வழிபாடு

மேற்கு கோபுர வாசலை தருமபுரம் ஆதீனம் திறந்து வைத்த போது எடுத்த படம்.

40 ஆண்டுகளுக்கு பிறகு சீர்காழி சட்டைநாதர் கோவில் மேற்கு கோபுர வாசல் திறப்பு

Published On 2023-05-19 07:36 GMT   |   Update On 2023-05-19 07:36 GMT
  • புனித நீர் அடங்கிய கலசம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
  • மேற்கு கோபுர வாசல் தற்போது பக்தர்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக திறக்கப்பட்டுள்ளது.

சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டை நாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் 32 ஆண்டுகளுக்கு பிறகு, வருகிற 24-ந் தேதி குடமுழுக்கு நடக்கிறது. குடமுழுக்கையொட்டி கோவிலில் திருப்பணிகள் நடந்தது. தற்போது பணகள் நிறைவடைந்துள்ளது. சட்டை நாதர் கோவிலில் உள்ள 4 கோபுர வாசல்களில் மேற்கு கோபுர வாசல் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பூட்டியே வைக்கப்பட்டு இருந்தது. மற்ற 3 கோபுர வாசல்கள் வழியாக மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமியை தரிசனம் செய்து செல்கின்றனர். இந்தநிலையில் நேற்று காலை மேற்கு கோபுர வாசலை திறக்க தருமபுரம் ஆதீனம் முடிவு செய்து அதற்கான பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றது.

தொடர்ந்து புனித நீர் அடங்கிய கலசம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. முன்னதாக பசு, யானை, ஒட்டகம், குதிரை ஆகியவைகளும் ஊர்வலமாக வந்தது.

தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் மேற்கு கோபுர வாசலில் சிறப்பு பூஜைகள் செய்து, புனித நீர் தெளிக்கப்பட்டு கோபுர வாசல் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட உடன் முதலாவதாக பசு, குதிரை, ஒட்டகம், யானை ஆகியவை அதன் வழியே உள்ளே சென்றன.

அதன் பின்னர் மேள, தாளங்கள் முழங்க தருமபுரம் ஆதீனம், பக்தர்கள் சென்றனர். 40 ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்டிருந்த மேற்கு கோபுர வாசல் தற்போது பக்தர்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக திறக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் தமிழ்ச்சங்க தலைவர் மார்க்கோனி, கோவில் திருப்பணி உபயதாரர் முரளி, கோவில் நிர்வாகி செந்தில், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் பந்தல் முத்து, பொறியாளர் செல்வகுமார், கோவி நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News