வழிபாடு

இன்று சித்திரை 2-வது செவ்வாய்க்கிழமை : வைத்தீஸ்வரன் கோவிலில் 1 லட்சம் பக்தர்கள் குலதெய்வ வழிபாடு

Published On 2023-04-25 13:20 IST   |   Update On 2023-04-25 13:20:00 IST
  • சீர்வரிசை பொருட்களுடன் பாதயாத்திரையாக வந்து தரிசனம் செய்தனர்.
  • சிறப்பு வழிபாட்டில் பங்கேற்று தையல்நாயகி அம்மனை தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன்கோயிலில் தேவார பாடல் பெற்ற தையல்நாயகி அம்மன் சமேத வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. இத்தலத்தில் செல்வமுத்துக்குமர சுவாமியும், நவகிரகங்களில் செவ்வாய் பகவானும் தனி சன்னதியில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் 2-வது செவ்வாய்கிழமை குலதெய்வ வழிபாடு நடத்துவதற்காக, காரைக்குடி, கந்தர்வகோட்டை, சிவகங்கை, பரமக்குடி, மானாமதுரை, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வைத்தீஸ்வரன்கோயிலுக்கு வருவது வழக்கம்.

அதன்படி இந்தாண்டும் திரளான மக்கள் வழிபாடு செய்ய வந்துள்ளனர். இதற்காக நகரத்தார் மக்கள் சித்திரை மாதம் முதல் செவ்வாய் கிழமை விரதம் இருந்து புறப்பட்டு இரண்டாவது செவ்வாய் கிழமையான இன்று காலை இங்கு வந்து சேர்ந்தனர்.

குலதெய்வ வழிபாடாகவும் அதே சமயம் தையல்நாயகி அம்மன் தங்கள் ஊர் பெண் என்ற ஐதீகத்தின்படி மக்கள் சீர்வரிசையை பொருட்களை 51 கூண்டு வண்டிகளில் ஏற்றி பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த ஆண்டு பாதயாத்திரையாக சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். அங்கு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பங்கேற்று தையல்நாயகி அம்மனை தரிசனம் செய்தனர்.

தாங்கள் வேண்டுதலுக்காகவும் வழிநடைக்கு துணையாகவும் கொண்டு வந்த மஞ்சள் தடவிய கம்புகளை வேண்டுதல் நிறைவேறியதற்கு காணிக்கையாக கோவில் கொடிமரத்தில் செலுத்தினர். மீண்டும் மறு வேண்டுதல் நிறைவேற அங்கிருந்து ஒரு குச்சியை தங்கள் வீடுகளுக்கு கொண்டு சென்றனர்.

திருவிழாவை முன்னிட்டு 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்கள் வசதிக்காக சீர்காழி,மயிலாடுதுறை, தஞ்சை,திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்கபட்டு வருகிறது.

Tags:    

Similar News