வழிபாடு

தஞ்சையில், இன்று முத்துப்பல்லக்கு விழா: முருகர், விநாயகர் சாமிகள் பல்லக்கில் எழுந்தருளி விடிய, விடிய வீதி உலா

Published On 2023-06-05 08:09 GMT   |   Update On 2023-06-05 08:09 GMT
  • முத்து பல்லக்கு திருவிழா இன்று ,இரவு தொடங்கி நாளை அதிகாலை வரை நடைபெறுகிறது.
  • நாளை காலை மீண்டும் சுவாமிகள் தங்களது கோவில்களுக்கு சென்றடையும்.

தஞ்சையில் திருஞான சம்பந்தரின் குருபூஜையை முன்னிட்டு முத்துப்பல்லக்கு விழா ஆண்டு தோறும் வைகாசி மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த முத்துப்பல்லக்கில் முருகனும், விநாயகரும் எழுந்தருவர். அவர்கள் எழுந்தருளும் பல்லக்குகள் தெற்கு வீதி, கீழவீதி, மேலவீதி, வடக்குவீதி ஆகிய 4 ராஜவீதிகளிலும் மேளதாளங்கள் முழங்க உலாவரும். முதல்நாள் இரவு புறப்பட்டு மறுநாள் காலை வரை விடிய, விடிய நடைபெறும் இந்த விழாவின் மறுநாள் காலை மீண்டும் சாமிகள் தங்களதுகோவிலுக்கு திரும்புவர்.

அதன்படி இந்த ஆண்டு 108-வது முத்து பல்லக்கு திருவிழா இன்று (திங்கட்கிழமை) இரவு தொடங்கி நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை வரை நடைபெறுகிறது.

தஞ்சை சின்ன அரிசிக்காரத்தெருவில் உள்ள பழனி ஆண்டவர் கோவிலில் இருந்து விநாயகர், முருகன், ஆட்டுமந்தை தெருவில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் இருந்து முருகர், மானம்புச்சாவடி விஜயமண்டப தெருவில் உள்ள ஜோதி விநாயகர் கோவிலில் இருந்து விநாயகர், முருகப்பெருமான், குறிச்சி தெருவில் உள்ள முருகன், மேலஅலங்கம் சுப்ரமணிய சாமி கோவிலில் உள்ள முருகர், கீழவாசல் வெள்ளை விநாயகர், உஜ்ஜையினி காளி கோவிலில் இருந்து கல்யாண கணபதி, தெற்கு ராஜ வீதி கமலரத்தின விநாயகர், காமராஜர் காய்கறி மார்க்கெட் செல்வ விநாயகர், வடக்கு வாசல் வட பத்திரகாளி அம்மன் கோவிலில் இருந்து முருகர், விநாயகர், மேல வெளி ரெட்டிப்பாளையம் சாலை வெற்றி முருகன் உள்பட 11 கோவில்களில் இருந்து சுவாமிகள் முத்துப் பல்லக்கில் எழுந்தருளி இரவில் தஞ்சையில் உள்ள 4 ராஜ வீதிகளிலும் வீதி உலா வர உள்ளது.

இந்த பல்லக்குகள் எல்லாம் அந்தந்த கோவில்களில் இருந்து புறப்பட்டு தஞ்சை தெற்கு வீதி, கீழவீதி, மேலவீதி, வடக்கு வீதி ஆகிய வீதிகளில் வலம் வரும். நாதஸ்வர கச்சேரி மற்றும் வாண வேடிக்கைகளுடன் விடிய விடிய இந்த திருவிழா நடைபெற உள்ளது. நாளை காலை மீண்டும் சுவாமிகள் தங்களது கோவில்களுக்கு சென்றடையும். திருவிழாவை முன்னிட்டு அந்தந்த கோவில்களில் முத்துப் பல்லக்கு தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விடிய, விடிய நடைபெறும் இந்த முத்துப்பல்லக்கு விழாவை ஏராளமான பக்தர்கள் கண்டு களிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News