வழிபாடு

கமண்டல நதி கணபதி திருக்கோவில்

Published On 2025-06-15 14:13 IST   |   Update On 2025-06-15 14:13:00 IST
  • வேத காலத்தில் உலகம் முழுவதுமே கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்தது.
  • சுனை நீரைக் கொண்டு இங்கிருக்கும் தெய்வ விக்கிரகங்கள் அனைத்திற்கும் அபிஷேகம் செய்யப்படுகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ஊரில் ஒன்று, சிருங்கேரி. இங்கு ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட, சைவ மத பீடம் இருக்கிறது. இந்த ஊரின் அருகில் 'கேசவே' என்ற திருத்தலம் அமைந்துள்ளது. இங்கு 'கமண்டல நதி கணபதி திருக்கோவில்' இருக்கிறது. உயிர்கள் அனைத்துக்கும் ஆதாரமாக, அவசியமாக இருக்கும் ஒரே பொருள், நீர். அந்த நீர் தொடர்ந்து சுரந்து கொண்டே இருக்கும் ஆலயமாக இந்த கமண்டல கணபதி கோவில் திகழ்கிறது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தில், விநாயகர் விக்கிரகத்தின் முன்பாக உள்ள ஒரு சிறிய துளையில் இருந்து தண்ணீர் பொங்கி வந்தபடியே இருக்கிறது.

வேத காலத்தில் உலகம் முழுவதுமே கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்தது. அப்போது தாகத்தை தணிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் அனைத்து உயிர்களும் பரிதவித்தன. அப்போது அன்னை உமாதேவி இந்த கோவிலில் வீற்றிருக்கும் தன் மூத்த மைந்தனான கமண்டல கணபதி விக்ரகத்திற்கு அடியில், வற்றாத தண்ணீர் சுனையை ஏற்படுத்தி உலக உயிர்களின் தாகத்தை தீர்த்ததாக தல வரலாறு கூறுகிறது.

சில நேரங்களில் பொங்கியும், சில நேரங்களில் சாதாரண அளவிலும் இந்த துளையிலிருந்து நீர் வந்து கொண்டே இருக்கிறது. இந்த சுனை நீரைக் கொண்டு இங்கிருக்கும் தெய்வ விக்கிரகங்கள் அனைத்திற்கும் அபிஷேகம் செய்யப்படுகிறது. இதனை புனித தீர்த்தமாக கருதி பக்தர்கள் குடுவைகளில் பிடித்துச்செல்கின்றனர். விநாயகரின் முன்பாக உற்பத்தியாகும் புனித நீர், அங்கிருந்து 14 கிலோமீட்டர் தூரம் ஓடி, சற்று தொலைவில் பாயும் துங்கா நதியில் கலக்கிறது.

Tags:    

Similar News