வழிபாடு

ஏழூர் பல்லக்கு புறப்பாடு நடந்தபோது எடுத்தபடம்.

தஞ்சை கருணாசாமி கோவிலில் 34 ஆண்டுகளுக்குப்பிறகு ஏழூர் பல்லக்கு புறப்பாடு

Published On 2023-06-05 07:43 GMT   |   Update On 2023-06-05 07:43 GMT
  • பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி இன்று நடக்கிறது
  • பல்வேறு வாகனங்களில் சுவாமி அம்பாள் வீதியுலா நடைபெற்றது.

தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துக்குட்பட்ட கோவில்களில் ஒன்றான கரந்தை கருணாசாமி கோவில் என்றழைக்கப்படும் வசிஷ்டேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் மகா உற்சவம் 12 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அப்போது சிறப்பு வாய்ந்த ஏழூர் பல்லக்கும் நடைபெறும். இவ்விழா கடந்த 1988-ம் ஆண்டு வரை அரண்மனை தேவஸ்தானத்தால் நடத்தப்பட்டு வந்தது.

காலப்போக்கில் பல்வேறு காரணங்களால் இந்த விழா நடைபெறவில்லை. இதையடுத்து மீண்டும் ஏழூர் பல்லக்கு விழாவை நடத்த முடிவு செய்து, கடந்த மாதம் 24-ந் தேதி வைகாசி மகா உற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கோவிலில் பல்வேறு வாகனங்களில் சுவாமி அம்பாள் வீதியுலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நாளான நேற்று காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்று, கண்ணாடி பல்லக்கில் சோமாஸ்கந்தர், பெரியநாயகிஅம்மனும், வெட்டிவேர் பல்லக்கில் வசிஷ்டர், அருந்ததி அம்மன் எழுந்தருள கோவிலிலிருந்து ஏழூர் பல்லக்கு புறப்பட்டது. பல்லக்கை தஞ்சை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து பல்லக்கு சுங்கான்திடல், பள்ளியக்ரஹாரம், திட்டை, குலமங்கலம், கூடலூர், குருங்கலூர் வழியாக புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு சென்று நேற்று இரவு தங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் இன்று (திங்கட்கிழமை) காலை புன்னை நல்லூர் மாரியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு, சின்ன அரிசிகாரத் தெரு, கீழவாசல், அரண்மனை, கீழவீதி, தெற்குவீதி, மேலவீதி, வடக்கு வீதி, சிரேஸ் சத்திரம், பூக்குளம், செல்லியம்மன்கோவில் வழியாக கருணாசாமி கோவிலை சென்றடைய உள்ளது.

பின்னர் இரவு 7 மணியளவில் பல்லக்கில் உள்ள சுவாமி, அம்மனுக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் அந்தந்த கிராமத்தினர் செய்துள்ளனர்.

Similar News