லைஃப்ஸ்டைல்
பெண்களுக்கு பேரழகு சேர்க்கும் துப்பட்டா

பெண்களுக்கு பேரழகு சேர்க்கும் துப்பட்டா

Published On 2021-08-07 09:25 GMT   |   Update On 2021-08-07 09:25 GMT
பெண்களின் கேஷூவல் உடைகளில் இருந்து சுடிதாரும், சல்வாரும் சற்று பின்வாங்கியதால், பலாஸோ போன்ற இந்தோ- வெஸ்டர்ன் கலப்பு ஆடைகள் அந்த இடத்தை நோக்கி முன்னேறிச் சென்றாலும் துப்பட்டா மட்டும் தனது தனித்துவத்தை இழக்காமல் ஜொலித்துக்கொண்டிருக்கிறது.
தோகை விரித்தாடுவது மயிலுக்கு பேரழகு சேர்ப்பதுபோல், துப்பட்டாக்கள் இப்போது பலவிதமான டிசைன்களில் பெண்களுக்கு பேரழகு சேர்த்துக்கொண்டிருக்கிறது. முன்பு ஜாடிக்கு ஏற்ற மூடி போன்று சாதாரணமாக காணப்பட்ட துப்பட்டாக்கள் இப்போது தனி அழகு பெற்று மிளிர்கிறது. விழாக்காலங்களில் தங்கத்தில் ஒரு சங்கிலி வாங்குவது போன்று, ஒரு ஜோடி கம்மல் வாங்குவது போன்று இதனையும் பெண்கள் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து வாங்கி அணிகிறார்கள். அத்தகைய துப்பட்டாக்கள் ஒட்டுமொத்த உடை அழகையும் மெருகேற்றுவதுதான் அதற்கான காரணம்.

பெண்களின் கேஷூவல் உடைகளில் இருந்து சுடிதாரும், சல்வாரும் சற்று பின்வாங்கியதால், பலாஸோ போன்ற இந்தோ- வெஸ்டர்ன் கலப்பு ஆடைகள் அந்த இடத்தை நோக்கி முன்னேறிச் சென்றாலும் துப்பட்டா மட்டும் தனது தனித்துவத்தை இழக்காமல் ஜொலித்துக்கொண்டிருக்கிறது. பார்ட்டிகளில் பலரையும் கவர காஞ்சிபுரம் அல்லது பனாரஸ் துப்பட்டா போதுமானதாக இருக்கிறது. லெஹங்கா, சல்வாருக்கு மட்டுமின்றி ஆங்கிள் லென்த் அனார்கலிக்கு வின்டேஜ் லுக் கொண்ட ஜரிகை துப்பட்டாவும் இப்போது பேஷனாக இருந்துகொண்டிருக்கிறது. கொஞ்சம் பார்மலாக தோன்றவேண்டும் என்றால் அத்தைகய துப்பட்டாக்கள் போது மானது.

அடர்ந்த நிறங்களிலும், பலவகையான பிரிண்ட்களிலும் வெல்வெட் துப்பட்டாக்கள் கிடைக்கின்றன. அதில் பலவித அலங்காரங்களும் செய்யப் படுகின்றன. டார்க் சாலீட் நிறங்களில் கோல்டன் பீட்ஸ் டிரான்ஸ்பர் பிரிண்ட், பெரிய மோட்டிப்களில் மல்டி கலர் பிரிண்ட் போன்றவைகள் வெல்வெட் மெட்டீரியலில் கிடைக்கின்றன. அதன் ஓரங்களில் `போம்' இணைத்து முத்து, பவளங்களால் அலங்காரம் செய்த லைட் வெயிட் வெல்வெட் துப்பட்டாக்கள் பெண்களுக்கு பேரழகு தருகிறது.

பார்டர் அவுட்.. டீட்டெயிலிங் இன்..

பார்டர் லெஸ் துப்பட்டாக்கள் சமீபகாலமாக அதிக மவுசு பெற்றிருக்கிறது. பிரீச், ப்ளீட்ஸ், கேதர்ஸ், போம் போம், டஸ்சல் இப்படி இந்த புதிய வகை துப்பட்டாக்களுக்கு அழகு சேர்க்க நிறைய விஷயங்கள் இருக்கின்றன. இந்த வகையிலான டீட்டெயிலிங் துப்பட்டாக்களால் பார்டர் துப்பட்டாக்கள் பொலிவிழந்திருக்கின்றன.

