வழிபாடு

கோனியம்மன் கோவிலில் தம்பதி சமேதராக அருள்பாலிக்கும் நவக்கிரகங்கள்

Published On 2023-07-20 08:37 GMT   |   Update On 2023-07-20 08:37 GMT
  • அனைத்து கோவில்களிலும் நவக்கிரகங்கள் சன்னதி தனியாக இருக்கும்.
  • திருமண தோஷம் உள்ளவர்களும் இந்த நவக்கிரகங்களை வலம் வந்து பலன் பெறுகிறார்கள்.

சிவன், பெருமாள், முருகன் என அனைத்து கோவில்களிலும் நவக்கிரகங்கள் சன்னதி தனியாக இருக்கும். கிரக தோஷம் நீங்க பக்தர்கள் நவக்கிரகங்களை வலம் வந்து விளக்கேற்றி வழிபடுவர். இதேபோல கோவை நகரில் ஆட்சி புரியும் கோனியம்மன் கோவிலிலும் நவக்கிரக சன்னதி உள்ளது. மற்ற கோவில்களில் நவக்கிரக சுவாமிகளும் தனித்தனியாக அமர்ந்து அருள்பாலிப்பார்கள். ஆனால் கோனியம்மன் கோவிலில் நவக்கிரக சுவாமிகள் தம்பதி சமேதராக அமர்ந்து அருள்பாலிப்பது விசேஷமானது ஆகும்.

கிருத்திகா ரோகினி உடனமர் சந்திரபகவான், சுகீர்த்தி உடனமர் சுக்கிர பகவான், ஞானதேவி உடனமர் புதன் பகவான், சித்திரலேகா உடனமர் கேதுபகவான், சக்திதேவி உடனமர் செவ்வாய் பகவான், ஹிம்ஷிகா தேவி உடனமர் ராகுபகவான், சனி நீலாதேவி உடனமர் சனீஷ்வரபகவான், உஷா பிரத்யுஷா உடனமர் சூரியபகவான், தாராதேவி உடனமர் குருபகவான் என சுவாமி சிலைகள் உள்ளன.

இங்கு நவக்கிரகங்கள் மகிழ்ச்சியான நிலையில் அருள்பாலிப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு மகிழ்ச்சி நிலையில் இருக்கும் சுவாமிகளை வழிபட்டால் நாம் நினைத்து வழிபட்டது நடக்கும், சனி தோஷம், சுக்ர தோஷம் என அனைத்துவிதமான தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். திருமண தோஷம் உள்ளவர்களும் இந்த நவக்கிரகங்களை வலம் வந்து பலன் பெறுகிறார்கள்.

வியாழன், சனிக்கிழமைகளில் இங்கு பக்தர்கள் எள் தீபம் ஏற்றி வழிபடுவர். நவக்கிரக சன்னதி களில் வழக்கமாக சூரியபகவான் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து அருள் வழங்குவார்கள். இங்குள்ள சன்னதியில் மேற்கு நோக்கி உள்ளார். கோனியம்மன் வடக்கு நோக்கிய நிலையில் அருள்பாலிப்பதால் ஆகமவிதிப்படி சூரியபகவான் மேற்கு நோக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News