வழிபாடு

ஊத்துக்குளி கதித்தமலை கோவிலில் மலைத்தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

Published On 2023-02-08 08:43 GMT   |   Update On 2023-02-08 08:43 GMT
  • இன்று இரவு சுப்பிரமணியசாமி வள்ளி தெய்வானையுடன் புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா நடக்கிறது.
  • நாளை மஞ்சள் நீராட்டு விழாவுடன் தைப்பூச தேர் திருவிழா நிறைவடைகின்றது.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி கதித்தமலை வெற்றி வேலாயுதசாமி கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த மாதம் 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடை பெற்று வருகிறது. கடந்த 5-ந் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்வான கீழ் தேரோட்டம் நடைபெற்றது.

இன்று (புதன்கிழமை) காலை 7 மணிக்கு கதித்த மலை ஆண்டவருக்கு மகா அபிஷேகம், தீபாராதனையும், கதித்தமலை ஆண்டவர் சாமி ரத ஆரோகணம், மலைதேர் வடம் பிடித்தல் நடைபெற்றது. பக்தர்களும், பொதுமக்களும் பக்தி பரவசத்துடன் அரோகரா, முருகா என்ற திரு முழக்கங்களுடன் விண்ணதிர வடம் பிடித்து இழுத்தனர்.

திருமணத்தடை உள்ளவர்கள், பிரிந்த தம்பதியினர் இங்கு பிரார்த்தனை செய்தால் அவர்களின் வேண்டுதல் நிறைவேறும் என்ற ஐதீகம் உள்ளதால் பக்தர்கள் பலர் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

இன்று இரவு மகா தரிசனம், சுப்பிரமணியசாமி வள்ளி தெய்வானையுடன் புஷ்ப பல்லக்கில் சாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (வியாழக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவுடன் தைப்பூச தேர் திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவடைகின்றது.

Similar News