டை அன்ட் டைய்

டை அன்ட் டைய் துப்பட்டாக்கள் என்றால் முன்பெல்லாம் வெள்ளை வட்டத்திலான டிசைன்களை கொண்ட சுங்கிடி துப்பட்டாக்கள் மட்டுமே இருந்தன. இப்போது அலங்காரங்களை கொண்ட அபூர்வமான டிசைன்களெல்லாம் இதில் வருகை தந்திருக்கின்றன. இளம் பெண்கள் இதனை விரும்பி வாங்குகிறார்கள். ஷிபோரி, பாந்தினி, க்ளாம்ப் டை, லெகரியா, இக்கத்.. என்று அந்த பட்டியல் நீளுகிறது.

ஹேன்ட் பெயிண்ட்டட் துப்பட்டா

ப்ளோரல் பெயிண்டிங்குகளும், கலம்காரி, மதுபானி, வார்லி, மியூரல் போன்றவைகளும்- மரபுசார்ந்த படங்களும் இந்த வகை துப்பட்டாக்களில் இடம்பெறுகின்றன. கையால் பெயிண்ட் செய்யப்படும் இவைகள் எல்லா காலத்திற்கும் ஏற்றவைகளாக இருக்கின்றன. அதனால் இதனை டீன்ஏஜ் பெண்களும், நடுத்தர வயது பெண்களும் விரும்பி வாங்குகிறார்கள்.

தாபு பிரிண்ட் துப்பட்டா

கண்களை கவரும் மோட்டிப்களும், நிறங்களும் கலந்த சிம்பிள் துப்பட்டாவாக இது திகழ்கிறது. காட்டன், சந்தேரி, டஸர் பாப்ரிக்குகளுக்கு தாபு பிரிண்ட் பொருத்தமானவை. இண்டிகோ அல்லது கலேஷ் என்று கூறப்படுகின்ற கிளே டையில் தாபு பிரிண்ட் பதிக்கப்படுகிறது. பெர்பெக்‌ஷன் இல்லாத பேட்டன்தான் இதில் அழகு நிறைந்ததாக காட்சியளிக்கிறது. மரபு சார்ந்த பிரிண்டிங் முறை இதில் கையாளப்படுவதால் காலப்போக்கில் நிறம் மங்குவதற்கு வாய்ப்பிருக்கிறது.

பாட்ச் துப்பட்டா

பலவிதமான பாப்ரிக்குகளை இணைத்து தைக்கப்படுவது, பாட்ச் துப்பட்டாவாகும். மேட்சிங் கலர்களில் இணைக்கப்படுவதால் இது பார்ப்பதற்கு வித்தியாசமாக தோன்றும். ஒரே மாதிரியான பாட்ச்களையோ, மாறுபட்ட பாட்ச் களையோ இதில் இணைக்கலாம். நேர்த்தியாக தைப்பதிலும், பொருத்தமான கலர்களை தேர்ந்தெடுப்பதிலும் இதன் அழகு அடங்கியிருக்கிறது. சற்று முரட்டுத் தனமான, வித்தியாசமான லுக்கில் வலம் வர விரும்பும் டீன்ஏஜ் பெண்கள் ஜீன்ஸ்- குர்தாவுடன் இதை அணிந்து வலம் வரலாம்.

பச்மீனா துப்பட்டா

காஷ்மீரி ஆர்ட் ஒர்க் நிறைந்த இந்த வகை துப்பட்டாக்கள் காலம் கடந்தும் புகழ் பெற்றுக்கொண்டிருக்கிறது. 20 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் இதனை அதிகம் விரும்புவார்கள். ஒரு துப்பட்டாவை தயார் செய்ய ஒருவர் ஒரு மாதம் வரை உழைக்கவேண்டியதிருக்கும். அத்தனை வேலைப்பாடுகள் அதில் உண்டு. இறகு போன்று கனமின்றி காணப்படும் இந்த வகை துப்பட்டாக்கள் எல்லா சீதோஷ்ணநிலைக்கும் ஏற்றதாக இருக்கிறது.

இக்கத் துப்பட்டா

போல்டு அன்ட் சோபஸ்டிகேட்டட் லுக் தேவைப்படும் பெண்கள் இந்த துப்பட்டாவை தேர்ந்தெடுக்கலாம். இதன் அடிப்படை நிறம் பெரும்பாலும் கேரள புடவை போன்று ஐவரியாக இருக்கும். ஆனாலும் கலர்புல்லான பார்டர் பிரிண்டுகளே இக்கத் துப்பட்டாவின் அழகை தூக்கலாக்கிக் காட்டுகிறது. டெரகோட்டா ஆபரணங்கள், பழங்குடி மக்கள் பயன்படுத்தும் ஆபரணங்கள், கையால் தயார்செய்யப்பட்ட பேக்குகள் போன்றவை இந்த வகை துப்பட்டாவிற்கு கூடுதல் அழகு சேர்க்கும்.

