வழிபாடு

அந்த நிகழ்ச்சியை காண திரண்ட பக்தர்கள் கூட்டத்தையும் படத்தில் காணலாம்.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பரிவேட்டை நிகழ்ச்சியில் திரண்ட பக்தர்கள்

Update: 2022-10-06 06:14 GMT
  • அம்மனுக்கு 8 வகையான திரவியங்களாலும், புனித நீராலும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
  • வெள்ளி குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் நவராத்திரி திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா கடந்த 26-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை, வழிபாடு, அலங்கார தீபாராதனை, அன்னதானம், மாலையில் சமய உரை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள், பரத நாட்டியம், இரவில் வாகன பவனி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தது.

இந்தநிலையில் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பரிவேட்டை திருவிழா 10-ம் நாளான நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை 4.30 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், பன்னீர், இளநீர், சந்தனம், களபம் உள்ளிட்ட 8 வகையான திரவியங்களாலும், புனித நீராலும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர், காலை 10 மணிக்கு கோவிலின் வெளிப்பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் எலுமிச்சம்பழம் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

அதைதொடர்ந்து 10.30 மணிக்கு அன்னதானம், பகல் 11.30 மணிக்கு கோவிலில் இருந்து மகாதானபுரம் நோக்கி அம்மனின் பரிவேட்டை ஊர்வலம் பக்தர்கள் புடைசூழ தொடங்கியது. இந்த ஊர்வலத்தின் தொடக்க நிகழ்ச்சியாக வெள்ளிக்குதிரை வாகனத்தில் அம்மன் கோவிலை விட்டு வெளியே வரும்போது போலீசார் துப்பாக்கி ஏந்தி நின்று அணிவகுப்பு மரியாதை அளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், ஒன்றிய செயலாளர் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் பக்தர்கள் சங்கம் சார்பில் கோவிலில் இருந்து புறப்படும் அம்மனின் பரிவேட்டை ஊர்வலத்தில் யானை, குதிரை, முத்துக்குடை ஊர்வலம், நாதஸ்வரம், பஞ்ச வாத்தியம், செண்டை மேளம், தேவராட்டம், கோலாட்டம், கேரளா புகழ் தெய்யம் ஆட்டம், சிலம்பாட்டம் ஆகியவை நடைபெற்றது.

பரிவேட்டை ஊர்வலம் மாலை 6 மணிக்கு மகாதானபுரத்தில் உள்ள பரிவேட்டை மண்டபத்தை சென்று அடைந்தது. அங்கு பகவதி அம்மன் எழுந்தருளி இருந்த வெள்ளி குதிரை வாகனத்தை வேட்டை மண்டபத்தை சுற்றி 3 முறை வலம் வரச்செய்து வாகனத்தை கிழக்கு நோக்கி நிறுத்தி வைத்தனர்.

பின்னர், பரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. அப்போது, கோவில் மேல்சாந்தி வேட்டை மண்டபத்துக்கு உள்ளே 4 பக்கமும் அம்பு எய்தார். அதன்பிறகு வேட்டை மண்டபத்துக்கு வெளியே 4 திசையை நோக்கி அம்புகளை எய்தார். இறுதியாக ஒரு இளநீரின் மீது அம்பு எய்தார். அம்பு பாய்ந்த இளநீரை கோவில் ஊழியர் ஒருவர் கையில் ஏந்தியபடி அம்மன் எழுந்தருளி இருந்த வாகனத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க ஓடி வலம் வந்தார். இந்த நிகழ்வானது பாணாசுரன் என்ற அரக்கனை அம்மன் அம்பு எய்து வதம் செய்து அழித்ததாக கருதப்படுகிறது.

அதனைத்தொடர்ந்து பரிவேட்டை நிகழ்ச்சி முடிந்ததும் மகாதானபுரத்தில் உள்ள நவநீதசந்தான கோபாலகிருஷ்ணசாமி கோவிலுக்கு முன்பு சென்று நின்றார். அங்கு பகவதி அம்மனுக்கும், நவநீதசந்தான கோபால கிருஷ்ணசாமிக்கும் ஒரே நேரத்தில் தீபாரதனை நடந்தது. பின்னர், அம்மன் வாகன பவனி மகாதானபுரம் மற்றும் பஞ்சலிங்கபுரம் பகுதிக்கு வந்தது.

பின்னர், அம்மன் மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பு பகுதியில் உள்ள காரியக்காரமடத்தில் சிறிது ஓய்வுக்கு பின் வெள்ளி குதிரை வாகனத்தில் இருந்து வெள்ளி பல்லக்கில் எழுந்தருளி மீண்டும் கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டுச் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 8.30 மணிக்கு கன்னியாகுமரி வந்தடைந்ததும் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அதைதொடர்ந்து வருடத்தில் 5 முக்கிய நாட்கள் மட்டுமே திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பகவதி அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவுக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகம் மற்றும் கன்னியாகுமரி பகவதி அம்மன் பக்தர்கள் சங்கத்தினர் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர். பரிவேட்டை திருவிழாவையொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Tags:    

Similar News