உடற்பயிற்சி

கால்களை உறுதியாக்கும் அஷ்ட சந்திராசனம்

Published On 2022-08-03 05:50 GMT   |   Update On 2022-08-03 05:50 GMT
  • இடுப்பு, முட்டியில் பிரச்சனை உள்ளவர்கள் இவ்வாசனத்தை தவிர்க்கவும்.
  • முதுகுத் தசைகளை உறுதியாக்குகிறது.

வடமொழியில் 'அஷ்ட' என்றால் 'எட்டு' என்று பொருள்; 'சந்திர' என்பது சந்திரனைக் குறிக்கும். இது ஆங்கிலத்தில் High Lunge Pose என்றும் Crescent High Lunge Pose என்றும் அழைக்கப்படுகிறது.

அஷ்ட சந்திராசனத்தில் சுவாதிட்டானம் மற்றும் மணிப்பூரக சக்கரங்கள் தூண்டப்படுகின்றன. மணிப்பூரகம் பிரபஞ்ச ஆற்றலை ஈர்க்கிறது, சுவாதிட்டானம் படைப்பாற்றலை வளர்க்கிறது. அஷ்ட சந்திராசனத்தைத் தொடர்ந்து பயிலும் போது தன்மதிப்பு வளர்வதோடு மனநலமும் வளர்கிறது.

பலன்கள்

முதுகுத்தண்டை நீட்சியடையச் செய்கிறது. முதுகுத் தசைகளை உறுதியாக்குகிறது. நுரையீரலைப் பலப்படுத்துகிறது. இருதய நலனைப் பாதுகாக்கிறது.

வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. உடலின் நெகிழ்வுத்தன்மையை வளர்க்கிறது. உடல் ஆற்றலை வளர்க்கிறது. மூட்டுகளை பலப்படுத்துகிறது. கால்களை உறுதியாக்குகிறது

செய்முறை

விரிப்பில் நிற்கவும். இரண்டு பாதங்களுக்கு இடையில் சற்று இடைவெளி விட்டு நிற்கவும். மூச்சை வெளியேற்றியவாறு வலது காலை 3 முதல் 4 அடி பின்னால் வைக்கவும். கால் விரல்கள் தரையில் இருக்க வேண்டும். இடது காலை மடக்கவும்; இடது முட்டியும் இடது பாதமும் நேர்க்கோட்டில் இருக்குமாறு வைக்கவும்.

மூச்சை உள்ளிழுத்தவாறு கைகளைத் தலைக்கு மேல் உயர்த்தவும். உள்ளங்கைகள் ஒன்றை ஒன்று பார்த்தவாறு வைக்கவும். நேராகப் பார்க்கவும். 20 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின் ஆரம்ப நிலைக்கு வரவும். பின் இடது காலைப் பின்னால் வைத்து பயிலவும்.

குறிப்பு

இடுப்பு மற்றும் முட்டியில் தீவிர பிரச்சினை உள்ளவர்கள் இவ்வாசனத்தைத் தவிர்க்கவும்.

Tags:    

Similar News