வழிபாடு

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம் இன்று தொடங்குகிறது

Published On 2022-10-13 12:19 IST   |   Update On 2022-10-13 12:19:00 IST
  • இந்த விழா இன்று தொடங்கி 21-ந்தேதி வரை நடக்கிறது.
  • 21-ந்தேதி நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருள்வார்.

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மற்றும் ஐப்பசி மாதத்தில் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம் 9 நாட்கள் சிறப்பாக நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான ஊஞ்சல் உற்சவம் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி 21-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

இதையொட்டி இன்று மாலை 5 மணியளவில் உற்சவர் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, மாலை 5.30 மணியளவில் தங்கக் கொடிமரத்திற்கு கிழக்கில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருள்வார். அங்கு அலங்காரம் வகையறா கண்டருளிய பின் இரவு 7.15 மணி முதல் இரவு 8.15 மணிவரை பெருமாள் உபய நாச்சியார்களுடன் ஊஞ்சலில் ஆடியவாறு பக்தர்களுக்கு சேவை சாதிப்பர். இரவு 9 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு மூலஸ்தானம் சேருவர்.

நாளை முதல் 18-ந் தேதி வரை நம்பெருமாள் மட்டும் தினமும் மாலை ஊஞ்சல் மண்டபம் வந்து ஊஞ்சல் உற்சவம் கண்டருள்வார், 7-ம் திருநாளான 19-ந் தேதி உபயநாச்சியார்களுடன் நம்பெருமாள் புறப்பட்டு மாலை 6.45 மணியளவில் கொட்டாரத்தில் நெல்அளவை கண்டருளிய பின் தாயார் சன்னதியில் திருவந்திக்காப்பு கண்டருளி இரவு 7.15 மணியளவில் ஊஞ்சல் மண்டபம் சேருவர். இரவு 7.45 மணி முதல் ஊஞ்சல் உற்சவம் கண்டருளிய பின் இரவு 9 மணியளவில் மூலஸ்தானத்திற்கு புறப்படுவர்.

நிறைவு நாளான 21-ந் தேதி காலை 9.15 மணியளவில் நம்பெருமாள் புறப்பட்டு காலை 9.45 மணியளவில் சந்திரபுஷ்கரணிக்கரையில் தீர்த்தவாரி கண்டருள்வார், பின்னர் காலை 10.15 மணியளவில் ஊஞ்சல் மண்டபம் சேர்ந்த பின் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெறும்.

மாலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை ஊஞ்சல் சேவை நடைபெறும். அதன்பின் அங்கிருந்து புறப்பட்டு பெருமாள் மூலஸ்தானம் சென்றடைவார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில், அர்ச்சகர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News