- வாலி, இந்திரன், எமன் ஆகிய மூவரும், தங்களின் முன்வினைப் பயனால் பறவை மற்றும் விலங்குகளாக பிறக்க நேர்ந்தது.
- இறைவனின் கருவறைக்கு வெளியே வலதுபுறம் அன்னையின் சன்னிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில், பாலாற்றின் தென்கரை பகுதியில் அமைந்துள்ளது, குரங்கணில் முட்டம் என்ற ஊர். பொதுவாக ஊர்களின் பெயர்கள், அந்த தலத்தை வழிபட்டவர்கள் பெயரைக் கொண்டு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையிலே குரங்கு, அணில், காகம் என மூன்று உயிரினங்கள் வழிபட்டு பேறு பெற்றதால், 'குரங்கணில் முட்டம்' என இந்த தலம் வழங்கப்படுகிறது.
வாலி, இந்திரன், எமன் ஆகிய மூவரும், தங்களின் முன்வினைப் பயனால் பறவை மற்றும் விலங்குகளாக பிறக்க நேர்ந்தது. அதன்படி வாலி குரங்காகவும், இந்திரன் அணிலாகவும், எமன் காகமாகவும் உருவம் பெற்று வருந்தி வாழ்ந்து வந்தனர். தங்களுடைய வினைப் பயன் நீங்க கயிலை நாதனை வேண்டி நின்றனர். காஞ்சிபுரத்திற்கு தெற்கே உள்ள சிவாலயம் சென்று வழிபட்டால், அவர்களுடைய வினைப்பயன் நீங்கி பழைய நிலைக்கு திரும்பலாம் என இறைவன் வழிகாட்டினார்.
அதன்படியே இம்மூவரும் வழிபட்டு தங்கள் இயல்பு நிலையை அடைந்தார்கள் என்பது தலபுராணம். இப்படி குரங்கு, அணில், காகம் வழிபட்டு பேறு பெற்ற தலமாக திகழ்வது, குரங்கணில்முட்டம் வாலீஸ்வரர் எனும் சிவாலயமாகும். தொண்டை நாட்டில் பாடல் பெற்ற சிவத்தலங்களில் ஆறாவது தலமாக குரங்கணில்முட்டம் திகழ்கின்றது. கிருஷ்ணதேவராயர், சம்புவராயர் எனப் பல்வேறு மன்னர்களாலும் போற்றப்பட்ட தலமாகவும் இது விளங்குகின்றது.
திருமாகறலில் இருந்து கச்சியம்பதி நோக்கிச் செல்லும் வழியில், இத்திருக்கோவிலின் பெருமை அறிந்து வருகை தந்த திருஞானசம்பந்தர், இவ்வாலயம் பற்றி பதிகம் பாடினார்.
இத்தல இறைவனான வாலீஸ்வரர், மேற்கு நோக்கியபடி எளிய வடிவில் கம்பீரத்துடன் காட்சி தருகின்றார். இவரே 'கொய்யாமலர்நாதர்' என்றும், மலைமீது சுயம்புவாக தோன்றியதால் 'கொய்யாமலைநாதர்' என்றும் அழைக்கப்படுகின்றார். கருவறையில் வழக்கமாக காணப்படும் துவாரபாலகர்களுக்குப் பதிலாக, வலம்புரி விநாயகரும், முருகப்பெருமானும் அமைந்துள்ளனர். இத்தல இறைவனை வழிபட்டால், முன்வினைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.
இறைவனின் கருவறைக்கு வெளியே வலதுபுறம் அன்னையின் சன்னிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. அன்னையின் திருப்பெயர், 'இறையார் வளையம்மை' என்பதாகும். அன்னை சிறிய வடிவில் எழிலான கோலத்தில் தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். அன்னையின் பெயரை 'இறையார் வளையாளை ஓர் பாகத்து அடக்கி..' என்ற பாடல் வரிகளால் திருஞானசம்பந்நர் இதனை உறுதி செய்கிறார். இவ்வாலயத்தின் தல மரமாக இலந்தை மரமும், தீர்த்தமாக பிறைச்சந்திர வடிவில் காகம் தன் அலகால் கீரிய 'காக்கை மடு'வும் விளங்குகின்றன.
அமைவிடம்
காஞ்சிபுரம் செய்யாறு செல்லும் நெடுஞ்சாலையில், காஞ்சிபுரத்தில் இருந்து தெற்கே சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் தூசி என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து கிழக்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் குரங்கணில் முட்டம் ஊர் இருக்கிறது.