லைஃப்ஸ்டைல்
கொரோனாவில் இருந்து மீளவைக்கும் உணவுத்திட்டம்

கொரோனாவில் இருந்து மீளவைக்கும் உணவுத்திட்டம்

Published On 2021-09-07 04:34 GMT   |   Update On 2021-09-07 07:26 GMT
இன்றைய காலகட்டத்தில் கொரோனா அச்சுறுத்தலை சமாளிப்பதற்கு ஊட்டச்சத்துக்கள் விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதாகிறது.
தேசிய ஊட்டச்சத்து வாரம் செப்டம்பர் 1 முதல் 7-ந் தேதி வரை கொண்டாடப்படுகிறது. ஆரோக்கியமான உணவுகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கம். இன்றைய காலகட்டத்தில் கொரோனா அச்சுறுத்தலை சமாளிப்பதற்கு ஊட்டச்சத்துக்கள் விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதாகிறது.

கொரோனா நோய்த்தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு ஊட்டச்சத்துக்கள் மிக்க உணவு பழக்கத்தை பலரும் கடைப்பிடிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி சிகிச்சையில் இருந்து மீள்பவர்கள் ஊட்டச்சத்து விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

1. புரதம் நிறைந்த உணவுகள்:

கொரோனா பாதிப்பின்போது புரதச்சத்து உள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுவது உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும். பால், பாலாடைக்கட்டி, மீன், முட்டை, பருப்பு, தயிர், நன்கு வேகவைத்து சமைக்கப்பட்ட இறைச்சிகள் போன்றவற்றை தினசரி உணவு திட்டத்தில் சேர்த்துக்கொள்ளலாம். இவை கொரோனா தொற்று பிடியில் இருந்து விரைவாக மீள்வதற்கு வழிவகை செய்யும் முக்கியமான புரத உணவுகளாகும்.

2. ப்ரீ பயாடிக்குகள் - புரோ பயாடிக்குகள்:

இவை இரண்டும் உள்ளடங்கி இருக்கும் உணவுகளை உட்கொள்வது இயற்கையான வழியில் உடல் ஆரோக்கியத்தை பேண உதவும். ஏனெனில் இந்த உணவுகளில் நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன. குறிப்பாக வாழைப்பழங்கள், வெங்காயம், பிரெட், தயிர், ஊறுகாய் போன்றவை உணவு பட்டியலில் இடம்பெற வேண்டும். இவை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் கொரோனாவுக்கு பிந்தைய ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். ‘புரோ பயாடிக்குகள் மற்றும் ப்ரீ பயாடிக்குகள் நச்சுக்களை எதிர்த்து போராடக்கூடியவை. உடலில் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சுதலையும் அதிகப்படுத்தக்கூடியவை’ என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

3. பருப்பு மற்றும் காய்கறி சூப்கள்:

பருப்பு மற்றும் காய்கறி சூப்களில் புரதம் அதிகமாகவும் கலோரிகள் குறைவாகவும் இருக்கும். இதனை மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு முன்பு உட்கொள்ளலாம். அவற்றுடன் ஊட்டச்சத்து கொண்ட மசாலா பொருட்களையும் சேர்த்துக்கொள்ளலாம். கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் காய்கறி அல்லது பருப்பு சூப் ஒரு கப் பருகுவது நன்மை தரும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

4. மசாலா:

லவங்கப்பட்டை, ஏலக்காய், கிராம்பு போன்ற மசாலாக்கள் சுவாச ஆரோக்கியத்திற்கு நன்மை தரக்கூடியவை. கொரோனாவில் இருந்து குணமடைந்த நோயாளிகளுக்கு மஞ்சள் முக்கியமான மசாலா பொருள். பாலில் மஞ்சளை சேர்த்து பருகலாம். இந்த அனைத்து மசாலா பொருட்களையும் கொண்ட பானம் தொண்டை பிரச்சினைகளை போக்கும். நுரையீரல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும்.

5. வைட்டமின் சி

கொரோனாவில் இருந்து மீண்டு வரும் நோயாளிகளுக்கு வைட்டமின் சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கேப்சிகம், சிட்ரஸ் பழங்கள், எலுமிச்சை, பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி போன்ற வைட்டமின் சி சத்து கொண்ட உணவு பொருட்களை உட்கொள்ளலாம். இவை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும். அதிக அளவு வைட்டமின் சி நுகர்வது, கொரோனாவில் இருந்து விரைவில் மீட்டெடுக்கும் என்கிறது ஆய்வு முடிவு.

காரமான மற்றும் எண்ணெய் நிறைந்த உணவுகள், பேக்கரி பதார்த்தங்கள், சுத்திகரிக்கப்பட்ட உணவு பொருட்கள், மது போன்றவற்றை தவிர்த்துவிட வேண்டும்.
Tags:    

Similar News