வழிபாடு

கோவில் முதன்மை வாசலில் சூரிய ஒளி உள்ளே விழும் காட்சி.

உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு தொடங்கியது

Published On 2022-12-17 07:09 GMT   |   Update On 2022-12-17 07:09 GMT
  • மார்கழி மாதம் முழுவதும் சூரிய ஒளிக்கதிர்கள் நேரடியாக மூலவர் மீது விழுகிறது.
  • இந்த நிகழ்வு சுமார் 10 நிமிடங்கள் தொடர்ந்தது.

தமிழகத்தில் உள்ள பழமையான சிவன் கோவில்களில் ஒன்றாக நெல்லை மாவட்டம் உவரியில் உள்ள சுயம்புலிங்க சுவாமி கோவில் உள்ளது.

இங்கு சுவாமி சுயம்புவாக தோன்றி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையும், பெருமையும் கொண்ட இக்கோவில் வங்க கடலோரம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது.

இக்கோவிவில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் முழுவதும் சூரிய ஒளிக்கதிர்கள் நேரடியாக மூலவர் சுயம்புலிங்க சுவாமி மீது விழுந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று மார்கழி மாத பிறப்பையொட்டி அதிகாலையிலேயே கோவிலில் நடை திறக்கப்பட்டு தனுர் மாத திருப்பள்ளி எழுச்சி பூஜை தொடங்கியது.

அதைத்தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேகம், உதய மார்த்தாண்ட பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடந்தது.

அப்போது காலை 6.40 மணியளவில் சூரிய ஒளி கதிர்கள் கோவிலின் முதன்மை வாயில் வழியாக மூலவர் சுயம்புலிங்கசுவாமி மீது விழும் அபூர்வ நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்வு சுமார் 10 நிமிடங்கள் தொடர்ந்தது. இந்த காட்சியை காண ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன், 'சிவாய நம' கோஷங்கள் எழுப்பியவாறு சுவாமியை வணங்கினர்.

ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் சூரிய பகவானே நேரில் வந்து உவரி சுயம்புலிங்கத்தை வணங்குவதாக இங்கு வரும் பக்தர்கள் கருதுகின்றனர். மேலும் பல்வேறு கோவில்களில் சூரிய ஒளி சுவாமி மீது விழும் நிகழ்வு குறிப்பிட்ட நாட்களில் நடைபெறும்.

ஆனால் உவரியில் உள்ள சுயம்புலிங்க சுவாமி கோவிலில் மட்டும் தான் ஒரு மாதம் முழுவதும் மூலவர் மீது சூரிய ஒளிக்ததிர்கள் படரும் நிகழ்வு நடைபெறுகிறது என்பது இக்கோவிலின் சிறப்பு ஆகும்.

Tags:    

Similar News