பெண்கள் உலகம்

மகிழ்ச்சியும்.. நிம்மதியும்... நிலைக்க சில யுக்திகள்!

Published On 2024-03-24 10:30 GMT   |   Update On 2024-03-24 10:30 GMT
  • மன இறுக்கத்துடன் இருப்பவர்களிடம் மகிழ்ச்சி நிலைத்திருக்காது.
  • குழந்தைகள் கூட பேசுவதற்கு தயங்குவார்கள்.

இயல்பாகவே நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள் எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதனை சாதுரியமாக எதிர்கொண்டு சமாளித்து விடுவார்கள். மகிழ்ச்சியான மன நிலையை தக்கவைத்துக் கொள்வதற்கும் முயற்சிப்பார்கள். அவர்களிடத்தில் மன இறுக்கம், மன அழுத்தம் போன்ற மன நலன் சார்ந்த பிரச்சினைகள் எதுவும் எட்டிப்பார்க்காது.

எப்பொழுதும் மன இறுக்கத்துடன் இருப்பவர்களிடம் ஒருபோதும் மகிழ்ச்சி நிலைத்திருக்காது. அவர்களிடம் நெருங்கி பழகுவதற்கு பலரும் விரும்ப மாட்டார்கள். அதனால் அவர்களுடன் நட்புடன் பழகுபவர்கள் குறைவாகவே இருப்பார்கள். அலுவலகம், பொது இடம், உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் அவர்களுடன் நெருங்கி பேசுபவர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கும். வீட்டில் கூட குடும்பத்தினர் அதிகம் பேசாத அளவுக்கு தனிமை சூழலுக்கு தள்ளப்படும் நிலைமை ஏற்பட்டு விடும்.

எப்போதும் கலகலப்பாக இருக்கும் குழந்தைகள் கூட பேசுவதற்கு தயங்குவார்கள். பொதுவாகவே பெண்களிடத்தில் நகைச்சுவை உணர்வு குடிகொண்டிருக்கும். அதிலும் நகைச்சுவை உணர்வு கொண்டிருக்கும் பெண்களின் வீட்டில் எப்போதும் மகிழ்ச்சியான சூழல் நிலவும். அவர்களிடத்தில் வீட்டில் உள்ளவர்கள் சகஜமாகவும், உரிமையோடும் பழகுவார்கள்.

வீட்டிலும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். அப்படிப்பட்ட சந்தோஷமான மனநிலையும், எதையும் திருப்தியுடன் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமுமே வாழ்க்கையை வளப்படுத்தும். இத்தகைய எதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் எதிர்பார்ப்புகளுடன் வாழும் மனநிலையில் நிறைய பேர் இருக்கிறார்கள். நடக்கப்போவதை சுயமாகவே யூகித்து தேவையற்ற மனக்குழப்பங்களுக்கு ஆளாகி அல்லல்படக்கூடாது.

ஒவ்வொரு நாளும் கிடைக்கும் சாதாரண அனுபவங்களில் இருந்து மகிழ்ச்சியை பெறக்கூடிய கலையை கற்றுக்கொள்ள வேண்டும்.

மனக்கவலை, மனக்குழப்பம் இல்லாமல் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்க வேண்டும். அத்தகைய இயல்பான மனநிலையில் இல்லாதவர்களால் சிறப்பாக செயல்பட முடியாது.

மகிழ்ச்சிதான் வாழ்வின் அடிப்படை தேவை. கவலை, துயரம், அதிருப்தி போன்றவை உடல் நலனையும், மன நலனையும் பாதிக்கக்கூடியவை. வாழ்க்கையை ரசித்து அனுபவிக்க மகிழ்ச்சி எனும் கடலில் மூழ்கி நிம்மதி எனும் முத்தெடுக்கும் கலையை கற்றுக்கொள்ள வேண்டும்.

Tags:    

Similar News