வில் இருந்து விடுபடுவதில் எந்த பயனும் இல்லை. எனவே பிரச்சினை களை எதிர்கொள்ள இளம்வயதினருக்கு கற்றுத் தர வேண்டும். நல்லவை, கெட்டவைகளை எடுத்து கூறி அவர்களுடன் கலந்துரையாட வேண்டும். இதுவே தற்போதைய காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

கேட்டது கிடைக்க வேண்டும். நினைத்தது நடக்க வேண்டும் என்ற மனநிலை இளைஞர்களிடம் பரவிக் கிடக்கிறது. ஆனால் நடைமுறை வாழ்வில் தோல்வி, அவமானம், தடைகள், இழப்பு களை தாங்கியும் தாண்டியும் தான் முன்னேறி செல்ல வேண்டியது இருக்கிறது. அதற்குரிய மனநிலையை வளர்த்து கொண்டால் துயரமான முடிவுகளை சந்திக்கும் நிலை ஏற்படாது.)

எனவே எந்த பிரச்சினையையும் எதிர்கொள்ளவும், தோல்வியை கடந்து செல்லவும் உளவியல் ரீதியாக தயார் ஆகி விட்டால் மனித வாழ்வு மேம்பட்டதாக மாறி விடும்.

மனஅழுத்தத்தில் இருந்து விடுபடும் வழிகள்

எந்த ஒன்றும் இறுதியானது அல்ல. எதில் இருந்தும் மீண்டு வர முடியும். எந்தவிதமான இழப்புகளையும் ஈடுசெய்ய மாற்று வழிகள் உள்ளன. மன உளைச்சல் ஏற்படும் போது நம்பிக்கைக்கு உரியவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். மனஅழுத்தம் நீடித்தால் தூக்கமின்மை, ரத்த அழுத்தம், சோர்வு உள்பட உடல் ரீதியாக பாதிப்பு ஏற்பட்டு நோயில் தள்ளி விடும்.

எனவே மனதை சம நிலையில் வைத்துக் கொள்ள புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டும். சிந்தனை, செயல்பாடு மற்றும் வாழ்க்கை நடைமுறையிலும் மாற்றம் செய்தால் மனஉளைச்சல் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.

மனஅழுத்தம் தோன்றினால் கார்ட்டிசோல் என்ற ஹார்மோன் உடலில் அதிகமாக சுரக்கும். ஆனால் சிரிக்கும் போது கார்ட்டிசோல் சுரப்பு குறைந்து விடும். மூளையை தூண்டுவதற்கு உதவும் எண்டார்பின் ஹார்மோன் சுரப்பு அதிகமாகும். எனவே சிரிப்பு என்பது அறிவியல் ரீதியான மருந்து என்பதை உணர வேண்டும்.

மனநல ஆலோசனை

உடற்பயிற்சி, தியானம், மூச்சுப்பயிற்சி, இசை, சினிமா, பொழுது போக்கு, விளையாட்டு மட்டுமின்றி சரியான நேரத்துக்கு சாப்பிடு வது, 8 மணி நேரம் தூங்குவது போன்றவற்றை கடை பிடிக்க வேண்டும். அப்படி செய்தால் மன அழுத்தம் குறையும். எந்த கேள்வியையும் புன்னகையுடன் எதிர்கொள்ள வேண்டும். கோபத்தோடும், வெறுப்போடும் எதை அணுகினாலும் தோல்வியே கிடைக்கும். எனவே பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தால் பதற்றமின்றி நிதானமாக செயல்பட வேண்டும்.

அவசரத்தில் எதையும் பேசி விடவோ, எந்த முடிவுகளையும் எடுத்து விடவோ கூடாது. மனஇறுக்கத்தை உடைக்க நெருக்கமானவர்களுடன் நேரம் செலவிட வேண்டும். மனம் குழப்பம் ஏற் படும் போது தங்களுக்கு பிடித்த லட்சிய வாசகங்களை நினைவில் கொண்டு தைரியமாக செயல்பட வேண்டும். தீவிர மனஅழுத்தம் ஏற்பட்டால் உரிய மனநல ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும்.

மனதில் குழப்பம் ஏற்படும் போது செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். எனவே பிரச்சினைகள் ஏற்படும் போது அதை சரியான வகையில் அணுகி தீர்வை நோக்கி பயணிக்க வேண்டும். அதற்கு மாறாக பிரச்சினைகளில் மூழ்கி குழப்பிக் கொண்டால் முடிவுகள் விபரீதமாகவே இருக்கும். எனவே எதையும் தீவிரமாக ஆராய்ந்து செயல்பட்டால் யாருக்கும் சிக்கல் இன்றி மற்றவர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் நீரோடை போல் வாழ்வு அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

Tags:    

Similar News