லைஃப்ஸ்டைல்
உடல் பருமன்

உடல் பருமன் ஒரு குறையா?

Published On 2020-06-06 08:57 GMT   |   Update On 2020-06-06 08:57 GMT
குண்டாக இருப்பது ஆபத்து என்ற எண்ணம் மனதில் பதிய வைக்கப்பட்டுவிட்டதால் பலருக்கும் தங்களது உடல் பெரும் பிரச்சினையாக உருவாகிவிட்டது.
ஐந்து விரல்களும் ஒன்றுபோல் இல்லை‘ என்பார்கள். அதேபோல் மனிதர்களிலும் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான உடலமைப்பை கொண்டிருக்கிறார்கள். உயரம் குரல் எடை தலைமுடி நிறம் என ஒவ்வொருவருக்கும் பல்வேறு வித்தியாசங்கள் இருக்கின்றன. இதில் ஆரோக்கியமான நபர் என்பதை உருவத்தின் அடிப்படையில் எல்லாம் சொல்லிவிட முடியாது. ஓரளவு கணிக்கலாம் அவ்வளவுதான். வி‌‌ஷயத்துக்கு வருவோம். உடல் பருமன் என்பது தவிர்க்க வேண்டியது பல நோய்களை வரவழைக்கக் கூடியது என்று மருத்துவர்கள் ஆலோசனை சொல்லி வருகிறார்கள் என்பது உண்மைதான். கட்டான உடலமைப்பை பராமரிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சொல்லப்பட்ட மருத்துவ ஆலோசனை எதிர்மறை பிரசாரமாக சமீபகாலங்களில் மாறிவிட்டது.

குண்டாக இருப்பது ஆபத்து என்ற எண்ணம் மனதில் பதிய வைக்கப்பட்டுவிட்டதால் பலருக்கும் தங்களது உடல் பெரும் பிரச்சினையாக உருவாகிவிட்டது. எடையைக் குறைக்க வேண்டும் என்று சாப்பிடாமல் இருப்பது பிட்னஸ் பற்றிய புரிதல் இல்லாமலேயே உடற்பயிற்சிகள் செய்ய முயற்சிப்பது மன உளைச்சலுக்கு ஆளாவது என்று தற்போது பலரும் அவதிப்பட்டு வருகிறார்கள். ஒல்லியாக இருப்பதுதான் ஆரோக்கியமா? குண்டாக இருப்பவர்கள் எல்லோருமே நோயாளிகளா? இதற்கு என்ன செய்ய வேண்டும்?

ஒல்லியாக இருப்பவர்கள் எல்லோரும் ஆரோக்கியமானவர்களும் இல்லை. குண்டாக இருப்பவர்கள் எல்லாரும் நோயாளிகளும் இல்லை. உடல் பருமனாக இருப்பவர்களும் சுறுசுறுப்பாக எல்லா வேலைகளையும் செய்கிறார்கள். அவர்களால் நன்றாக மூச்சுவிட முடியும். உடலும் நல்ல வலிமை மற்றும் நெகிழ்ச்சித் தன்மையோடு இருக்கும். மூட்டுவலி இடுப்புவலி முதுகு வலி என உடலில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் ஆரோக்கியமாகவே இருப்பார்கள். ஏனெனில் குழந்தை பருவத்திலிருந்தே அவர்களது உடல் பருமனுக்கேற்றவாறு உடல் தகவமைத்து கொண்டுவிடும். எனவே குண்டாக இருப்பது பிரச்சினை அல்ல. ஒல்லியாக இருந்துவிட்டு குண்டாக ஆரம்பிக்கும்போதுதான் அது மருத்துவர்கள் சொல்வதுபோல் கவனத்துக்குரியதாகிறது.

ஒல்லியாக இருப்பவர்கள் உடலிலும் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கும். நன்றாக வளைந்து நெளிந்து வேலை செய்ய முடியாது. மூச்சு வாங்கும். நாம்தான் ஒல்லியாக இருக்கிறோமே உடற்பயிற்சி உணவுகட்டுப்பாடு எல்லாம் நமக்கு எதற்கு என்ற மனநிலை. சிறு வயதில் விளையாட்டு நடனம் என சுறுசுறுப்பாக இருந்துவிட்டு பருவ வயதிற்குப்பிறகு திடீரென்று அதையெல்லாம் நிறுத்திவிட்டு இயக்கமே இல்லாத நிலைக்கு மாறும்போது உடலில் கொழுப்பு சேர்ந்து எடைபோட்டு விடுவார்கள்.

25 வயதுக்குப் பிறகு ஒவ்வொரு வருடமும் மெட்டபாலிச விகிதம் 3 சதவீதம் கூடிக்கொண்டே போகும். இந்த நேரத்தில்தான் இயக்கமற்ற வாழ்க்கை முறை அதிக கலோரிகள் உள்ள உணவை எடுத்துக் கொள்வது நண்பர்களுடன் அடிக்கடி வெளியே சாப்பிடுவது மதுப்பழக்கம் போன்ற எல்லாமும் சேர்ந்து கொண்டு அவர்களை அறியாமலேயே எடை கூடிவிடுகிறது.
Tags:    

Similar News