வழிபாடு

வள்ளலார் சித்திப்பெற்ற திருஅறை தரிசனம்

Published On 2023-02-08 05:51 GMT   |   Update On 2023-02-08 05:51 GMT
  • மேட்டுக்குப்பத்தில் திருஅறை தரிசனம் நடைபெற்றது.
  • லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இறைவன் ஜோதி வடிவானவன் என்பதை உலகுக்கு உணர்த்திய ராமலிங்க அடிகளார், கடலூர் மாவட்டம் வடலூரில் சத்தியஞான சபையை நிறுவினார். இங்கு மாதந்தோறும் பூச நட்சத்திரத்தன்று 6 திரைகள் மட்டும் விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும். ஆனால் தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரத்தன்று 7 திரைகளையும் விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும். இந்த ஆண்டு தைப்பூச விழா கடந்த 5-ந்தேதி கோலாகலமாக நடைபெற்றது.

இதில் 6 காலங்களில் நடந்த ஜோதி தரிசனத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதன் தொடர்ச்சியாக வள்ளலார் சித்திப்பெற்ற மேட்டுக்குப்பத்தில் திருஅறை தரிசனம் நேற்று நடைபெற்றது. இங்குள்ள ஒரு அறைக்கு உள்ளே சென்ற வள்ளலார், உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு, அங்கு சித்தி பெற்றார். அந்த அறை திறக்கப்பட்டு, தீபம் காண்பிப்பதே திருஅறை தரிசனம் என்று அழைக்கப்படுகிறது.

அதன்படி நேற்று மேட்டுக்குப்பத்தில் நடந்த திருஅறை தரிசனத்துக்காக, வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய (பேழை) பெட்டியை சத்திய ஞானசபையில் இருந்து பூக்களால் அலங்கரித்து காலை 6 மணிக்கு தூக்கிக்கொண்டு ஊர்வலமாக புறப்பட்டனர். மேட்டுக்குப்பத்தில் உள்ள திருமாளிகையை ஊர்வலம் சென்றடைந்தது. இதை தொடர்ந்து திருஅறை தரிசனம் தொடங்கியது. திருஅறை முன்பு திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாலை 5 மணி வரை திரு அறை தரிசனம் நடைபெற்றது

Tags:    

Similar News