சுசீந்திரம் கோவிலில் மாசி திருவிழா 25-ந்தேதி தொடங்குகிறது
- திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.
- திருக்கல்யாண நிகழ்ச்சியில் தாம்பூலப்பை வழங்கப்படுகிறது.
சுசீந்திரம் தாணுமா லயன் சுவாமி கோவி லில் மாசி திருவிழா 9 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா வருகிற 25-ந்தேதி தொடங்குகிறது. மார்ச் 4-ந்தேதி அறம் வளர்த்த அம்மன், பறக்கை காசி விஸ்வநாதர் கோவிலில் கதிர் குளிப்பு நிகழ்ச்சியில் அலங்கார கோலத்தில் ஆசிரமம் கோவிலுக்கு எழுந்தருளுகிறார்.
அன்று மாலையில் ஆலய பணியாளர்கள் அம்மனின் சார்பில் சீர் வரிசைகளை நான்கு ரத வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு வந்து கோவிலில் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலையில் அலங்கார கோலத்தில் ஆசிரமம் கோவிலில் இருந்து எழுந்தருளும் அறம் வளர்த்த அம்மன் பக்தர்கள் புடை சூழ, மேள தாளங்கள் முழங்க வாகன பவனியாக சுசீந்திரம் கோவில் வந்தடைகிறார்.
திருக்கல்யாணம் தொடர்ந்து அன்று இரவு 7.30 மணிக்கு விஷ்ணு சுவாமி முன்னிலையில் அலங்கார மண்டபத்தில் நடக்கும் திருமண விழாவில் அறம்வளர்த்த அம்மன் கழுத்தில் சிவபெருமான் மங்கல நாண் பூட்டும் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. திருக்கல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பெண் பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், மங்கல கயிறு, தேங்காய், வெற்றிலை, பாக்கு சேர்ந்த தாம்பூலப்பை வழங்கப்படுகிறது.
மறுநாள் மாலை 5 மணிக்கு தேர் திருவிழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.