லைஃப்ஸ்டைல்
பெண் கல்வியின் இன்றியமையாமை

பெண் கல்வியின் இன்றியமையாமை

Published On 2020-01-16 03:04 GMT   |   Update On 2020-01-16 03:04 GMT
பெண்களுக்கான பள்ளிகள், கல்லூரிகள் தோன்றி பெண் கல்வி வளர்ச்சி அடைவதற்கான முன் முயற்சிகளில் ஈடுபட்டன. ஆணுக்கு நிகராக பெண்களும் தற்போது கல்வி பயிலும் முன்னேற்றம் அடைந்துள்ளன.
அதிகாரம் அறிவினால் கட்டப்படுகிறது. இதனால் இயற்கையாகவே ஆண், பெண் உறவு முறையில் ஏற்படும் அதிகார போட்டியில் தனது மேலாட்சியைக் கட்டமுயன்ற ஆண் சமூகம் முதலில் பெண்ணுக்கான அறிவு வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது. இதுதான் பெண்களுக்கான வாழ்க்கை என்ற கட்டுப்பாட்டால், அது அவர்களின் அறிவு வளர்ச்சிக்கு தடையாக அமைந்தது. அவர்களுக்கு சுமையாக மாறியது.

அறிவு வளர்ச்சிக்கு ஆதாரமாக அமையும் கல்வி பெறுவதை ஆண் சமூகம் தனதாக்கி கொண்டது. மேலும் பெண்ணறிவு என்பது பேதமைத்து பெண்ணுக்கு அறியாமையை அழகு என்றும் புனைந்து விட்டது. பெண்ணை இருகால் முளைத்த ஒரு நடமாடும் கருப்பை என்றே நினைக்க வைத்து விட்டது. இத்தகைய இந்திய பெண் நிலைமை இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயரின் கல்வி கொள்கையினால் பெரிதும் மாற தொடங்கின.

வேத காலத்தில் பெண்கள் கல்வியில் சிறந்து விளங்கினாலும் நாளடைவில் அவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. இதனால் பெண்கள் தாழ்வான நிலைக்கும் படிப்படியாக தள்ளப்பட்டனர். பல நூற்றாண்டு காலம் வரை இந்நிலை நீடித்தது. பின்னர் சமூக சீர்திருத்தவாதிகள் பல்வேறு சீர்திருத்த பணிகளை மேற்கொண்டனர். அவர்கள் மேற்கொண்ட பணிகளுள் குறிப்பிடத்தக்க பணியாக அமைந்தது பெண் கல்வி.

பெண் கல்வியின் இன்றியமையாமையை உணர்ந்த இந்திய சமூக சீர்திருத்தவாதிகளும் பாடுபட்டனர். அதன் பயனாக பல கல்வி கூடங்கள் திறந்து விடப்பட்டன. மாநில வாரியாக பெண்களுக்கான பள்ளி கூடங்களை நிறுவத்தொடங்கினர். பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே பெண்களுக்கான கல்வி கூடம் தொடங்கப்பட்டது.

1845-ம் ஆண்டு முதன் முதலாக சுதேசியப் பெண்கள் பள்ளி சென்னையில் தொடங்கப்பட்டது. இந்த பள்ளி தான் பின்னர் பெண்களுக்கென்று தனியாக பள்ளிகள் பல தொடங்குவதற்கான முன்னோடியாக திகழ்ந்தது. 1882-ல் ஹண்டர் தலைமையில் அமைக்கப்பட்ட இந்திய கல்விக்குழு அந்நாளில் கல்வி கற்று கொண்டிருந்த பெண்களின் எண்ணிக்கையில் சென்னை மாகாணமே முதலிடம் வகிப்பதாக குறிப்பிட்டுள்ளது.

குழந்தை திருமணமே பெண்கள் கல்வி கற்பதற்கு தடையாக இருப்பதாகவும் சிறுவயதிலேயே படிப்பு நிறுத்தப்படுவதாகவும் அக்கல்விக்குழு தெரிவித்தது. பெண் ஆசிரியர்கள் இல்லாமையையும் சுட்டி காட்டியது.

மேலும் பெண்கள் பள்ளிகள் மற்றும் ஆதரவற்ற விடுதிகள் ஆகிய நிறுவனங்கள் கல்வியறிவை அளிக்கும். ஆண்கள் பயிலும் பள்ளிகளை விட பெண்கள் பயிலும் பள்ளிகளுக்கு நிதி உதவி விதிமுறைகள் தளர்த்தப்பட வேண்டும்.

அனைத்து பெண்கள் பள்ளிகளிலும் படிப்படியாக ஆண் ஆசிரியர்களுக்கு பதிலாக பெண் ஆசிரியர்களை நியமிக்கப்பட வேண்டும். ஆண், பெண் இரு பாலருக்கும் தனித்தனியே பள்ளிக்கூடங்கள் நிறுவப்பட வேண்டும் என்ற கருத்தை முன் வைத்தது, உயர் சாதிய பெண்கள் பருவமடைந்த பின்னர் வீட்டுக்கு வெளியே செல்ல அனுமதிக்கப்படாமையால் அவர்களின் வசதிக்காக வீட்டுக் கல்வி என்று சொல்லப்படும் முறையையும் பரிந்துரைத்தது.

அரசு தனியார் பள்ளிகள் நிறுவிட, நிதியுதவியளித்திட முடிவெடுத்ததும் சுதேசியவாதிகளும் தேசபக்தர்களும் சமூக சீர்திருத்தவாதிகளும் பெண்களுக்கான கல்வி கூடங்களை நிறுவ முன்வந்தனர். இதன் பின்னரே பெண்களுக்கான பள்ளிகள், கல்லூரிகள் தோன்றி பெண் கல்வி வளர்ச்சி அடைவதற்கான முன் முயற்சிகளில் ஈடுபட்டன. ஆணுக்கு நிகராக பெண்களும் தற்போது கல்வி பயிலும் முன்னேற்றம் அடைந்துள்ளன.

ஆர்.பானு,
ஆங்கிலத்துறை,
உதயா கல்வியியல் கல்லூரி,
அம்மாண்டிவிளை.
Tags:    

Similar News