வழிபாடு

நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக 6 அடி உயர மெழுகுவர்த்தியை பெண் ஒருவர் வாங்கி வந்ததையும் படத்தில் காணலாம்.

உத்திரிய மாதா ஆலய ஆண்டு திருவிழா: வேளாங்கண்ணியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Published On 2023-07-08 06:49 GMT   |   Update On 2023-07-08 06:49 GMT
  • சிறுவர் முதல் பெரியவர் வரை கடலில் ஆனந்த குளியல் போட்டனர்.
  • வேளாங்கண்ணியில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இங்கு வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். ஆன்மிக சுற்றுலா தலமாக விளங்கும் வேளாங்கண்ணி கீழை நாடுகளின் 'லூர்து நகர்' என்று அழைக்கப்படுகிறது.

இந்தியாவில் கட்டப்பட்டுள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் 'பசிலிக்கா' என்னும் சிறப்பு அந்தஸ்தை பெற்று விளங்குகிறது. இந்த ஆலயமானது வங்கக்கடற்கரையோரம் அமைந்திருப்பது மேலும் சிறப்பம்சமாகும்.

இங்கு உத்திரிய மாதா ஆலயம் தனியாக அமைந்துள்ளது. இங்கு ஆண்டு திருவிழா மும்பை வசாய் பகுதி மீனவர்கள் சார்பாக நடத்தப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்றுமுன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் (பெரிய ஆலயம்) திருவிழாவுக்கு அடுத்து, உத்திரிய மாதா ஆலய ஆண்டு திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ஏராளமான பொதுமக்கள் வேளாங்கண்ணியில் குவிந்து வருகின்றனர். இதனால் வேளாங்கண்ணி பேராலய வளாகம், கடைத்தெரு, கடற்கரை உள்ளிட்ட இடங்களில் எங்கு பார்த்தாலும் கூட்டம் அலைமோதியது.

வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்கள் நேர்த்திக்கடனாக தென்னங்கன்றுகளை வாங்கி மாதாவுக்கு சமர்ப்பித்தனர்.

மேலும் உடல்நலம் பாதுகாக்கவும், படித்த மாணவர்கள் வேலை வாய்ப்பை பெறுவதற்காகவும், பல்வேறு குறைகள் தீர பேராலய பகுதியில் அமைந்துள்ள சிலுவை பாதையில் முட்டியிட்டு சென்று பழைய மாதா கோவிலில் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

அதேபோல வேண்டுதல் நிறைவேற வேண்டி 6 அடி உயர மெழுகுவர்த்தியையும் கடைகளில் வாங்கி அதனை ஆலயத்தில் ஏற்றி வழிபட்டு வருகின்றனர்.

நேற்று வெயிலின் தாக்கம் குறைந்து இருந்ததால் பகல் முழுவதும் வேளாங்கண்ணியில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. சிறுவர் முதல் பெரியவர் வரை கடலில் ஆனந்த குளியல் போட்டனர்.

Tags:    

Similar News