வழிபாடு

தஞ்சை சீனிவாசபுரம் மகா மாரியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

Published On 2025-06-07 17:17 IST   |   Update On 2025-06-07 17:17:00 IST
  • தஞ்சை பெரிய கோவிலில் இருந்து யானை மீது தீர்த்தக்குடம் வைத்து மகா மாரியம்மன் கோவிலுக்கு எடுத்து வரும் நிகழ்வு நடந்தது.
  • பக்தர்கள் தீர்த்தக்குடத்தை தலையில் சுமந்தவாறு கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை சீனிவாசபுரம் சேவப்பநாயக்கன்வாரி வடகரையில் மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற உள்ளது.

விழாவையொட்டி இன்று (சனிக்கிழமை) காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், புண்யாக வாஜனம், பூர்ணாஹூதி நடைபெற்றது. தொடர்ந்து, தஞ்சை பெரிய கோவிலில் இருந்து யானை மீது தீர்த்தக்குடம் வைத்து மகா மாரியம்மன் கோவிலுக்கு எடுத்து வரும் நிகழ்வு நடந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் தீர்த்தக்குடத்தை தலையில் சுமந்தவாறு கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.

அதனைத் தொடர்ந்து, மாலை முதல்கால யாகசாலை பூஜை, பூர்ணாஹூதி நடைபெற உள்ளது. முறையே நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 2-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்று, பூர்ணாஹூதி முடிவடைந்து புனிதநீர் அடங்கிய கடங்கள் புறப்பாடு ஆகி கோவிலை சுற்றி வலம் வந்து விமான கலசத்திற்கு கும்பாபிஷேகமும் தொடர்ந்து, கற்பக விநாயகர், மகா மாரியம்மன், முனீஸ்வரர், நவக்கிரக பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகமும் நடைபெற்று, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட உள்ளது.

முடிவில் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டு, அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்ய உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை தஞ்சை சீனிவாசபுரம் சேவப்பநாயக்கன்வாரி தெருவாசிகள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News