திருவாரூர் தியாகராஜர் கோவில் தெப்ப திருவிழா 25-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது
- பஞ்சபூத தலங்களில் பூமிக்குரிய தலமாக உள்ளது.
- உலகிலேயே மிகப் பெரிய தேரான ஆழித்தேர் திருவாரூர் கோவில் தேராகும்.
திருவாரூரில் தியாகராஜர் கோவில் உள்ளது. சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்கும் இக்கோவிலில் மூலவராக புற்றிடம் கொண்டார் அருள்பாலித்து வருகிறார். உற்சவராக தியாகராஜர் அருள்பாலித்து வருகிறார். கமலாம்பிகை தனிச்சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.
இக்கோவில் நாயன்மார்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூத தலங்களில் பூமிக்குரிய தலமாகவும் உள்ளது. உலகிலேயே மிகப் பெரிய தேரான ஆழித்தேர் திருவாரூர் கோவில் தேராகும். அதேபோல கோவிலுக்கு அருகே உள்ள கமலாலய குளம் புண்ணிய தீர்த்தங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. கமலாலயக்குளம் மகாலட்சுமி தவம் புரியும் இடமாக கருதப்படுகிறது.
தியாகராஜர் கோவிலில் உலகப்பிரசித்திப்பெற்ற ஆழித்தேரோட்டம் கடந்த மாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி நடந்தது. ஆழித்தேரோட்டத்தை தொடர்ந்து கமலாலயம் குளத்தில் தெப்ப திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி தியாகராஜர் கோவில் கமலாலய குளத்தில் தெப்ப திருவிழா வருகிற 25-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்கி 27-ந்தேதி (சனிக்கிழமை) வரை 3 நாட்கள் நடக்கிறது.