ஈசனால் 'அம்மையே' என்று அழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையார்
- கணவரை காணாது துவண்டுபோன புனிதவதிக்கு, பரமதத்தர் பாண்டிய நாட்டில் இருக்கும் செய்தி கிடைத்தது.
- பேய் உருவத்துடன் சிவபெருமானைக் காண, கயிலாய மலைக்கு பயணமானார் புனிதவதி.
காரை வனம் என்று அழைக்கப்பட்ட காரைக்கால் பகுதியில் பெரும் வணிகராக இருந்தவர், தனதத்தன். இவரது மகள் புனிதவதி. இவர் தன்னுடைய சிறுவயதில் இருந்தே சிவபெருமான் மீது அதீத பக்தி கொண்டவராக இருந்தார். பருவ வயதை எட்டியதும் புனிதவதியை, நாகப்பட்டினத்தில் வசித்த பரமதத்தர் என்ற வணிகருக்கு மணம் முடித்துக் கொடுத்தனர்.
ஒரு சமயம் பரமதத்தன் தனது கடையில் இருந்தபோது, மாங்கனி வியாபாரி ஒருவர் அங்கு வந்தார். அவர் தனது வீட்டுத் தோட்டத்தில் காய்த்த 2 மாங்கனிகளை பரமத்தத்தரிடம் கொடுத்தார். அந்த கனிகளை, வேலையாள் மூலமாக தனது வீட்டிற்கு கொடுத்தனுப்பினார் பரமதத்தர்.
இந்தநிலையில் புனிதவதியின் சிவபக்தியை உலகிற்கு உணர்த்த விரும்பிய சிவபெருமான், ஒரு அடியார் வேடத்தில் புனிதவதியின் வீட்டின் முன்பு வந்து நின்றார். வீட்டின் முன்பு யாசகம் கேட்டு நின்ற அடியாரை வரவேற்ற புனிதவதி, வீட்டின் திண்ணையில் அவரை அமரவைத்து, தயிர் கலந்த அன்னம் படைத்தார். அதோடு கணவர் கொடுத்து அனுப்பிய மாங்கனிகளில் ஒன்றையும் சிவனடியாருக்கு சாப்பிடத் தந்தார். இதையடுத்து உணவருந்திய மகிழ்ச்சியில் சிவனடியார் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
சிவனடியார் சென்ற சிறிது நேரத்தில் வழக்கம் போல, மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்தார் பரமதத்தர். அவருக்கு பல வகை உணவுகளை சமைத்து பரிமாறினார் புனிதவதி. அதோடு மீதம் இருந்த மாங்கனி ஒன்றையும் இலையில் வைத்தார். மாங்கனியின் சுவை நன்றாக இருக்கவே, தான் கொடுத்து அனுப்பியதில் மீதம் இருக்கும் மற்றொரு மாங்கனியையும் எடுத்துவரும்படி பரமதத்தர் கூறினார்.
கணவர் அப்படிக் கேட்டதும் பதறிப்போனர், புனிதவதி. 'கொடுத்தனுப்பிய மாங்கனிகளில் ஒன்றை அடியாருக்கு சமர்ப்பித்து விட்டேன் என்று கூறினால் கணவர் கோபித்துக் கொள்வாரோ' என்று கருதிய புனிதவதி, என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தார். பின்னர் நேரடியாக பூஜை அறைக்குச் சென்று சிவபெருமானை மனமுருக வேண்டினார். அப்போது புனிதவதியின் கையில் ஒரு மாங்கனி வந்தது. மகிழ்ச்சி அடைந்த புனிதவதி, அதை எடுத்துச் சென்று கணவருக்குக் கொடுத்து உபசரித்தார்.
ஆனால் முந்தைய கனியை விட, இந்த மாங்கனி இன்னும் அதிக சுவையுடன் இருந்ததால் பரமதத்தர் சந்தேகம் கொண்டார். 'ஒரே மரத்தில் விளைந்த இரு மாங்கனிகளின் சுவை மாறுபடுமா?' என்று நினைத்தவர், தன் மனைவியிடம் உண்மையை கூறும்படி கேட்டார். புனிதவதி, நடந்த விஷயங்களை கணவரிடம் கூறினார். ஆனால் அதை நம்ப பரமதத்தர் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. "சிவபெருமான் உனக்கு கனி தந்தது உண்மையானால், மீண்டும் ஒரு கனியை இங்கேயே வரவழைத்து காட்டு" என்று மனைவியை நிர்ப்பந்தித்தார். புனிதவதி மீண்டும் சிவபெருமானை வணங்க, மீண்டும் ஒரு மாங்கனி அவரது கையில் வந்து, சிறிது நேரத்தில் மறைந்தது.
இறைவனின் இந்த திருவிளையாடலை கண்டு வியந்துபோன பரமதத்தர், "நீ.. மனிதப் பிறவி அல்ல. தெய்வப் பெண். உன்னுடன் நான் இனி வாழ்வது சரியல்ல" என்று கூறி, புனிதவதியைப் பிரிந்து, பாண்டியநாடு சென்று அங்கு வணிகம் செய்தார். சில காலத்தில் அங்கேயே ஒரு பெண்ணை மணந்து வாழ்ந்தார். அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு பரமதத்தர், தன்னுடைய முதல் மனைவியான புனிதவதியின் பெயரைச் சூட்டினார்.
இதற்கிடையே கணவரை காணாது துவண்டுபோன புனிதவதிக்கு, பரமதத்தர் பாண்டிய நாட்டில் இருக்கும் செய்தி கிடைத்தது. உடனடியாக அங்கு புறப்பட்ட புனிதவதி, பரமதத்தனின் இல்லத்தைச் சென்றடைந்தார். தன்னைத் தேடி வந்த புனிதவதியின் காலில் விழுந்து வணங்கிய பரமதத்தர், அதேபோல் தனது மனைவி, மகளையும் விழச்செய்தார்.
கணவர் தன் காலில் விழுந்ததை ஏற்க முடியாத புனிதவதி, தனது அழகுமேனியை அழித்து பேய் வடிவத்தை வழங்குமாறு இறைவனிடம் வேண்டினார். இறைவனும் அப்படியே ஆசி வழங்கினார். பேய் உருவத்துடன் சிவபெருமானைக் காண, கயிலாய மலைக்கு பயணமானார் புனிதவதி.
கயிலாயம் புனிதமான இடம் என்பதால், காலை ஊன்றி நடக்காமல், தலையால் நடந்து சென்றார். இதைப் பார்த்த சிவபெருமான், "அம்மையே வருக.. அமர்க.." என்று அழைத்தார். மேலும் "உனக்கான வரத்தைக் கேள்" என்றார்.
அதற்கு புனிதவதி அம்மை, "இறைவா.. பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்பிருந்தால் உனையென்றும் மறவாமை வேண்டும், எப்போதும் நீ ஆடும்போது உன் காலடியின் கீழ் நான் இருக்க வேண்டும்" என்று வரம் கேட்டார். அவ்வாறே அருளிய இறைவன், அவருக்கு தன் திருத்தாண்டவம் காட்டினார். சிவபெருமானே 'அம்மையே' என்று அழைத்ததாலும், புனிதவதி பிறந்த ஊர் காரைக்கால் என்பதாலும், அவர் 'காரைக்கால் அம்மையார்' என்று பெயர் பெற்றார். காரைக்கால் அம்மையாரை திருவாலங்காடு திருத்தலத்திற்கு வரச்செய்து, அங்கு தன்னுடைய திருவடியின் கீழ் என்றும் இருக்க அருள்புரிந்தார், சிவபெருமான்.