வழிபாடு

திருப்பரங்குன்றம் கிரிவலப்பாதை சீரமைக்கப்படுமா?: பக்தர்கள் எதிர்பார்ப்பு

Published On 2023-03-24 07:55 GMT   |   Update On 2023-03-24 07:55 GMT
  • 26-ந்தேதி பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
  • ஏப்ரல் 9-ந்தேதி மகா தேரோட்டம் நடக்கிறது.

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வருகின்ற 26-ந்தேதி பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக அடுத்த (ஏப்ரல்) மாதம் 9-ந்தேதி மகா தேரோட்டம் நடக்கிறது. கோவில் வாசலில் இருந்து சுமார் 3 கி.மீ. சுற்றளவு கொண்ட கிரிவலப்பாதையில் பெரியதேர் வலம் வரும்.லட்சக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து தரிசனம் செய்வார்கள்.

தேரோட்டத்திற்கு முதல் நாள் மாலை 6 மணியில் இருந்து விடிய, விடிய கிரிவலத்தில் பக்தர்கள் பல்வேறு நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். கிரிவலப்பாதை சுற்றிலுமாக பக்தர்களுக்கு ஏராளமானோர் தங்களது நேர்த்தியாக அன்னதானம் வழங்குவார்கள். .இதனையொட்டி கிரிவலப்பாதை சீராக இருக்க வேண்டும்.

அவனியாபுரம் ரோடு சந்திப்பில் இருந்து கல்வெட்டு குகை கோவில் வரை சுமார் 1 கி.மீ. சுற்றளவு வயல்வெளி சார்ந்த ஒரு பகுதியில் முட்செடிகள் வளர்ந்துள்ளன. மேலும் கிரிவலப்பாதையில் உள்ள மின்கம்பங்களில் மின்விளக்குகள் கண்சிமிட்டுகிறது. அதனால் குறிப்பிட்ட தூரம் இருள் சூழ்ந்துள்ளது. ஒரு சில மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. கிரிவலப் பாதையை சுற்றி உள்ள தொட்டிகளில் குடிதண்ணீர் நிரப்பப்படாத நிலையே இருந்து வருகிறது.

தேரோடும் பகுதியான தென்பரங்குன்றத்தில் உள்ள நவீன கழிப்பறை பராமரிக்கப்படாத நிலையில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்த முடியாதபடி பூட்டிய நிலையில் உள்ளது. இதனால் பவுர்ணமி தோறும் கிரிவலம் வரக்கூடிய பக்தர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் பங்குனி பெருவிழாவின் மகா தேரோட்டத்திற்கு 2 வாரங்கள் உள்ள நிலையில் கிரிவலப்பாதை முழுமையாக சீரமைக்கப்படாத நிலை இருந்து வருகிறது.

இதுகுறித்து பக்தர்கள் முருகன், மருது ஆகியோர் கூறும்போது, கிரிவலப்பாதையில் வயல் சார்ந்த பகுதியில் முட்செடிகள் முழுமையாக வெட்டுவதோடு கால்களில் நெருஞ்சி முட்கள் குத்தப்படாதபடி எந்திரம் மூலம் குறிப்பிட்ட தூரம் ரோட்டை சமப்படுத்தி செம்மண் பரப்பி பக்தர்கள் சிரமம் இன்றி நடந்து செல்ல வசதி செய்ய வேண்டும்.கடந்த ஆண்டில் விநாயகர் தேரில் சேதமடைந்த மின்கம்பம் சாய்ந்தது. ஆகவே சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும்.தென்பரங்குன்றத்தில் அதிநவீன கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.கிரிவலப் பாதை முழுவதுமாக தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப மாநகராட்சி நிர்வாகம் போர்க்காலநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News