பொது மருத்துவம்

காளான் சாப்பிடுவது நல்லதா?

Published On 2025-05-29 08:00 IST   |   Update On 2025-05-29 08:00:00 IST
  • சப்ரோபைட்டுகள் என்ற பூஞ்சை காளான் இலைகள், வேர்கள் மற்றும் இறந்த மரம் போன்ற இறந்த கரிமப் பொருட்களில் வளரும்.
  • வெள்ளை பட்டன், சிப்பி காளான்கள் போன்ற பல நல்ல உணவை சுவைக்கும் மற்றும் மருத்துவ வகை காளான்கள் அடங்கும்.

சமீப காலங்களில் காளான்கள் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவாக மாறிவிட்டது. காளான் என்பது காய்கறி குடும்ப பயிர் அல்ல. உண்ணக்கூடிய காய்கறிகள் தரும் தாவரங்கள் குளோரோபில் என்ற பச்சையம் மூலம் சூரிய ஒளியில் இருந்து ஆற்றலை பெற்று அதனை மாவுச்சத்து என்ற கார்போஹைட்ரேட் ஆக மாற்றி விளைகிறது. ஆனால் காளான்களில் குளோரோபில் இல்லை. அவை ஒளிச்சேர்க்கை செய்ய முடியாது. அப்படி இருக்கும் போது இவை எப்படி வளர்கின்றன?

இந்த காளான்கள் தாங்கள் வளர மற்ற தாவரங்களில் இருந்து தங்களுக்கு தேவையான சத்தான கார்போஹைட்ரேட்டுகளை எடுத்துக்கொள்கின்றன. இதனால் தான் இந்த காளான்களை பூஞ்சை குடும்ப தாவரமாக அடையாளப்படுத்தி உள்ளனர்.

இந்த பூஞ்சை வகை காளான்கள் 3 வகைகளாக பிரிக்கப்படுகின்றன.

சப்ரோபைட்டுகள் என்ற பூஞ்சை காளான் இலைகள், வேர்கள் மற்றும் இறந்த மரம் போன்ற இறந்த கரிமப் பொருட்களில் வளரும். அவை அதிலிருந்து கார்பன் டை ஆக்சைடு மற்றும் தாதுக்களை உறிஞ்சி வளருகின்றன. இந்த பிரிவில் வெள்ளை பட்டன், சிப்பி காளான்கள் போன்ற பல நல்ல உணவை சுவைக்கும் மற்றும் மருத்துவ வகை காளான்கள் அடங்கும்.

இரண்டாவதாக, ஒட்டுண்ணிகள் என்ற பூஞ்சை காளான் உயிருள்ள மரங்கள் மற்றும் தாவரங்களில் வளர்ந்து, ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி செழிப்பாக வளரும். இவற்றை காளான் கொலையாளிகள் என்கின்றனர். இதற்கு காரணம், ஒரு மரம் விழுந்து விட்டால் அதன் மேல் தோன்றும் இந்த காளான்கள் அந்த மரத்தின் மிச்சம் மீதி சத்துக்களை உறிஞ்சி இல்லாமல் செய்து விடும்.

மூன்றாவதாக, மைக்கோரைசா வகை காளான்கள். இவை உயிருள்ள மரங்களின் வேர்களில் வளர்ந்து ஒரு கூட்டு வாழ்வை ஏற்படுத்தி, மரத்தில் இருந்து ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்கின்றன.

நிலத்தில் மற்றும் தாவரங்களில் சத்துக்களை உறிஞ்சி வாழும் காளான்களில் இயற்கையாகவே பல விதமான சத்துக்கள் நிறைந்துள்ளதால் சத்தான உணவாக கருதப்படுகிறது. ஆனால், அனைத்து காளான்களும் உண்ணத்தகுந்தவை அல்ல.

Tags:    

Similar News