பெண்கள் உலகம்

தூக்கம் இல்லாமல் கஷ்டப்படுறீங்களா... அப்போ இது உங்களுக்குத்தான்...

Published On 2025-06-04 08:13 IST   |   Update On 2025-06-04 08:13:00 IST
  • வெதுவெதுப்பான குளியல், தியானம் போன்றவற்றைச் செய்யலாம்.
  • தூங்குவதற்கு முன் கனமான மற்றும் துரித உணவுகளைத் தவிர்க்கவும்.

இன்றைக்கு பலருக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை தூக்கமின்மை தான். தூக்கம் வராமல் சிலர், பாதி தூக்கத்தில் எழும் சிலர், எவ்வளவு தூங்கினாலும் தூக்கம் போதவில்லை என சிலர். இப்படி பெரும்பாலானவர்களின் ஏக்கமே நல்ல, ஆழ்ந்த தூக்கம் கிடைக்காதா? என்பது தான்.

நிம்மதியாக தூங்குவதற்கு என்ன தான் செய்வது என்று கவலையாக உள்ளதா? இனி அந்த கவலை வேண்டாம். இந்த 5 பழங்களை சாப்பிட்டாலே போதும். நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம்.

ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவும் 5 பழங்கள்...

செர்ரி:

புளிப்பு செர்ரி சாறு குடிப்பது அல்லது புளிப்பு செர்ரிகளை சாப்பிடுவது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மெலடோனின் என்ற தூக்க ஹார்மோனை அதிக அளவில் கொண்டிருப்பதால் ஆழ்ந்த தூக்கத்துக்கு உதவுகிறது.

கிவி:

கிவி படுக்கைக்கு முன் சாப்பிட சிறந்த பழம். இது ஆக்ஸிஜனேற்றங்களால் நிறைந்துள்ளது மற்றும் செரோடோனின் என்ற ஹார்மோனைக் கொண்டுள்ளது. இது தூக்கம்-விழிப்பு சுழற்சியை நிர்வகிக்க உதவுகிறது. தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு இரண்டு கிவி பழங்களை சாப்பிடுவது, உடல் ஓய்வெடுக்கவும், எளிதாக தூங்கவும் உதவும்.



அன்னாசி:

அன்னாசிப்பழத்தில் உள்ள மெலடோனின் தூக்க-விழிப்பு சுழற்சிகளை ஒழுங்குபடுத்துகிறது. இது தூங்குவதற்கு எடுக்கும் நேரத்தை குறைத்து, ஆழ்ந்த தூக்கத்தை மேம்படுத்துகிறது.

வாழைப்பழம்:

வாழைப்பழம் ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவக்கூடிய ஒரு உணவு என்று சொல்லலாம். இதில் பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் ட்ரிப்டோபன் என்ற அமிலம் உள்ளது, இவை தூக்கத்தை தூண்டக்கூடியவை. ட்ரிப்டோபன் மூளைக்கு சென்று மெலடோனின் என்ற ஹார்மோனை சுரக்க வைக்கிறது, இது தூக்கத்தை தூண்டுகிறது.

ஆப்பிள்:

ஆப்பிள் பழத்தில் மெலடோனின் என்ற ஒரு ஹார்மோன் மெக்னீசியம் என்ற ஒரு தாதுவும் உள்ளதால் நரம்பு மற்றும் தசைகளை தளரச் செய்து தூக்கத்தை மேம்படுத்துகிறது.

படுக்கைக்கு முன் ஆப்பிள் பழம் சாப்பிடுவது தூக்கத்தை மேம்படுத்துவதாக சில ஆய்வுகள் கூறுகின்றன.

ஆப்பிள் பழம் சாப்பிடுவதன் மூலம் ஆழ்ந்த தூக்கத்தை பெறலாம், ஆனால் அது ஒவ்வொருவருக்கும் ஒரே மாதிரியான பலனைத் தராது. சிலருக்கு ஆப்பிள் பழம் தூக்கத்தை தூண்டலாம், மற்றவர்களுக்கு அது உதவாது.

பழம் சாப்பிட்டும் தூக்கம் வரவில்லையே என்னதான் செய்வது என்று எரிச்சலடையக் கூடாது. பழம் சாப்பிட்ட உடனே தூங்கிவிட வேண்டும் என்ற மனநிலை தவறானது. ஏனென்றால் தூக்கத்தை மேம்படுத்தும் மற்ற வழிகளையும் பின்பற்ற வேண்டும். முதலில் இரவில் தூங்குவதற்கு முன் மனதை அமைதிப்படுத்துங்கள். வெதுவெதுப்பான குளியல், தியானம் போன்றவற்றைச் செய்யலாம்.



படுக்கையறை சூடாக இல்லாமல் குளிர்ச்சியாக இருக்க வேண்டும். தூங்க செல்லும் முன் காஃபின் மற்றும் மது முதலானவற்றை அருந்த வேண்டாம். தூங்குவதற்கு முன் கனமான மற்றும் துரித உணவுகளைத் தவிர்க்கவும். லேசான உணவுகளை உண்ண வேண்டும். இவற்றை பின்பற்றினாலே நிம்மதியான தூக்கத்தோடு உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்கும்.

என்ன செய்தாலும் ஆழ்ந்த தூக்கம் வரவில்லை, உடல் சோர்வாக இருப்பதாக உணர்ந்தால் ஒரு மருத்துவரை அணுகுவது நல்லது.

Tags:    

Similar News