வழிபாடு

பாளையங்கோட்டையில் சூரசம்ஹாரம்- திரளான பக்தர்கள் பங்கேற்பு

Published On 2022-10-07 05:10 GMT   |   Update On 2022-10-07 05:10 GMT
  • 12 அம்மன்களுக்கும் தீபாராதனை நடந்தது.
  • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

நெல்லை பாளையங்கோட்டையில் தசரா திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இங்குள்ள ஆயிரத்தம்மன், பேராச்சி அம்மன், முப்பிடாதி அம்மன், முத்தாரம்மன், உச்சிமாகாளி அம்மன், உலகம்மன் உள்ளிட்ட 12 அம்மன்கள் சப்பரங்களில் வீதிஉலா வந்து, பாளையங்கோட்டை ராமர் கோவில் திடல், கோபாலசாமி கோவில் திடல், மார்க்கெட் ஆகிய இடங்களில் அணிவகுத்து நிற்கும். போலீஸ் கட்டுப்பாட்டு அறை அருகே மாரியம்மன் கோவில் முன்பு சப்பரங்களில் எழுந்தருளும் அம்மன்களுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து அங்கு நடைபெறும் சூரசம்ஹார விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா கடந்த 25-ந்தேதி பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதேபோல் பாளையங்கோட்டையில் உள்ள பேராச்சி அம்மன், தூத்துவாரி அம்மன், தெற்கு முத்தாரம்மன், வடக்கு முத்தாரம்மன், யாதவ உச்சிமாகாளி, விசுவகர்ம உச்சிமாகாளி, வடக்கு உச்சிமாகாளி, முப்பிடாதி அம்மன், கிழக்கு உச்சிமாகாளி அம்மன், புதுப்பேட்டை தெரு உலகம்மன் கோவில், புது உலகம்மன் கோவில் ஆகிய அம்மன் கோவில்களிலும் பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மன் கோவில்களில் நவராத்திரி சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆயிரத்தம்மன், முத்தாரம்மன், உச்சிமாகாளியம்மன், உலகம்மன், முப்புடாதி அம்மன் உள்ளிட்ட 12 அம்மன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. மதியம் உச்சிகால பூஜையை தொடர்ந்து இரவு 12 அம்மன் கோவிலிலும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், சிறப்பு பூஜையும் நடந்தது. தொடர்ந்து இரவு 12 அம்மன்களும் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி வீதிகளில் பவனி வந்தனர்.

இதைத்தொடர்ந்து 12 அம்மன் சப்பரங்களும் பாளையங்கோட்டை போலீஸ் கட்டுப்பாட்டு அறை அருகே உள்ள மாரியம்மன் கோவில் எருமை கிடா மைதானத்தில் ஒன்றுகூடி அணிவகுத்து நின்றன. அப்போது விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கோலாகலமாக நடந்தது. பின்னர் 12 அம்மன்களுக்கும் தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இதையொட்டி மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார், துணை போலீஸ் கமிஷனர்கள் உத்தரவின் பேரில் சப்பரங்கள் வரும் வீதிகள், கோவில்கள் என முக்கிய இடங்களில் சுமார் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

Tags:    

Similar News