வழிபாடு

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் 270 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம்

Published On 2025-06-02 09:49 IST   |   Update On 2025-06-02 09:49:00 IST
  • பத்மநாப சுவாமி கோவில் வளாகம் பல நூற்றாண்டுகளுக்கு பிறகு சீரமைக்கப்பட்டுள்ளது.
  • கும்பாபிஷேகத்துக்கு முந்தைய பாரம்பரிய சடங்குகள் வரும் நாட்களில் நடைபெறும்.

கேரள மாநிலத்தில் பிரசித்திபெற்ற கோவில்களில் ஒன்று திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோவில். விஷ்ணுவுக்குரிய 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள்.

இந்த கோவிலின் புனரமைப்பு பணிகள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்தநிலையில் பத்மநாப சுவாமி கோவிலில் 270 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. இது குறித்து பத்ம நாபசுவாமி கோவிலின் மேலாளர் ஸ்ரீகுமார் கூறியிருப்பதாவது:-

கடந்த 2017-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு நியமித்த நிபுணர் குழுவின் அறிவுறுத்தலின்படி கோவிலின் புனரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டன. கொரோனா தொற்று பரவல் காரணமாக முடங்கிய புனரமைப்பு பணிகள், கடந்த 2021-ம் ஆண்டு முதல் மீண்டும் தொடங்கி நடந்து வந்த நிலையில், தற்போது நிறைவு பெற்றிருக்கிறது.

இதனால் பத்மநாபசுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் வருகிற 8-ந்தேதி நடத்தப்படுகிறது. மூலவர் சன்னதியின் மேல் உள்ள கோபுரத்தில் மூன்று புதிய கலசங்கள், சன்னதியின் முன்புள்ள ஒற்றைக்கல் மண்டபத்தின் மேல் கோபுரத்தில் இருக்கும் கலசம் என 4 கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

புதிய விஷ்வக்சேனன் சிலை பிரதிஷ்டை, கோவில் வளாகத்தில் அமைந்துள்ள திருவம்பாடி ஸ்ரீகிருஷ்ணர் சன்னிதியில் அஷ்டபந்த கலசம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் கும்பாபிஷேக நாளில் நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்துக்கு முந்தைய பாரம்பரிய சடங்குகள் வரும் நாட்களில் நடைபெறும்.

பத்மநாப சுவாமி கோவில் வளாகம் பல நூற்றாண்டுகளுக்கு பிறகு சீரமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் உலகெங்கிலும் உள்ள பத்மநாபசுவாமி பக்தர்களுக்கு கும்பாபிஷேக சடங்குகளை காணும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. கோவிலின் மரபுகளை பின்பற்றி புனித நிகழ்ச்சிகள் நடைபெறுவதை உறுதி செய்ய கோவில் நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News