வழிபாடு

கட்டளை மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள்

Published On 2022-06-25 03:44 GMT   |   Update On 2022-06-25 03:44 GMT
  • இந்தக் கோவிலில் செவ்வாய், வியாழன், ஞாயிறு, அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
  • மலைவாழ் மக்கள் காலங்காலமாக இந்த கோவிலில் பூஜைகளை செய்து வருகின்றனர்.

உடுமலை அடுத்த ஆனைமலை காப்பகம் உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் சின்னாற்றின் கரையில் பிரசித்தி பெற்ற கட்டளை மாரியம்மன் கோவில் உள்ளது.இங்கு மாரியம்மன் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.இந்தக் கோவிலில் செவ்வாய், வியாழன், ஞாயிறு மற்றும் அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

கோடந்தூர் மலைவாழ் குடியிருப்பைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் காலங்காலமாக கோவிலில் பூஜைகளை செய்து வருகின்றனர். கோவிலுக்கு உடுமலை பகுதியில் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் கேரளா மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு வந்து செல்கின்றனர்.

அந்த வகையில் நேற்று வெள்ளிக்கிழமையை யொட்டி பக்தர்கள் அதிகளவில் கோவிலுக்கு வருகை தந்திருந்தனர். பின்னர் அவர்கள் கோடந்தூர் சுற்றுச்சூழல்குழு மற்றும் வனத்துறை இணைந்து செயல்படுத்தி வரும் வாகனங்களில் ஏறிச்சென்று கோவிலை அடைந்தனர்.அதைத் தொடர்ந்து ஆற்றுக்கு சென்று குளித்துவிட்டு வந்து மாரியம்மனை சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் மலைவாழ் மக்கள் வனப்பகுதியில் இயற்கையாக விளைந்த நெல்லிக்காய், கடுக்காய், ஜாதிக்காய், சாம்பிராணி, வடுமாங்காய், எலுமிச்சை மற்றும் தேன், தைலம் உள்ளிட்ட பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

இயற்கையில் விளைந்த பொருட்கள் என்பதால் அவற்றை பொதுமக்களும் ஆர்வத்தோடு வாங்கி சென்றனர்.கோடை காலத்தில் வருமானத்தை இழந்து தவித்து வருகின்ற மலைவாழ் மக்களுக்கு இந்த பொருட்கள் கைகொடுத்து உதவுகிறது. இதனால் மலைவாழ் மக்களுக்கு ஒரளவுக்கு வருமானம் கிடைத்து வருகிறது. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தால் விவசாய பணிகளில் ஈடுபடுவதற்கும் மலைவாழ் மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

Tags:    

Similar News