வழிபாடு

ஜோதிர்லிங்க சிவதரிசனம்

Published On 2023-02-01 08:26 GMT   |   Update On 2023-02-01 08:26 GMT
  • இந்தியாவில் 12 ஜோதிர் லிங்க திருத்தலங்கள் உள்ளன
  • திருவாதிரை ஜோதிர் லிங்கத்தை வணங்குவதற்கு சிறந்த நாளாகும்.

ஜோதிர்லிங்கம் என்பது இந்துக் கடவுளான சிவனை வணங்குவதற்குரிய வடிவங்களும் ஒன்று. இது ஒளிமயமான லிங்கம் என்னும் பொருள் தருகிறது.

இந்தியாவில் 12 ஜோதிர் லிங்க திருத்தலங்கள் உள்ளன. திருவாதிரை நட்சத்திர நாளில் சிவன் தன்னை ஜோதிர்லிங்க வடிவில் வெளிப்படுத்தியதாக பக்தர்கள் நம்புகின்றனர். இதனால் திருவாதிரை நாள் ஜோதிர் லிங்கத்தை வணங்குவதற்கு உரிய சிறப்பு நாளாகக் கருதப்படுகிறது. பொதுவாக ஜோதிர் லிங்கத்திற்குக்கும் பிற லிங்கங்களுக்கும் இடையே எவ்வித தோற்ற வேறுபாடுகளும் தெரிவதில்லை. எனினும் உயர்ந்த ஆன்மிக நிலையை அடைந்தவர்கள் பூமியைத் துளைத்துக் கிளம்பும் தீப்பிழம்பாக ஜோதிர் லிங்கத்தை காண்பார்கள் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

அவ்வாறு ஒளியாக விளங்கும் பரம்பொருளை தியானிப்பது அல்லது பூஜை செய்து வணங்குவது என்பது மனிதர் களுக்கு கடினமாக இருந்தது. ஆகவே அந்த ஒளியை எளிதாக வழிபட லிங்க உருவத்தை கண்டு அதை பல்வேறு கோணங்களில் உலகின் பல பாகங்களிலும் பல மதத்தினரும் வணங்கி வந்துள்ளனர் என்பது சரித்திர ஆய்வாளர்களின் முடிவு. அந்த சிவலிங்க உருவம் தொண்று தொட்டு பாரதத்தின் 12 முக்கிய திருத்தலங்களில் பிரசித்தமாய் பல்வேறு பெயர்களில் வணங்கப்பட்டு வருகிறது.

ஜோதிர்லிங்க வழிபாடானது துவாபரயுக ஆரம்பத்தில் விக்ரமாதித்த மன்னரால் முதன் முதலில் ஆரம்பித்து வைக்கப்பட்டதாக கருதப்படுகிறது. சிவனை ஜோதி உருவாய்த் திகழ்பவரை மனதார எண்ணி, புத்தியின் மூலமாய்தியானம் செய்வது அவருடைய வழிபாட்டின் உன்னத நிலையாகும். இவ்வாறு நம் மனதையும் புத்தியையும் ஒருமுகப்படுத்தும் முறையே ராஜயோக தியானம் எனப்படுகிறது.

மனித ஆத்மாக்கள் அனைவருக் கும் மேலான அவர் நிகரானவர் (மனித உருவ மற்றவர்) ஜோதி சொரூபமாய் விளங்குபவர் இந்த உலக சிருஷ்டியின் கர்த்தர் அவரே! அவரை அன்புடன் நினைத்து தியானம் செய்வதன் மூலமே நமது பாவச்சுமைகள் அழிந்து அமைதியும் அன்பும் ஆனந்தமும் பொங்கி வழியும். புதிய உலகமான சொர்க்கம் இப்புவியில் படைக்கப்படும்.

அதுவே இறைவனின் படைப்பில் முதல் யுகமாகும். அதைத் தொடர்ந்து திரேதா, துவாபர, கலியுகம் என்று காலச்சக்கரம் சுழன்று கொண்டேயிருக்கும். தற்போது நாம் கலியுகம் என்னும் இருண்ட துக்கம் நிறைந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பலரால் மறந்து போய் விடப்பட்டிருக்கும் இம்மாபெரும் உண்மையை எளிய முறையில் இன்றைய தலைமுறையினரும் புரிந்து கொண்டு வழிபாடு மற்றும் தியானம் செய்ய வேண்டும்.

Tags:    

Similar News