லைஃப்ஸ்டைல்
கை, கால்களில் நரம்புகள் தெரிந்தால்...

கை, கால்களில் நரம்புகள் தெரிந்தால்...

Published On 2021-09-01 07:08 GMT   |   Update On 2021-09-01 09:13 GMT
சிலருக்கு கைகள், கால்களில் நரம்புகள் நன்கு புடைத்தபடி வெளியே தெரியும். சிலருக்கு இளம் பருவத்திலேயே கை, கால்களில் நரம்புகள் வெளியே தெரிய தொடங்கும்.
சிலருக்கு கைகள், கால்களில் நரம்புகள் நன்கு புடைத்தபடி வெளியே தெரியும். பெரும்பாலும் வயதானவர்களுக்குதான் இந்த பிரச்சினை எட்டிப்பார்க்கும். சிலருக்கு இளம் பருவத்திலேயே கை, கால்களில் நரம்புகள் வெளியே தெரிய தொடங்கும். கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும்போது சிலருக்கு பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும்.

அத்தகைய கடினமான பயிற்சிமுறைகள் தசை கடினமாக்குவதற்கும், நரம்புகளை தோலின் மேற்பரப்பில் தள்ளுவதற்கும் காரணமாகிவிடும். தமனிகளில் ரத்த அழுத்தம் அதிகரிப்பதாலும் இந்த பாதிப்பு ஏற்படும். சரும பராமரிப்பில் கவனம் செலுத்தாவிட்டாலும் இத்தகைய பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும்.

பலர் முகத்திற்கு தவறாமல் அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்துவார்கள். ஆனால் கை, கால்களை பராமரிப்பதற்கு கவனம் செலுத்தமாட்டார்கள். அதன் காரணமாகவும் கைகளில் நரம்புகள் புடைத்து வயதான தோற்றத்தில் காட்சியளிக்கத்தொடங்கும். சருமத்தை போலவே கை, கால்களுக்கும் போதுமான பராமரிப்பைக் கொடுக்க தொடங்கினால் நரம்புகள் தெரிவது குறைந்து பொலிவான தோற்றத்துடன் காட்சியளிக்க தொடங்கும். அதேசமயத்தில் வயதாகிவிட்டால் உடலில் கொழுப்பின் அளவு குறைந்து கைகளில் சுருக்கங்களுடன், நரம்புகள் தெரிவது தவிர்க்கமுடியாதது.

கை, கால்களில் நரம்புகள் புடைத்துக்கொண்டு இருப்பதற்கு மரபணுக்களும் காரணமாக இருக்கின்றன. குடும்பத்தில் மூதாதையர் யாருக்காவது நரம்புகள் புடைத்திருந்தால் மற்றவர்களுக்கும் அந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. உடலில் சரியான அளவில் கொழுப்புகள் இருந்தால் நரம்புகள் புடைக்கும் பிரச்சினை எட்டிப்பார்க்காது.

உடலில் போதுமான அளவு கொழுப்பு இல்லாவிட்டால் ஊட்டச்சத்து நிபுணரை அணுகுவது நல்லது. உடல் எடை குறைய ஆரம்பிக்கும்போது, சருமத்திற்கு அடியில் உள்ள கொழுப்பு உருக ஆரம்பித்து, நரம்புகள் வெளிப்பட தொடங்கும். எடை இழப்பின்போது அப்படி தெரிவது இயல்பானது. இருப்பினும் வலி ஏதேனும் இருந்தால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.
Tags:    

Similar News