வழிபாடு
null

திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆலயத்தில் நாளை கலிய நாயனார் குருபூஜை

Published On 2022-08-07 07:33 GMT   |   Update On 2022-08-07 07:34 GMT
  • கலிய நாயனார் கதையை அறிந்து கொள்ளலாம்.
  • ஆடி மாதம் கேட்டை நட்சத்திர தினத்தன்று அவரது குருபூஜை நடத்தப்படுகிறது.

63 நாயன்மார்களில் கலிய நாயனாரும் ஒருவர். இவர் சென்னை திருவொற்றியூரில் பிரபலமான எண்ணெய் வணிகர் குடும்பத்தில் பிறந்தவர். சிறு வயதில் இருந்தே சிவபெருமான் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். திருவொற்றியூர் வடிவுடையம்மன் சமேத தியாகராஜ சுவாமி கோவிலில் தினமும் விளக்கேற்றி தொண்டு செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். ஒருநாள் கூட தவறாமல் இவர் சிவனுக்கு விளக்கேற்றி வந்தார்.

இவரது பக்தியை பரிசோதிக்க சிவபெருமான் முடிவு செய்தார். அதன்படி கலிய நாயனாரின் செல்வங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்தது. துன்பங்களும், வறுமையும் அவரை வாட்டி வதைத்தன. என்றாலும், கலிய நாயனார் திருவொற்றியூர் ஆலயத்தில் தினமும் விளக் கேற்றி வழிபட தவறவில்லை. பணம் எல்லாம் கைநழுவி சென்றதால் கூலி வேலைக்கு சென்று பிழைத்து வந்தார். கூலி வேலையில் கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியை விளக்கேற்ற செலவழித்தார்.

சொந்த வீடு, நிலம் அத்தனையையும் விற்று அவர் திருவொற்றியூர் ஆலயத்தில் விளக்கேற்றும் கடமையை செய்தார். ஒரு கட்டத்தில் அவரிடம் ஒரு பைசாகூட இல்லாத நிலை உருவானது. விளக்கேற்ற எண்ணெய் வாங்க பணம் இல்லாததால் மிகவும் வருந்தினார். திருவொற்றியூர் ஆலயத்துக்குள் சென்று தனது உடலை வெட்டி ரத்தத்தை எடுத்து அதில் விளக்கேற்ற முடிவு செய்தார். வாளை ஓங்கிய அவர் தன்னை வெட்டிக்கொள்ள தயாரானார். அப்போது சிவபெருமான் அவரது பக்தியை மெச்சி அவரை தடுத்து நிறுத்தி ஆட்கொண்டார்.

அன்று முதல் அவரது சிறப்பு அனைவராலும் பேசப்பட்டது. சிவபெருமானின் காட்சியை நேரில் தரிசித்த அவருக்கு திருவொற்றியூர் ஆலயத்தில் உள் பிரகாரத்தில் ஒரு பகுதியில் நினைவு குறிப்புகள் உள்ளன. அங்கு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் கேட்டை நட்சத்திர தினத்தன்று அவரது குருபூஜை நடத்தப்படுகிறது. நாளை (திங்கட்கிழமை) இந்த குருபூஜை நடத்தப்பட உள்ளது.

Tags:    

Similar News