வழிபாடு

சுசீந்திரம் கோவிலில் சித்திரை விஷு கனி காணும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடக்கிறது

Published On 2023-04-12 08:25 GMT   |   Update On 2023-04-12 08:25 GMT
  • பக்தர்களுக்கு கை நீட்டம் வழங்கப்படும்.
  • தமிழ் புத்தாண்டையொட்டி வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறும்.

குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை, ஆவணி, மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் 10 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அது போல தமிழ் புத்தாண்டு மற்றும் விஷு கனி காணும் நிகழ்ச்சியும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த கோவிலில் பூஜைகள் அனைத்தும் கேரள முறைப்படியும், கேரள பஞ்சாங்கத்தின்படியும் நடப்பது வழக்கம். இதனால் சித்திரை விஷு கணி காணும் நிகழ்ச்சி இந்த ஆண்டு கேரள முறைப்படி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி நாளை மறுநாள் தாணுமாலய சாமிக்கு தங்க அங்கி சார்த்தப்பட்டு, பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க குடங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு பக்தர்கள் விஷு கனி காணும் வகையில் அன்று ஒரு நாள் மட்டும் பார்வைக்கு வைக்கப்படும். தாணுமாலய சாமி சன்னதி எதிரே உள்ள செண்பகராமன் மண்டபத்தில் தட்சிணாமூர்த்தியின் திரு உருவம் பல வண்ண மலர்களால் வரையப்பட்டு இருக்கும். அதன் அருகே ஆள் உயர கண்ணாடி வைக்கப்பட்டு அதன் மீது தங்க ஆபரணங்கள் சூட்டப்பட்டு, காய்கனிகள் அனைத்தும் படைத்து பக்தர்கள் காணும் வகையில் பார்வைக்கு வைக்கப்படுவதுடன், பக்தர்களுக்கு கை நீட்டமும் வழங்கப்படும்.

தமிழ் புத்தாண்டையொட்டி காலை மற்றும் மாலை வேளையில் வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர்கவிதா பிரியதர்ஷினி தலைமையில், கோவில் மேலாளர் ஆறுமுகதரன் மற்றும் தாணுமாலய தொண்டர் அறக்கட்டளையினரும், பக்தர்களும் இணைந்து செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News