பெண்கள் உலகம்

கர்ப்ப காலத்தில் பற்களின் பாதுகாப்பது எப்படி?

Update: 2022-06-16 03:31 GMT
  • கர்ப்ப காலத்தில் பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்துக்குக் கூடுதல் பராமரிப்பு அவசியம்.
  • காலை, இரவு என இரு வேளையும் பற்களை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.

உடலின் ஆரோக்கியத்தைப் போலவே, பற்களின் ஆரோக்கியமும் முக்கியமானது. அதிலும், கர்ப்ப காலத்தில் பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்துக்குக் கூடுதல் பராமரிப்பு அவசியம். கர்ப்ப காலத்திற்கு முன்னும், கர்ப்ப காலத்திலும் பற்களைப் பாதுகாக்கும் முறைகள் குறித்து சில ஆலோசனைகள் இதோ:

கர்ப்ப காலத்தில் சீரான இடைவெளியில் உடலைப் பரிசோதனை செய்து கொள்வது போல, பற்கள் சார்ந்த பிரச்சினைகள் ஏதேனும் உள்ளதா? என்பதைக் கண்டறிய பரிசோதனை செய்துகொள்வது அவசியம். அதிலும், தாய்மைக்குத் தயாராகும் முன்னரே பெண்கள் இந்தப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். இதில், பற்களில் பிரச்சினை, சொத்தை ஏதேனும் உள்ளதா, ஈறுகளின் நிலை எப்படி இருக்கிறது என அறிய வேண்டும்.

பிரச்சினை இருப்பதைக் கண்டறிந்தால், உடனடியாக அதைச் சரி செய்வதற்கான சிகிச்சையை எடுத்துக் கொள்வது சிறந்தது. இது, பேறு காலத்தில் பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்க்க உதவும். ஆனால், இந்தச் சமயத்தில் பற்களைக் கவனிக்காமல் விடும்போது, கர்ப்ப காலத்தில் முதல் 3 மாதங்களுக்கு, பற்களில் ஏற்படும் பிரச்சினைக்கான சிகிச்சையோ, மருந்தோ எடுத்துக் கொள்ள முடியாது. தற்காலிக நிவாரணியாக வலி மருந்தை மட்டுமே எடுத்துக் கொள்ள முடியும்.

அதேபோல், 21 வயதில் பலருக்கும் ஞானப்பற்கள் முளைக்கும். இது சில சமயங்களில் தொந்தரவு தரக்கூடும். கர்ப்ப காலத்தில் அந்தப் பிரச்சினை ஏற்பட்டால், அந்தப் பல்லை நீக்குவதற்கான சிகிச்சை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும். எனவே முன்பே இதை மருத்துவரிடம் காண்பித்து குணப்படுத்துவது அவசியம்.

ஈறு சார்ந்த பிரச்சினைகள்: பெண்களுக்குப் மகப்பேறு காலத்தில் ஹார்மோன்களில் மாறுதல் ஏற்படும். இதனால், ஈறுகளில் வீக்கம், ரத்தம் வடிதல் உட்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். இவற்றை அலட்சியம் செய்யாமல், உடனடியாகப் பல் மருத்துவரிடம் தகுந்த சிகிச்சை பெற்று ஆரம்ப நிலையிலேயே ஈறு பிரச்சினையைச் சரி செய்ய வேண்டும்.

பற்களின் பராமரிப்பு: சாப்பிடும் போது உணவுத் துகள்கள் வாயில் தங்கிவிடும் வாய்ப்புள்ளது. இதனால் கிருமிகள் பெருகி பல் சார்ந்த பிரச்சினைகள் அதிகமாகும். இதைத் தவிர்க்க காலை, இரவு என இரு வேளையும் பற்களை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். தரமான பற்பசையை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஈறுகளுக்கு உறுதி சேர்க்கும் வகையில், தினமும் வைட்டமின் 'சி' சத்து நிரம்பிய ஏதேனும் ஒரு பழத்தை சாப்பிடலாம். கர்ப்ப காலத்தில் இனிப்பு சார்ந்த உணவுப் பண்டங்கள் மீது ஈர்ப்பு இருக்கும். இனிப்பு வகைகளை சாப்பிட்டால், உடனடியாக வெதுவெதுப்பான வெந்நீர் கொண்டு வாய் கொப்பளிக்க வேண்டும்.

Tags:    

Similar News