டபுள் துப்பட்டா

மணப்பெண்களுக்கான உடை அலங்காரத்திற்கு மிக பொருத்தமாக அமைவது, டபுள் துப்பட்டா. மார்பக பகுதியை கவர் செய்யும் ஒரு துப்பட்டாவோடு- தலையிலோ, வலது தோள்பட்டையிலோ இரண்டாவது துப்பட்டா பரவிக்கிடக்கும். இது ஒரு வித்தியாசமான ஸ்டைலை உருவாக்கும். விலை சற்று அதிகமாக இருந்தாலும் இது கலர்புல்லான, கம்பீரமான அழகைத் தருவதால் மணப்பெண்கள் இதனை விரும்புகிறார்கள்.

பனாரசி சில்க் துப்பட்டா

இந்த வகை துப்பட்டாவில் இரண்டு வகை பிரசித்தி பெற்றதாக இருக்கிறது. சிம்பிள் சில்க் துப்பட்டா ஒரு வகை, இன்டிகேட்டட் டிசைன் இன்னொரு வகை. டிசைன் அதிகம் கொண்ட துப்பட்டாக்களை பார்ட்டிகளுக்கும், முக்கியமான விருந்து நிகழ்ச்சிகளுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். இவை தூக்கலாக காட்சியளிப்பதால் சிம்பிளான உடைகளுக்கும் பொருந்தும். பனாரசி துப்பட்டாக்கள் பெரும்பாலும் அடர்த்தியான நிறங்களை கொண்டிருக்கும். அதனால் கான்ட்ராஸ்ட் நிறமுள்ள உடைகளுக்கும் எடுப்பாக காட்சி தரும். சால்வார் கமீஸ், குர்த்தியுடன் இதை பயன்படுத்தினால் இளம் பெண்களுக்கு பளிச்சிடும் அழகு கிடைக்கும். சிம்பிள் பேஸ்டல் கலரிலும் பனாரசி துப்பட்டாக்கள் கிடைக்கின்றன. அலுவலகத்திற்கு செல்பவர்கள் இதை அணிந்து சென்றால் ஸ்மார்ட் லுக் கிடைக்கும்.

எம்ப்ராய்டரி துப்பட்டா

எவர்கிரீன் டிரெண்டாக இருப்பது எம்ப்ராய்டரி துப்பட்டாக்கள். கிளாசிக் ரீதியிலும், கான்டம்பரரி ரீதியிலும் இதனை வடிவமைக்கிறார்கள். ப்ளோரல் மோட்டிப்களுக்கு மங்காத மவுசு இருந்துகொண்டிருக்கிறது. ஆரி ஒர்க், பீட் ஓர்க், பிரெஞ்ச் நாட் போன்றவைகளை நடுத்தர வயது பெண்களும் விரும்புகிறார்கள். சாதாரண துப்பட்டாவை வசீகரிக்கும் அழகாக மாற்றுவதற்கு எம்ப்ராய்டரிங்கே சிறந்த வழிமுறையாக இருக்கிறது.

இரு பக்க துப்பட்டா

இரு பக்கமும் வெவ்வேறு விதமாக அழகுதரும் வித்தியாசமான துப்பட்டா இது. இருபக்கங்களிலும் கவரும் விதமாக டிசைன் செய்திருப்பார்கள். இருபக்கமும் ஐடன்டிக்கலான காந்தா எம்ப்ராய்டரியை பதித்திருப்பார்கள். இரண்டு பக்கங் களையும் மாற்றி மாற்றி பயன்படுத்திக்கொள்ளலாம். வேலைக்கு செல்லும் பெண்கள் இரண்டு நாட்கள் இதை பயன்படுத்தலாம் என்பதால் விரும்பி தேர்ந்தெடுக்கிறார்கள்.

புடவை முந்தானை துப்பட்டா

இந்த வகை துப்பட்டாக்களை பெண்கள் விருந்து நிகழ்ச்சி களுக்கு விரும்பி அணிகிறார்கள். சாதாரண துப்பட்டாக்களைவிட இதன் நீளமும், அகலமும் அதிகம். பட்டுப்புடவைகளின் முந்தானை டிசைன் போன்று இரண்டு முனைகளிலும் ஜரிகை வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருப்பது இதற்கு கூடுதல் அழகு தருகிறது.
Tags:    

Similar News