வழிபாடு

மலை மாதா ஆலயத்தில் உள்ள சிலுவையை தொட்டு பிரார்த்தனை செய்யும் பெண்கள்.

பாந்திரா மலை மாதா ஆலய திருவிழா தொடங்கியது

Published On 2022-09-12 08:12 GMT   |   Update On 2022-09-12 08:12 GMT
  • திருவிழா வருகிற 18-ந்தேதி வரை நடக்கிறது.
  • தினந்தோறும் காலையில் திருவிழா சிறப்பு திருப்பலி நடக்கிறது.

மும்பை பாந்திராவில் பிரசித்தி பெற்ற மலை மாதா ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் நடைபெறும் திருவிழாவுக்கு அதிகளவில் பக்தர்கள் வருவார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மலை மாதா ஆலய திருவிழா நடைபெறவில்லை. இந்தநிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று மலை மாதா ஆலய திருவிழா தொடங்கியது.

இதில் காலை 11.30 மணிக்கு திருவிழா திருப்பலி நடந்தது. திருவிழா வருகிற 18-ந் தேதி வரை நடக்கிறது. திருவிழாவையொட்டி தினந்தோறும் சிறப்பு, காலை 11.30 மணிக்கு திருவிழா திருப்பலி நடக்கிறது.

இதில் இன்று (திங்கள்) முதியவர்கள், நோயாளிகளுக்காக சிறப்பு திருப்பலி நடக்கிறது. இதேபோல நாளை கொங்கனியிலும், 14-ந் தேதி (புதன்கிழமை) மராத்தியிலும், 15-ந் தேதி (வியாழன்) தமிழிலும், 16-ந் தேதி (வெள்ளி) மலையாளத்திலும், 17-ல் குஜராத்தியிலும் திருவிழா திருப்பலி நடக்கிறது. 18-ந் தேதி அதிகாலை 5.30 மணி முதல் திருப்பலி நடக்கிறது.

மலை மாதா ஆலய திருவிழாவில் தமிழர்கள் அதிகளவில் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் வசதிக்காக பெஸ்ட் சார்பில் 260 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இந்த பஸ்கள் பாந்திரா ரெயில் நிலையம், மாகிம் சர்ச், மலை மாதா ஆலயம் இடையே இயக்கப்பட உள்ளன. மேலும் மலை மாதா ஆலய பகுதியில் போக்குவரத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும் அசாம்பாவிதங்களை தடுக்க பயங்கரவாத தடுப்பு பிரிவினர் உள்பட 400 போலீசார் ஆலயத்தை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குற்றச்சம்பவங்களை தடுக்க போலீசார் சாதாரண உடைகளிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News