வழிபாடு

திருப்பரங்குன்றம் கோவிலில் பக்தர்களுக்கு நாள்தோறும் பிரசாதம் வழங்கும் திட்டம் விரைவில் தொடக்கம்

Published On 2023-05-24 11:07 IST   |   Update On 2023-05-24 11:07:00 IST
  • தினமும் 175 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
  • ரூ.1.25 கோடியில் திட்டப்பணிகள் நடந்து வருகிறது.

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தினமும் மதியம் 12 மணியளவில் 175 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு என்று 125 பேரும், இந்த கோவிலின் துணை கோவிலான சொக்கநாதர் கோவிலுக்கு என்று 50 பேரும் என தினமும் 175 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி ஒரு கூட்டு, ஒரு பொறியல், ரசம், மோர், சாம்பாருடன் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் வெள்ளிக்கிழமைதோறும் வழக்கமான கூட்டு, பொறியலுடன் கூடுதலாக பாயாசம், வடையுடன் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

கோவில் நிர்வாகம் மற்றும் அய்யப்ப சேவா சங்கத்துடன் முதல்முறையாக கடந்த ஆண்டில் மார்கழி மாதம் முழுவதுமாக தினமும் ஒருவகை என்று காலை 8 மணி முதல் பகல் 11 மணி வரையிலும் சுமார் 500 பக்தர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. இதேபோல அடுத்த ஆண்டில் கார்த்திகை, மார்கழி ஆகிய 2 மாதங்கள் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு காலை உணவு வழங்கவும் கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்துசமய அறநிலையதுறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் உத்தரவின்பேரில் இந்த கோவிலில் நாள் தோறும் பிரசாதம் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதை முன்னிட்டு தற்போது ரூ.1.25 கோடியில் தனி சமையல் அறை, சமையல் பாத்திரங்கள் மற்றும் பிரசாதம் வழங்க கூடிய திட்டப்பணிகள் தயாராகி வருகிறது.

Tags:    

Similar News